Suresh Kamatchi: ‘பாலா வச்சு படம் எடுத்தா நடுரோட்டுக்குதான்.. எனக்கு அப்படி கோபம் வந்துச்சு’ -சுரேஷ் காமாட்சி!
Suresh Kamatchi: நீங்களே வந்து பஞ்சாயத்தை தீர்த்து வைத்து விடுங்கள் என்று கூட எனக்கு சொல்லத் தோன்றுகிறது. எதற்காக அப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்பது எனக்கு சுத்தமாக தெரியவில்லை.- சுரேஷ் காமாட்சி!

வணங்கான் படம் குறித்தான சர்ச்சை குறித்து, அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நாற்கர போர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசினார்.
என்ன பஞ்சாயத்து?
அவர் பேசும் போது, "வணங்கான் திரைப்படம் குறித்து தவறான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. எனக்கும்=பாலா அண்ணனுக்கும் பணத்தினால் பிரச்சினை என்று தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. ஆனால்உண்மையில் என்ன பஞ்சாயத்து என்பது குறித்து எனக்கே தெரியவில்லை.
நீங்களே வந்து பஞ்சாயத்தை தீர்த்து வைத்து விடுங்கள் என்று கூட எனக்கு சொல்லத் தோன்றுகிறது. எதற்காக அப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்பது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. அப்படி எழுதிய வார இதழ் ஒன்று என்னுடைய நேர்காணலுக்காக எனது அலுவலகத்திற்கு வந்திருந்தார்கள். அவர்கள் படம் குறித்து கேட்ட கேள்விகள் அனைத்தும், எனக்கு அவ்வளவு கோபத்தை உண்டாக்கியது. என்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளர், வரும் பொழுது கையில் ஒரு பேப்பர் வைத்திருந்தார்.
கேட்ட கேள்விகள் அனைத்துமே தரம் இல்லாதவையாக இருந்தன.
அந்த பேப்பரில் கிட்டத்தட்ட 15 கேள்விகள் இருந்தன. அலுவலகத்தில் இருந்தே அவர் தன்னை தயார் செய்து அங்கு வந்திருந்தார். அவர் கேட்ட கேள்விகள் அனைத்துமே தரம் இல்லாதவையாக இருந்தன. கடைசியாக ஒரு கேள்வி கேட்டார். அந்த கேள்வி எப்படி இருந்தது என்றால், இயக்குநர் பாலாவை வைத்து படம் எடுத்த அவ்வளவு பெரும் ரோட்டிற்கு வந்து விட்டார்கள் நீங்கள் எப்போது ரோட்டிற்கு வரப் போகிறீர்கள் என்று கேட்டார்.
உச்சக்கட்டத்திற்கு சென்ற கோபம்
அதைக்கேட்டவுடன் எனக்கு கோபம் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டது. என்னிடம் அவர் கேட்டது போல, அவரிடம் உங்களைப் போன்ற பத்திரிகையாளர்களை எல்லாம் வேலைக்கு வைத்திருக்கிறாரே, உங்களுடைய எடிட்டர் அவர் எப்போது ரோட்டிற்கு வருவார் என்று நான் திருப்பி கேட்டால் நன்றாக இருக்குமா என்ன?
நான் இங்கு அமர்ந்திருந்த பொழுது என்னுடைய மனதில் முழுவதும் அதுதான் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருந்தது. கோடிக்கணக்கில் பணம் போட்டு ஒரு படத்தை எடுக்கிறோம் அப்படிப்பட்ட ஒரு தயாரிப்பாளரிடம் இப்படியான ஒரு தரம் இல்லாத கேள்வியை அவர் எப்படி வைக்கலாம் என்பது எனக்கு தெரியவில்லை.. ஆகையால் இனியாவது சம்பந்தப்பட்ட செய்தி நிறுவனம், உங்களுடைய செய்தியாளர்களுக்கு அனுபவம் மிகுந்த கேள்விகளை கேட்க அறிவுறுத்துங்கள்" என்று பேசினார்.
முன்னதாக, ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் ஸ்ரீ வெற்றி. ‘நாற்கரப்போர்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் நடிகர் லிங்கேஷ், நடிகை அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்து இருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அந்த படத்தில் நடித்தவரும், நடிகையுமான அபர்ணதியை கடுமையாக சாடினார்.
அவர் பேசும் போது, "இந்த படத்தின் தயாரிப்பாளர் வேலாயுதம் புதிய தயாரிப்பாளராக இருந்தபோதும் கூட, மிக தைரியமாக,நேர்த்தியாக இந்த படத்தை ரிலீஸ் வரை கொண்டு நிறுத்தி இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள். இந்தப் படத்தில் நடிகர் லிங்கேஷ், நடிகை அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அபர்ணதி மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆனால் இதில் வருத்தமான செய்தி என்னவென்றால் அபர்ணதி புரமோஷனுக்கு வரவில்லை. புரமோஷனுக்கு அவரை அழைத்த போது, நான் வரமாட்டேன். அதற்கு தனியாக காசு கொடுத்தால் மட்டுமே நான் வருவேன் என்று கூறினார்.
அது எங்களுக்கு மிகவும் புதிதாக இருந்தது. அதுமட்டுமல்ல அவர் புரமோஷனுக்கு வருவதற்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். அதை எல்லாம் இங்கு பேசினால் மிகப்பெரிய சர்ச்சையாக மாறிவிடும். மேடையில் அவர் யாருடன் உட்கார வேண்டும் என்பது வரை அதில் அடங்கியிருக்கிறது.
மேலும் அவர் புரமோஷனுக்கு வர வேண்டும் என்றால், மூன்று லட்சம் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். உடனே நாங்கள் மூன்று லட்சம் உங்களுக்கு கொடுப்பதற்கு அதில் நாங்கள் படத்திற்கான பப்ளிசிட்டியை செய்து விடுவோம் என்று கூறி போனை வைத்து விட்டோம்.
இதையடுத்து நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் குறித்து புகார் அளித்தோம். அவரிடமும் நீங்கள் நடிகர் சங்கத்தில் இது குறித்த புகார் அளியுங்கள். பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறினோம். இறுதியில் அவர் நடிகர் சங்க உறுப்பினரே இல்லை என்பது தெரிய வந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அவர் எங்களுக்கு கால் செய்தார். நான் தெரியாமல் பேசிவிட்டேன். நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது என்று கூறினார். மன்னிப்பு கேட்டதுடன் பிரமோஷனுக்கு வருவதாகவும் சொன்னார். இதையடுத்து நான் இதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்க வேண்டாம். இந்த படத்தில் கொஞ்சம் முகம் தெரிந்த நபராக நீங்கள் இருக்கிறீர்கள்.
நீங்கள் புரமோஷனுக்கு வரும் பட்சத்தில் படத்திற்கு உங்களால் கூடுதலாக பப்ளிசிட்டி கிடைக்கும் அதற்காகத்தான் கூறினேன் என்று சொன்னேன். இதையடுத்து அவர் வருகிறேன் என்று கூறினார் ஆனால் வரவில்லை. தயாரிப்பாளர் தரப்பு அவருக்கு கால் செய்த போது அவுட் ஆப் ஸ்டேஷனில் இருக்கிறார் என்று கூறி இருக்கிறார். அவர் அங்கேயே இருக்கட்டும் இப்படிப்பட்ட நடிகை எல்லாம் தமிழ் சினிமாவுக்கு தேவையே கிடையாது" என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்