Priya Prakash Varrier: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா..- ‘சத்தியமா இத எதிர்பாக்கல சாமி’ -பிரியா வாரியர் பேச்சு!
Priya Prakash Varrier: தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Priya Prakash Varrier: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜூன் தாஸ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்து கடந்த ஏப்ரல் 4ம் தேதி வெளியான திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. பல எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இந்தத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பிரியா வாரியர்
இந்தப்படத்தில் மலையாள நடிகையாக பிரியா வாரியர் அர்ஜூன் தாஸின் காதலியாக நடித்தார். படத்தில் அவருக்கு பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும், அர்ஜூன் தாஸூடன் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடலுக்கு அவர் ஆடிய நடனம் ரசிகர்கள் மட்டுமல்லாது, சமூக வலைதளங்களிலும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் நடந்த குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்கொண்டாட்டத்தில் நடிகை பிரியா கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர் பேசும் போது, ‘எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் உண்மையில் இதனை எதிர்பார்க்கவில்லை. என்னுடைய போனுக்கு தொடர்ந்து வாழ்த்து மடல்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பலரும் 2018ல் ‘அடார் லவ்’ படத்தில் நான் வைரலானது போல மீண்டும் வைரல் ஆகிவிட்டாய் என்று என்னிடம் சொல்கிறார்கள்.
உண்மையில் நான் இதனை எதிர்பார்க்கவே இல்லை. என்னுடைய எதிர்பார்ப்பெல்லாம் இந்த படத்தில் அஜித் சாருடன் நடிக்கலாம், அவருடன் ஒரே ஃப்ரேமில் இருக்கலாம் என்பதுதாகத்தான் இருந்தது. ஒரு கிளாசிக் ரெட்ரோ பாடல்.. அதுவும் சிம்ரன் மேம் பாடிய பாடலுக்கு, நான் சரியான பங்களிப்பை கொடுப்பேன் என்று இயக்குநர் ஆதிக் நம்பியதற்கு நன்றி. நான் அஜித் சாரின் தீவிர ரசிகராக மாறிவிட்டேன். அவ்வளவு உறுதுணையாக இருந்தார். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள பல விஷயங்கள் இருக்கின்றன’ என்று பேசினார்.
இயக்குநர் ஆதிக் ரவி பேசியவற்றை இங்கே பார்க்கலாம்.
சாதரண ரசிகனாக
நான் ஒரு சாதாரண ரசிகனாக இருந்து அஜிசாருக்கு போஸ்டரையும் பேனரையும் வைத்தவன். படம் ரிலீசான அன்றைய தினம் நான் தியேட்டருக்கு செல்லும் பொழுது அங்கிருந்த பேனரில் அஜித் சாரின் பெயருக்கு பக்கத்தில் என்னுடைய பெயர் இருப்பதை பார்த்து மிகவும் எமோஷனலாக மாறிவிட்டேன்.
நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் சாருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிவிட்டது. அந்தப் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் அஜித் சார், ‘என்னுடைய வார்த்தையை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். ஆதிக் மிகப் பெரிய டைரக்டராக வருவார்’ என்றார். அந்த சமயத்தில் என்னுடைய திரை பயணத்தில் பெரிய வெற்றிப்படங்கள் எதுவும் கிடையாது. இதற்கும் என்னுடைய முந்தைய படம் தோல்வியை சந்தித்திருந்தது. அந்த சமயத்தில் அவர் எனக்கு படம் கொடுக்கிறேன் என்று கூறினார்.
சார் என்னை எப்படி அந்த இடத்தில் வைத்து பார்த்தார் என்று எனக்கு தெரியவில்லை. அவருக்கு நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படம் ரிலீஸ் ஆன பின்னர் நான் அஜித் சாரிடம் பேசினேன். அப்போது அஜித் சார் என்னிடம் படம் வெற்றி பெற்றுவிட்டது. இந்த வெற்றியை உன்னுடைய தலைக்கு ஏற்றாதே. மறந்து விடு.. எப்போதும் உன்னுடைய வெற்றியை உன்னுடைய தலைக்கு ஏற்றாதே…உன்னுடைய தோல்வியை உன்னுடைய வீட்டிற்குள் கொண்டு செல்லாதே.. அடுத்த வேலையை பார் என்று கூறினார்.

டாபிக்ஸ்