Poornima bhagyaraj: முதல் மனைவி கொடுத்த சோகம்..திக்குமுக்காடிய பாக்யராஜ்.. கரம் பற்றிய பூர்ணிமா!
Poornima bhagyaraj: திருமண வாழ்க்கையில் நுழைந்த பின்னர், அந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் நான் அப்படி ஒரு கடினமான முடிவை அந்த சமயத்தில் எடுத்தேன். - பூர்ணிமா

பிரபல நடிகையான பூர்ணிமா தன்னுடைய கணவரும் பிரபல இயக்குநருமான பாக்யராஜூடன் ஏற்பட்ட காதல் குறித்து டூரிங் டாக்கீஸ் சேனலுக்கு பேசி இருக்கிறார்.
அப்போதே முடிவு செய்து விட்டார்
அவர் பேசும் போது, “என்னை அவர் பார்க்கும் போதே என்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்திருக்கிறது. அவரது முதல் மனைவி இறந்த பின்னர் அவர் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்று நினைத்தார். காரணம், அவர் அந்த சமயத்தில் டாப் இயக்குநர்களின் பட்டியலில் இருந்தார். மனது மாறுவதற்குள் நாம் இன்னொரு கல்யாணத்திற்குள் நுழைந்து விட வேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். அப்படி அவர் யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னை அவர் மும்பையில் சந்தித்தது அவருக்கு ஞாபகம் வந்திருக்கிறது. இதனையடுத்துதான் அவர் எங்களுடைய குடும்பத்திடம் வந்து என்னை பெண் கேட்டார்.
தூது விட்ட நடிகைகள்
அந்த சமயத்தில் அவரை கல்யாணம் செய்து கொள்ள பல நடிகைகள் தூது விட்டார்கள். அதை அவர் கல்யாணத்திற்கு பிறகு என்னிடம் சொன்னார். அதனால்தான் கல்யாணத்தை வீட்டில் சொன்ன, ஆறு மாதத்தில் நடத்த வேண்டும் என்று நெருக்கடி எங்களுக்கு ஏற்பட்டது. நான் அப்போது கிட்டத்தட்ட 25 திரைப்படங்களில் புக் ஆகியிருந்தேன். அனைத்து படங்களுக்கான அட்வான்ஸ் தொகையும் என்னிடம் தான் இருந்தது.
இந்த நிலையில் திடீரென்று கல்யாணம் என்று முடிவான பின்னர், அந்த படங்கள் அனைத்தையும் நான் கேன்சல் செய்துவிட்டு, அட்வான்ஸ் தொகையையும் திருப்பிக் கொடுத்து விட்டேன். காரணம் என்னவென்றால், அவ்வளவு காலம் நடித்துக் கொண்டிருந்த நான் அந்த காலகட்டத்தில் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். ஆகையால் திருமண வாழ்க்கையில் நுழைந்த பின்னர், அந்த வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் தான் நான் அப்படி ஒரு கடினமான முடிவை அந்த சமயத்தில் எடுத்தேன். இன்னும் சொல்லப்போனால் கல்யாணத்திற்கு மூன்று நாட்கள் முன்னாள் கூட நான் நடித்துக் கொண்டுதான் இருந்தேன்.” என்று பேசினார்.
பாக்யராஜ் பேட்டி
முன்னதாக, தன்னுடைய கல்யாண வாழ்வு குறித்து கல்யாணமாலை நிகழ்ச்சியில் பேசிய பாக்யராஜ், “முதல் மனைவி பிரவீனா மறைவுக்கு பின்னால், கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. இதனையடுத்து கோவா, மும்பை என சுற்றி வந்து கொண்டிருந்தேன். அப்போது மும்பையில், பிஆர்ஓ செல்வம் நான் தங்கி இருந்த ஹோட்டலில் தங்கி இருந்தார். எதேர்ச்சையாக அவரை சந்திக்க நேர்ந்தது. என்ன இங்கு வந்திருக்கிறீர்கள் என கேட்டபோது, பூர்ணிமா இங்கு வந்திருக்கிறார். அவர் மலையாள படம் ஒன்றிற்காக, பாரிஸ் செல்கிறார் என்று கூறி, அவரை வழி அனுப்ப வந்தேன் என்றார்.
செல்வம் பூர்ணிமாவிடம் சென்று நான் இங்கு வந்திருக்கிறேன் என்று சொல்லி இருக்கிறார். அப்போது பூர்ணிமா எங்கள் ஊருக்கு வந்திருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வந்து ஒரு டிபன் சாப்பிட்டு விட்டு செல்லுங்கள் என்று சொன்னார். நான் அதற்கெல்லாம் நேரமில்லை வேண்டுமானால் ஒரு டீ சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்றேன். அப்போது நவராத்திரி என்பதால், அதனை பற்றி பூர்ணிமா பேசிக் கொண்டிருந்தார். நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
உடனே எனக்கு நாம் ஏன் இவரை கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்ற யோசனை வந்தது. பூர்ணிமாவிடம் இதை கேட்பதற்கு எனக்கு கொஞ்சம் சங்கோஜமாக இருந்தது. சந்திப்பின் முடிவில் அவர் என்னை கார் ஏற்றி விட வந்தார். அப்போது நான் பூர்ணிமாவிடம் பாரிஸ் சென்று விட்டு எனக்கு ஒரு போன் செய்கிறாயா? என்று கேட்டேன். ஆனால், பூர்ணிமாவிடம் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு கூட எந்தவித பதிலும் வரவில்லை. இந்த நிலையில்தான் என்னுடைய உதவியாளர் ஒருவர், பூர்ணிமா என்ற ஒருவர் தொடர்ந்து கால் செய்து கொண்டிருப்பதாக சொன்னார். உடனே அடேய்… என்று கூறி திட்டிவிட்டு, பூர்ணிமாவை தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னேன்.
அவர் அம்மாவிடம் பேசுங்கள் என்றார். அம்மாவை கேட்டபோது அவர் அப்பாவிடம் பேச வேண்டும் என்றார். அப்பாவை கேட்டபோது அவர் தோப்பனாரிடம் பேச வேண்டும் என்றார் தோப்பனாரிடம் கேட்டபோது, மச்சினன் வந்து விடட்டும் என்றார். பின்னர், அவர்கள் என்னுடைய காதலை ஏற்றுக்கொண்டு எங்கள் கல்யாணத்திற்கு சம்மதித்தார்கள்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

டாபிக்ஸ்