தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Raangi Tamil Movie Review Starring Trisha And Allim

Raangi Movie Review: த்ரிஷாவை தாங்கியதா ராங்கி? ‘நச்’ திரை விமர்சனம் இதோ!

Stalin Navaneethakrishnan HT Tamil
Dec 30, 2022 10:06 AM IST

Raangi Tamil Movie Review: தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும், நிறைய அரசியலையும் பேசியிருக்கிறது ராங்கி. ஒரு கனமான கதையை கதாநாயகி மேல் தூக்கி வைத்து, அதை சரியான இடத்தில் இறக்கி வைத்துள்ளார் இயக்குனர் சரவணன்

ராங்கி படத்தின் போஸ்டர்
ராங்கி படத்தின் போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

ராங்கி என்றால், குஷி படத்தில் விஜயகுமார் சொல்வாரே, ‘அகம்பிடித்த கழுதை, திமிர் பிடிச்சது’ என்றெல்லாம்; அப்படியான பொருள், அதற்கும் உண்டு. ஆனால், இங்கு ராங்கி என்பதை துணிவுக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள்.

துணிவான ஜார்னலிஸ்ட் ஆக த்ரிஷா. பத்திரிக்கையாளர் என்றால், கிசுகிசு எழுதுவது அல்ல என்கிற உறுதியோடு நடைபோடும் பத்திரிக்கையாளர். வெளிநாட்டு தீவிரவாதி ஒருவருடன் பெண் ஒருவர் சாட் செய்கிறார். அவன் தீவிரவாதி என அந்த பெண்ணுக்கு தெரியாது. அந்த பெண் பயன்படுத்தும் டிபி போட்டோ, த்ரிஷாவின் அண்ணன் மகளின் போட்டோ.

போலி போட்டோவை வைத்து நடக்கும் இந்த சாட் பற்றி, ஒரு கட்டத்தில் த்ரிஷாவுக்கு தெரியவர, அவரும் அந்த 17 வயது பையனுடன் சாட் செய்கிறார். அவன் மீது ஒரு விதமான ஈர்ப்பு த்ரிஷாவுக்கு வருகிறது. அவன் யார் என அறிய முற்படும் போது, இந்தியாவில் இருந்து அந்த நாட்டுக்குச் சென்ற அமைச்சர் ஒருவர், அங்கு எண்ணெய் டீல் ஒன்று செய்கிறார். அவருடன் எடுத்த போட்டோவை அந்த இளைஞர் பகிர்கிறார்.

அதைப்பார்த்த த்ரிஷா, தான் பணியாற்றும் ஊடகத்தில் அதை ப்ரேக்கிங் செய்தியாக்குகிறார். அதனால் பிரச்னை ஏற்படுகிறது. சம்மந்தப்பட்ட அமைச்சரும் கொல்லப்படுகிறார். த்ரிஷாவுக்கு அந்த போட்டோ எப்படி கிடைத்தது? என விசாரணையில் இறங்குகிறது போலீஸ். த்ரிஷாவையும், அவரது அண்ணன் மகளையும் அழைத்துக் கொண்டு, தீவிரவாதியை தேடி அந்த நாட்டுக்குச் செல்கிறது போலீஸ். அதன் பின் தீவிரவாதி பிடிக்கப்பட்டானா? த்ரிஷாவின் நிலை என்ன ஆனது? என்பதை அடுத்தடுத்து சஸ்பென்ஸ் குறையாமல் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் சரவணன்.

சத்யாவின் பின்னணி இசை, ராங்கியை ஏங்கி பார்க்க வைக்கிறது. கே.ஏ.சக்திவேலின் ஒளிப்பதிவும், த்ரிஷாவை மீண்டும் மீண்டும் ரசிக்க வைக்கிறது. இயக்குனர் முருகதாஸ் கதைக்கு சிறந்த திரைக்கதையை எழுதி, அருமையான வசனங்களையும் தந்துள்ளார் சரவணன். ‘எங்கள் நாட்டில் வளம் இருந்ததால் நாங்கள் கொல்லப்பட்டோம், உங்கள் நாட்டிலும் வளம் இருக்கிறது’ என , உயிர் விடும் நேரத்தில் எச்சரிக்கும் தீவிரவாதி.

‘நாங்கள் தீவிரவாதி இல்லை, தீவிரமாக போராடுவதால் எங்களுக்கு இந்த பெயர்’ போன்ற கனமான வசனங்களை அடித்து நிமிர்த்தியிருக்கிறார் இயக்குனர். 17 வயது இளைஞனை த்ரிஷா காதலிக்கிறாரா? இல்லை, அவன் மீது ஈர்ப்பா? என்கிற அளவிற்கு, அவரது சாட் பரிவர்த்தனைகள் ரம்யமாக போகிறது.

த்ரிஷா மற்றும் ஆலிம் ஆகிய இருவரும் தான் படத்தை தோளில் சுமக்கின்றனர். தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும், நிறைய அரசியலையும் பேசியிருக்கிறது ராங்கி. ஒரு கனமான கதையை கதாநாயகி மேல் தூக்கி வைத்து, அதை சரியான இடத்தில் இறக்கி வைத்துள்ளார் இயக்குனர் சரவணன்.

பரபரப்பான படத்தை பார்க்க விரும்பினால் ராங்கிக்கு போகலாம்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்