தமிழ் ரசிகர்களின் மனதில் 'அழியாத கோலம்' ஆனார் பிரதாப் போத்தன்!
- தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன் சத்தமேயில்லாமல் திரைப்பட இயக்கத்திலும் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாகும்.
- தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமான பிரதாப் போத்தன் சத்தமேயில்லாமல் திரைப்பட இயக்கத்திலும் பல சாதனைகளை படைத்துள்ளார் என்பது பலருக்குத் தெரியாத விஷயமாகும்.
(1 / 11)
பிரதாப் போத்தன் கடந்த 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று பிறந்தார். தனது பள்ளிப்படிப்பை ஊட்டியில் லவ்டேலில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் முடித்தார். மெட்ராஸ் கிறிஸ்துவ கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
(2 / 11)
கடந்த சில ஆண்டுகளாக அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏகப்பட்ட சிரமங்களை அனுபவித்து வந்தார் பிரதாப் போத்தன். அவரது சகோதரரும் இயக்குநருமான ஹரி போத்தன் மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்வு மேலும் இருண்ட மயமானது. கேரளத்தில் போத்தன் குடும்பத்தாருக்கு மிகப்பெரிய அளவில் நிலபுலன்கள் உள்ளன. அந்த சொத்து பிரச்னை தொடர்பாக பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்களும் பிரதாப் போத்தனுக்கு வந்தன. அத்துடன் அவரது உடல்நிலையிலும் சில பிரச்னைகள் இருந்ததால் ஐரோப்பாவில் உள்ள அவரது நெருங்கிய உறவினர் வீட்டில் சில மாதங்கள் வசித்து வந்தார். பிரதாப் போத்தன் ஆங்கிலப் புலமை பெற்றவர். மலையாளம் தவிர கூடுதலாக பல மொழிகளை அறிந்து வைத்திருந்தார்.
(3 / 11)
முட்டைக்கண் அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். எவ்வளவுக்கெவ்வளவு அப்பாவித்தனமாகத் தோன்றுகிறாரோ அவ்வளவுக்கவ்வளவு வில்லத்தனமாகவும் நடிக்கத் தேர்ந்தவர். மூடுபனியில் ஒரு சைக்கோ கில்லராக பிரமாதப்படுத்தியிருப்பார்.
(4 / 11)
1978ஆம் ஆண்டில் இயக்குநர் பரதன் இயக்கத்தில் வெளியான 'ஆரவம்' பிரதாப் போத்தனை திரையுலகத்துக்கு அறிமுகம் செய்து வைத்தது. சினிமாவுக்கு வருவதற்கு முன்பாக 'தி மெட்ராஸ் பிளேயர்ஸ்' என்ற நாடகக் குழுவில் பிரதாப் போத்தன் நடித்து வந்தார். புகழ்பெற்ற நாடகமேதையும் கதாசிரியருமான பெர்னார்டு ஷா எழுதிய 'ஆண்ட்ரகிள்ஸ் அண்டு தி லயன்' நாடகத்தில் பிரதாப் போத்தனின் நடிப்பை பார்த்து அசந்து போன இயக்குநர் பரதன், தனது ஆரவம் படத்தில் அவரை நடிக்க வைத்தார். 1979ஆம் ஆண்டில் பிரதாப் போத்தன் நடித்த 'தாகரா', 1980ஆம் ஆண்டில் நடித்த 'லாரி', 'சாமரம்' ஆகிய மலையாளப்படங்கள் கேரளத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டவையாகும். பிரதாப் போத்தனின் நடிப்பு மலையாள மக்களை மிகவும் கவர்ந்துவிட்டது. தமிழில் அவர் நடித்த முதல் படம் அழியாத கோலங்கள்.
(5 / 11)
பிரதாப் போத்தன் மலையாளத்தில் மொத்தம் இயக்கிய 12 திரைப்படங்களில் 3 மலையாளப்படங்கள் பெயர் சொல்லக்கூடியவை ஆகும். 1987 ஆம் ஆண்டில் வெளியான 'ரிதுபேதம்' ஒரு விபச்சாரி மகனின் தவிப்பை பிரமாதமாக சித்தரித்திருந்தது. 1988ஆம் ஆண்டில் வெளியான 'டெய்சி' கேரளத்தில் பெரும் காதல் ஆழிப்பேரலையை ஏற்படுத்தியது. 1997ஆம் ஆண்டில் வெளியான 'ஒரு யாத்ரமொழி' அடையாளம் தெரியாத தன் அப்பாவைத் தேடியலையும் மகனின் போராட்டத்தை உணர்ச்சிவசத்துடன் எடுத்துக் காட்டியது. இந்தப் படங்கள் அவரது முதிர்ந்த அறிவுச்சிந்தனைக்கு உதாரணமான படங்களாகும். மலையாளம், தமிழ், கன்னடம்,தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்கள் உள்பட இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் பிரதாப் போத்தன் நடித்துள்ளார். 'ஆயாளும் ஞானும் தம்மில்', '22 ஃபீமேல் கோட்டயம்', 'இடுக்கி கோல்டு', 'எஸ்ரா', 'உயரே', 'பெங்களூரு டேய்ஸ்' ஆகிய படங்கள் இவருக்கு சிறப்பான அந்தஸ்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றுத்தந்த படங்களாகும்.
(6 / 11)
தமிழில் 'மூடுபனி', 'வறுமையின் நிறம் சிவப்பு', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'பன்னீர் புஷ்பங்கள்' ஆகிய படங்களில் இவரது நடிப்பு மக்களை மிகவும் கவர்ந்தது. 1979ஆம் ஆண்டில் தகரா படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். 1980ஆம் ஆண்டில் சாமரம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். 1985ஆம் ஆண்டில் பிரதாப் போத்தன் இயக்கிய 'மீண்டும் ஒரு காதல் கதை' படத்துக்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான இந்திராகாந்தி விருது அவருக்கு வழங்கப்பட்டது. 1987ஆம் ஆண்டில் ரிதுபேதம் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஃபிலிம்பேர் விருதைப் பெற்றார். 2012ஆம் ஆண்டில் 22 ஃபீமேல் கோட்டயம் படத்தில் நடித்ததற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான 'சைமா' விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் கேரள அரசின் திரைப்படத் தேர்வுக்குழுவின் சிறப்பு விருதும் கிடைத்தது.
(7 / 11)
மீண்டும் ஒரு காதல் கதை திரைப்படத்தை பிரதாப் போத்தன் இயக்கியபோது அதில் கதாநாயகியாக நடித்த ராதிகாவை காதலித்து 1985ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண பந்தம் அற்பஆயுசில் முடிந்தது. கருத்து வேறுபாடு காரணமாக 1986ஆம் ஆண்டில் ராதிகாவும் பிரதாப் போத்தனும் விவாகரத்து செய்து கொண்டனர்.
(8 / 11)
1990ஆம் ஆண்டில் அமலா சத்யநாத் என்ற பெண்ணை திருமணம் செய்த பிரதாப் போத்தனுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர் கேயார் போத்தன். பிரதாப் போத்தனின் இரண்டாவது மணவாழ்க்கையும் 22 ஆண்டுகள் கழித்து விவாகரத்தில் முடிந்தது.
(9 / 11)
மீண்டும் ஒரு காதல் கதை மூலம் தேசிய விருதைப் பெற்ற பிரதாப் போத்தன் 30 படங்கள் வரை இயக்கியுள்ளார். தமிழில் சீவலப்பேரி பாண்டி, ஜீவா, வெற்றிவிழா, லக்கிமேன் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். வறுமையின் நிறம் சிவப்பில் கமல்ஹாசனுடன் பிரதாப் போத்தனுக்கு ஏற்பட்ட நட்பு வெற்றிவிழாவில் அவரை கதாநாயகன் வாய்ப்பைத் தரும் அளவுக்கு தொடர்ந்தது. சீவலப்பேரி பாண்டி நடிகர் நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனை படமாகும். தெலுங்கில் அவர் இயக்கிய படம் 'சைதன்யா'. தமிழில் பிரதாப் போத்தன் இயக்கிய கடைசி படம் 'லக்கிமேன்', மலையாளத்தில் 'ஒரு யாத்ரமொழி' ஆகும்.
(10 / 11)
பிரதாப் போத்தன் நடித்த கடைசிப்படமான 'பாரோஸ்' இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இந்தப் படத்தில் அவர் மோகன்லாலுடன் நடித்துள்ளார்.
(11 / 11)
சென்னையில் ஒரு பிளாட்டில் தனியாக வாழ்ந்து வந்த நடிகர்-இயக்குநர் பிரதாப் போத்தன் ஜூலை 15ஆம் இறந்தநிலையில் கிடந்தார். இதயச்செயலிழப்பால் அவர் இறந்ததாக முன்னாள் மனைவி அமலா தெரிவித்தார். பிரதாப் போத்தனுக்கு வயது 70. பிரதாப் போத்தன் மறைவுக்கு கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர் சதீஸன், பேரவைத் தலைவர் ராஜேஷ் மற்றும் அமைச்சர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழ்திரையுலகத்தினரும் இரங்கலைத் தெரிவித்துள்ளனர். தமிழக ரசிகப் பெருமக்களும் தங்களது அனுதாபத்தை தெரிவித்துள்ளனர்.
மற்ற கேலரிக்கள்