Ilaiyaraaja: ‘நானும் மோடியும் நிறைய விஷயங்கள் பேசினோம்.. அவருடைய பாராட்டிற்கு தலைவணங்குகிறேன்’ - இளையராஜா பதிவு!
Ilaiyaraaja: எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். - பிரதமர் மோடி வாழ்த்து!

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா பிரதமர் மோடியை சந்தித்து பேசி இருக்கிறார். இந்த சந்திப்புக் குறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளத்தில், ‘நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது.’ என்று பதிவிட்டு இருக்கிறார். இதற்கு பதிலளித்த இளையராஜா, நானும் மோடி அவர்களும் சிம்பொனி இசை உள்ளிட்ட நிறைய விஷயங்களை பற்றி பேசினோம். அவரது பாராட்டிற்கு தலை வணங்குகிறேன்’ என்று பதிவிட்டு இருக்கிறார்.
முன்னதாக, லண்டனில் உள்ள அப்பல்லோ அரங்கத்தில் தன்னுடைய முதல் சிம்பொனி இசையை இளையராஜா அரங்கேற்றம் செய்தார். இதற்கு பல்வேறு இடங்களில் இருந்து பாராட்டுகள் வந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதனை வரவேற்றதோடு, இளையராஜாவின் இசைப்பயணத்தை அரசு சார்பில் கொண்டாட முடிவெடுத்திருப்பதாகவும் அறிவித்தார்.
சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்தது குறித்து இளையராஜா பேசியவற்றையும் பார்த்துவிடலாம்.
இது குறித்து முன்னதாக அவர் பேசிய போது, ‘முதல்வர் போலவே மக்கள் அனைவரும் என்னை வாழ்த்தியது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. நீங்கள் இதை டவுன்லோட் செய்து கேட்கக்கூடாது. நீங்கள் நேரடியாக வந்து இதை கேட்டு ரசிக்க வேண்டும்; அந்த அனுபவமே வேறு.
13 நாடுகளில்
என்னுடைய இந்த சிம்பொனி இசை நிகழ்ச்சி ஆனது 13 நாடுகளில் நடப்பதற்கான தேதிகள் குறிக்கப்பட்டாயிற்று. எல்லோ தேசங்களிலும் நான் இதை வாசிக்க இருக்கிறேன். நம்முடைய தேசத்தில், நம்முடைய மக்களுக்கும் இதை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
இசை பாரம்பரியத்தில் இது ஒரு உச்சக்கட்ட அனுபவமாக இருக்கும். என்னை இசை கடவுள் என்றெல்லாம் சொல்கிறார்கள். அதைக் கேட்கும் பொழுது, கடவுளை இளையராஜா அளவுக்கு கீழ் இறக்கி விட்டீர்களே என்று தான் தோன்றும். இது வெறும் ஆரம்பம்தான். 82 வயதாகிவிட்டது. இனிமேல் இவர் என்ன செய்யப் போகிறார் என்று நினைக்காதீர்கள்.
நீங்கள் நினைக்கும் அளவுக்குள் நான் இல்லை. எந்த விஷயத்திலும் அப்படி இல்லை. பண்ணைபுரத்தில் இருந்து இங்கு வந்தபோது வெறும் காலோடு வந்தேன். என்னுடைய காலில் நடந்து வந்து, அதே காலோடு, இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். இதை இளைஞர்கள் முன்னுதாரணமாக எடுத்து அவரவர்கள் துறையில் கடுமையாக உழைத்து, நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய அறிவுரை. முதல்வர் இதை விழாவாக எடுத்தால் அங்கு பேசலாம் சந்தர்ப்பம் எப்படி அமைகிறது என்று தெரியவில்லை’ என்று பேசினார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்