'அல்லுவை தேவையில்லாமல் இழுக்குறாங்க.. அஜித்துக்கு வந்த கூட்டத்த பாத்து..' ஆதரவு கரம் நீட்டிய போனி கபூர்
புஷ்பா 2 பட உயிரிழப்பு விவகாரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இயக்குனர் போனி கபூர் தனது குரலை பதிவு செய்துள்ளார்.
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக இயக்குனர் போனி கபூர் தனது குரலை பதிவு செய்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புஷ்பா 2: தி ரூல் படத்தின் பிரீமியர் ஷோவில் ரசிகர் ஒருவர் மரணமடைந்தது கூட்ட நெரிசல் காரணமாகத் தான். ஆனால், இந்த வழக்கில் அர்ஜுன் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளார் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான வட்டமேஜை நிகழ்ச்சியை கலாட்டா பிளஸ் யூடியூப் சேனல் நடத்தியது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற தயாரிப்பாளர் போனி கபூர் தற்போது இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ள அல்லு அர்ஜூன் கைது விவகாரம் குறித்து சில கருத்துகளை பகிர்ந்து கொண்டார்.
அஜித்திற்காக கூடிய கூட்டத்தால் அதிர்ச்சியானேன்
அந்த நிகழ்ச்சியில் பேசிய போனி கபூர், தென்னிந்திய ரசிகர்கள் பெரிய நட்சத்திரங்கள் மேல் அன்பு மட்டும் அல்ல அவர்கள் மேல் வெறியே வைத்துள்ளனர். நான் அஜித் குமாரின் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை தயாரித்தேன்.
அப்போது அஜித் படம் அதிகாலை 1 மணிக்கு ரிலீஸ் ஆவதைத் தான் முதலில் பார்த்தேன். அந்த நேரத்திலும் தியேட்டருக்கு வெளியே 20-25 ஆயிரம் பேரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதிகாலை 3.30-4 மணியளவில் படம் முடிந்து நான் வெளியே வந்த பிறகும், அங்கு நிறைய பேர் இருந்தனர்.
அதேபோல தான் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், மகேஷ் பாபு போன்ற இன்றைய நட்சத்திரங்களின் படங்களுக்கும் மக்கள் ஆதரவு தருகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்.
அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக போனி கபூர்
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் இதை இணைத்து பார்க்கலாம். முதல் இரண்டு நாட்களுக்கு டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன. குறைந்தபட்சம் கூடுதல் காட்சிகளுக்கான டிக்கெட்டும் உயர்த்தப்பட்டது. அப்படி இருந்தும் படத்தை பார்க்க அத்தனை கூட்டம் வந்தது. அதனால்தான் ஒரு ரசிகரின் மரணத்திற்கு தேவையில்லாமல் அல்லு அர்ஜுன் மீது பழி சுமத்தும் அளவுக்கு இந்த நிலைமை வந்துள்ளது. படம் பார்க்க கூடியிருந்த கூட்டம்தான் அதற்குக் காரணம். அல்லு அர்ஜூன் அந்த சம்பவத்திற்கு காரணம் இல்லை" என்றார்.
புஷ்பா 2 கூட்ட நெரிசல் வழக்கு
புஷ்பா 2 வெளியான டிசம்பர் 4-ம் தேதி ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சி வெளியிடப்பட்டது. அப்போது அல்லு அர்ஜுன் சக நடிகர் ராஷ்மிகா மந்தனா மற்றும் மனைவி சினேகா ரெட்டி ஆகியோருடன் திரையரங்கிற்கு படம் பார்கக சென்றார். அந்த தகவலை அறிந்த ரசிகர்கள் நடிகரை தியேட்டரில் பார்க்க கூடியதால், தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 35 வயது பெண் ஒருவர் உயிரிழந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
குற்றச்சாட்டை மறுத்த அல்லு அர்ஜூன் கைது
மேலும் அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு வர அனுமதி மறுக்கப்பட்டும் தியேட்டருக்கு வந்ததாகவும் வெளியில் உள்ள நிலைமையை கூறிய பின்னும் அவர் தியேட்டரில் இருந்து வெளியேறவில்லை எனவும் அல்லு அர்ஜூன் மீது தெலங்கானா மாநில அரசு கூறியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அல்லு அர்ஜுன் மறுத்துள்ளார்.
இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த மாதம் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். ஆனால் தெலுங்கானா உயர் நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய பின்னர் மறுநாள் அவர் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.
வசூல் வேட்டை
2021ம் ஆண்டில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் நடிப்பில் உருவாகிய புஷ்பா தி ரைஸ் படத்தின் தொடர்ச்சியாக புஷ்பா 2: தி ரூல் படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது .
புஷ்பா: தி ரைஸ் படத்தை ஒப்பிடும் போது தற்போது வெளியாகியுள்ள 2ம் பாகம் இன்னும் பெரிய பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றுள்ளது. ஜனவரி 1 ஆம் தேதி நிலவரப்படி, இந்த படம் உலகளவில் ரூ .1760 கோடியை ஈட்டியுள்ளது. இது இதுவரை அதிக வசூல் செய்த மூன்றாவது இந்திய திரைப்படமாகும்.