Ponnurangam: ‘தோளில் கை போட்டதும் சம்பளம் கேட்டான்’ அஜித் பற்றி அமராவதி தயாரிப்பாளர் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Ponnurangam: ‘தோளில் கை போட்டதும் சம்பளம் கேட்டான்’ அஜித் பற்றி அமராவதி தயாரிப்பாளர் பேட்டி!

Ponnurangam: ‘தோளில் கை போட்டதும் சம்பளம் கேட்டான்’ அஜித் பற்றி அமராவதி தயாரிப்பாளர் பேட்டி!

Stalin Navaneethakrishnan HT Tamil
Published Apr 28, 2023 05:30 AM IST

PRODUCER CHOLA PONNURANGAM: அமராவதி முடிந்ததும் அஜித்திற்கு அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. சினிமாவில், எவன் அழிவான் என்று தான் பார்ப்பான். ஆனால், அதிலிருந்தும் மீண்டது அஜித் தான்

அமராவதி படத்தில் அஜித் மற்றும் தயாரிப்பாளர் பொன்னுரங்கம்
அமராவதி படத்தில் அஜித் மற்றும் தயாரிப்பாளர் பொன்னுரங்கம்

‘‘1992ல் தலைவாசல் முடித்ததும், இயக்குனர் செல்வாவுக்கு பெரிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அது கிடைக்கவில்லை. எனவே அவருக்காக அவசரமாக அடுத்த படம் எடுக்க நினைத்தேன். அது தான் அமராவதி. 

இயக்குனர் செல்வா ஒரு காதல் கதை சொன்னார். அந்த கதைக்கு புது முகங்களை வைத்து பண்ணலாம் என்று கூறினேன். ஒரு ஓட்டலில் டிபன் சாப்பிடும் போது தான் அந்த கதையை பேசினோம். உடனே ஆட்களை தேடி பிடித்தோம். அனைத்து கதாபாத்திரங்களையும் எடுத்துவிட்டோம். 

கதாநாயகனுக்கு முதலில் வேறு ஒருவரை எடுத்துவிட்டோம். 45 நாள் ஊட்டியில் ஷூட் என கிளம்பிட்டாங்க. ஒரே வாரத்தில் அந்த ஹீரோ செட் ஆகவில்லை என்று வேறு ஒருவரை பரிந்துரை செய்தார்கள். பிரசாத் ஸ்டூடியோவில் ஒரு பாடல் பண்ணிட்டு இருந்தார் அஜித். அந்த தயாரிப்பாளரும் எனக்கு தெரிந்தவர் தான். ‘இந்த பையனையா சார்’ என்று அந்த தயாரிப்பாளரே எதிர்மறையான கருத்தை தான் முன்வைத்தார். 

நான் எதையும் பொருட்படுத்தாமல், அஜித்தை அழைத்து பேசினேன். ‘தமிழ் படத்தில் நடிக்கிறீயாப்பா?’ என்று கேட்டேன். ‘சார்.. தமிழ் படத்திற்காக தான் சார் நான் வந்தேன், எப்போ சார் ஷூட் போகலாம்’ என்று கேட்டார் அஜித். ‘நாளைக்கே போக வேண்டியிருக்கும்..’ என்று சொன்னேன். ‘ரொம்ப சந்தோசம் சார், இந்த பாடல் இன்று முடிந்து முடிந்துவிடும், நாளைக்கே போய்டலாம் சார்’ என்று அஜித் கூறினார். 

பேசி முடித்துவிட்டு தோளில் கை போட்டு இருவரும் அறையில் இருந்து வெளியே வரும் போது, ‘சார் எவ்வளவு சம்பளம் கொடுப்பீங்கள்’ என்று கேட்டான். ‘அடடா… நீ சூப்பரான ஆளு… எதிர்காலத்தில் பெரிய சூப்பர் ஸ்டாரா வருவ’ என்று அவரிடம் சொன்னேன். உழைப்புக்கேத்த ஊதியம் கேட்டதும் எனக்கு சந்தோசம் ஆகிவிட்டது. உடனே ஊட்டிக்கு அனுப்பிவிட்டேன். 

அஜித்-செல்வா எல்லாருக்கும் செட் ஆகிடுச்சு. சங்கவியும் புதுமுகம். இப்படி எல்லாமே ஒரு குடும்பமா 45 நாட்கள் ஷூட் முடித்து வந்தார்கள். ஷூட் எல்லாம் முடித்துவிட்டு வந்து விட்டார்கள், விசித்ரா வந்து என்னிடம் சண்டை போடுகிறார். தலைவாசலில் எனக்கு வாய்ப்பு கொடுத்துட்டு, அமராவதியில் கொடுக்கவில்லையே சார் என்று. 

சரி என்று அவருக்காக சென்னையில் ‘சொக்கு சுந்தரி..’ பாடலை அதன் பிறகு எடுத்து சேர்த்தோம். அஜித் என்பவர், முயற்சியோடு பெரிய விசயம் பண்ணுவார் என்று அன்றே எனக்கு தெரிந்தது. ஸ்கூல் பையன் மாதிரி தான் அப்போ இருந்தார். ஆனால், பிரின்சிபல் மாதிரி வருவார் என்று தெரிந்தது. நாங்கள் வாய்ப்பு கொடுத்திருக்கலாம், ஆனால் அதில் முயற்சி எடுத்து வளர்ந்தவர் அஜித். நாங்கள் அறிமுகப்படுத்திய எல்லாரும் உயர்ந்துவிடவில்லையே?

அஜித்தை உதாசினப்படுத்தியவர்கள் எண்ணிக்கை அவ்வளவு அதிகம். அதையெல்லாம் மீறி ஜெயித்திருக்கிறார். நீங்கள் தானே அறிமுகப்படுத்தினீர்கள், ஏன் உங்களுக்கு வாய்ப்பு தரவில்லை என்று நீங்கள் கேட்கலாம். நான் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம், அவரை தொந்தரவு பண்ண கூடாது. 

அவர் சந்தித்த இன்னல், இழப்புகள் நிறைய. அவருக்கு இங்கிருப்பவர்கள் எல்லாம் போட்டி கிடையாது. அவர் இன்னும் பெரிய விசயம் பண்ணுவார். பொதுவாகவே நான் புது ஆட்களை வைத்து தான் படம் பண்ணுவேன். படம் முடிந்த பிறகு தான் படத்தை பார்ப்பேன். இடையில் பார்ப்பதில்லை. அமராவதி படம் பார்த்து முடிந்ததுமே, இதிலிருந்து நான்கைந்து பேர் வெளியே வருவார்கள் என்று கணித்தேன். அது நடந்தது. 

அமராவதி ரிலீஸ் ஆன போது எங்களுக்கு போட்டியாக ஜென்டில்மேன். சங்கரின் பிரமாண்ட படம். அப்போது அஜித் புது முகம். தலைவாசலில் ஜெயித்த டீம் என்கிற பெயர் மட்டும் தான் இருந்தது. ஆனாலும் போட்டி போட்டோம். 

அமராவதி முடிந்ததும் அஜித்திற்கு அடுத்தடுத்து உடல்நிலை சரியில்லாமல் போனது. சினிமாவில், எவன் அழிவான் என்று தான் பார்ப்பான். ஆனால், அதிலிருந்தும் மீண்டது அஜித் தான்,’’
என்று அந்த பேட்டியில்  பொன்னுரங்கம் கூறியுள்ளார்.