தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Ponniyin Selvan Review: Maniratnam Satisfies Both Readers And Non Readers

Ponniyin Selvan Review: ரசிகர்களை திருப்திபடுத்திய பொன்னியின் செல்வன்!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 30, 2022 10:47 PM IST

மன்னன் அரியனையை கைப்பற்ற சோழ வம்சத்தின் உள்ளேயே நடக்கும் போட்டி ஒரு பக்கம், தங்கள் மன்னரை கொலை செய்ததற்காக பாண்டிய வம்சத்தினர் சோழ மன்னர்களை கொல்ல மேற்கொள்ளும் பழி வாங்கும் முயற்சி மறுபக்கம் என தங்களை நோக்கி வந்த இரு தாக்குதல்களை சோழ அரசு எப்படி சமாளித்தது என்பதே பொன்னியின் செல்வன் பாகம் 1.

ரசிகர்கள் புகழும் அளவில் இல்லாவிட்டாலும் கவரும் வகையில் அமைந்துள்ளது பொன்னியின் செல்வன்
ரசிகர்கள் புகழும் அளவில் இல்லாவிட்டாலும் கவரும் வகையில் அமைந்துள்ளது பொன்னியின் செல்வன்

ட்ரெண்டிங் செய்திகள்

பொன்னியின் செல்வன் படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பு தொற்றிக்கொள்ள, தற்போது அனைத்தும் முடிந்து மக்கள் பார்வைக்கு படமாக வடிவம் பெற்ற காட்சியாக திரையில் வந்துள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாவலாக கருதப்படும் பொன்னியின் செல்வன் புத்தகத்தை, திரைவடிவத்தை எந்த வித சமரசமும் இன்றி காட்சிகளாக படக்குழுவினர் விரிவுபடுத்தியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்கு படத்தின் கதை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் படிக்காதவர்களும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக முதல் காட்சியிலிருந்தே எளிமையாக எடுத்துரைத்துள்ளார் மணிரத்னம். ஹாலிவட் திரைப்படங்களில் ஒவ்வொரு கதாபாத்திரம் குறித்து புரியும்படியாக தெளிவாக விளக்கம் கொடுப்பதோ அல்லது காட்சியமைப்பு வைக்கும் பாணியையோ தவிர்த்து கதையின் ஓட்டத்தோடு அவர்களின் பாத்திர படைப்புகளை புரியும் விதத்தை பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குநர் மணிரத்னம் சிறப்பாக கையாண்டுள்ளார்.

முதல் காட்சியிலேயே ஆதித்த கரிகாலன் (சீயான் விக்ரம்), பார்த்திபேந்திர பல்லவன் (விக்ரம் பிரபு) உடன் இணைந்து பிரமாண்ட போரில் எதிரி நாடுகளை கைப்பற்றுவது, அந்த செய்தியை, தனக்கு கை கொடுக்கும் உற்ற தோழனாக வந்தியத்தேவன் (கார்த்தி) மூலம் ஓலையில் செய்தியாக அனுப்பவது, பின் அங்கே ஆழ்வார்க்கடியான் நம்ப்யுடன் (ஜெய்ராம்) இணைந்து பெரிய பழுவேட்டரையர் போடும் சதித்திட்டத்தை அறிந்துகொள்வது என அடுத்தடுத்த காட்சிகள் விரிய பரபரப்பும் விறுவிறுப்புமாக தொற்றிக்கொள்கிறது.

இவ்வளவு திருப்பங்கள் இருந்தும் காட்சிகள் நகர்வின் வேகம் என்னவோ பார்வையாளர்கள் பொறுமையை சோதிக்கும் விதமாகவே அமைந்திருப்பதை தவிர்க்க முடியவில்லை.  ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குரிய வந்தியன் தேவனாக தோன்றும் கார்த்தி வெளிப்படுத்தும் நகைச்சுவைகளும், பேச்சுக்களும் முதல் பாதியை தாங்கி நிற்கும் தூண்களாக அமைந்துள்ளன.

ஆதித்த கரிகாலன் சகோதரனாக வரும் அருண்மொழி வர்மன் (ஜெயம் ரவி) இரண்டாம் பாதியில் தோன்றி கிட்டதட்ட கதை முழுவதையும் ஆக்கிரமிக்கிறார். குந்தவை, மந்தாகினி என வில்லத்தனம் - நன்மைகள் செய்யும் இரண்டு விதமான கேரக்டர்களில் தோன்றி மனதில் அழகு பதுமையாகவே பதிந்துவிடுகிறார் ஐஸ்வர்யாராய். குறைவான வசனங்களில் வஞ்சகம் மிக்க பார்வையாளே தனது சூழ்ச்சி குணத்தை புரியவைத்து மிரளவைத்துள்ளார். மணிரத்னம் கண்களின் வழியே ஐஸ்வர்யா ராயின் அழகு என்பது மிகையாகவே தொடர்கிறது. 

குந்தவையாக வரும் த்ரிஷா, நந்தினியின் சூழ்ச்சியை முறியடிக்கவும், தனது வம்சத்தை காப்பதற்காக வந்தியத்தேவன் மூலம் காரியத்தை மேற்கொள்வதிலும் கவர்கிறார். ஆனாலும் ட்ரெய்லரில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நந்தினி - குந்தவை சந்திப்பு காட்சிகளை ஏனோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இவர்கள் தவிர பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், சுந்தர சோழன் சகோதரராக ரகுமான், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராம், ரவிதாசனாக கிஷோர் என படத்தில் தோன்றிய அனைவரும் தங்களது பாத்திரங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதற்கு ஏற்ப நடிப்பை வெளிப்படுத்தி சென்றுள்ளனர்.

திரைவடிவம் பெற்றுள்ள கல்கியின் எழுத்துகளுக்கு இசையிலும், காட்சி அமைப்பிலும் முற்றிலும் புதுமையான பரிணாமத்தை இசையைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஆகியோர் தந்துள்ளனர். பொன்னி நதி, சோழா போன்ற பாடல்கள் கேட்கும்போது கொடுத்த பரவசத்தை விட காட்சியாக பார்க்கும்போது மேலும் புத்துயிர் பெற்று புதுவிதமான அனுபவத்தை தருகிறது.

ஒன்பதாம் நூற்றாண்டை  அப்படியே நம் கண்முண்ணே ரவிவர்மனின் கேமரா கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அவர் காட்சிய அமைந்த ப்ரேம்களும் காட்சியின் தன்மையையும், கதாபாத்திரங்களின் உணர்ச்சியையும் எடுத்துரைக்கும் விதமாக அமைந்திருந்தன. பல இடங்களில் கிராபிக்ஸ் என்பது தெளிவாக தெரிந்தாலும், அச்சு அசலாக தோன்றியதிலும், பிரமாண்ட அரண்மனை அமைப்புகளிலும் தெளிவாக தெரிகிறது தோட்டா தரணியின் உழைப்பு.

ஐந்து பாகங்கள் கொண்ட புத்தக்கத்தில் முதல் இரண்டு பாகங்களை தொகுத்து படத்தின் முதல் பாகமாக உருவாக்கியிருப்பதால் அதிலுள்ள முக்கிய காட்சிகளையெல்லாம் சிறப்பாக கோர்வை செய்துள்ளார் எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்.

படத்தின் மைனஸாக பெரும்பாலான இடங்களில் கிராபிக்ஸ் என தெளிவாக கண்டுபிடித்துவிடும் விதமாக அமைக்கப்பட்ட காட்சிகள். கதைக்கு ஏற்ப ரியாலிசமாக இருக்க வேண்டும் என அமைக்கப்பட்ட சண்டைக் காட்சிகள் பெரிய அளவில் ஈர்ப்பை ஏற்படுத்த வில்லை. ஏனோ பழகிப்போன வால் வீச்சு சண்டைகளாகவே உள்ளன. இருப்பினும் இதற்காக நடிகர்கள் வெளிப்படுத்திய ஊழைப்பை பாராட்டி ஆக வேண்டும். க்ளைமாக்ஸில் தோன்றும் கடல் சண்டை காட்சி நன்றாகவே அமைக்கப்பட்டிருந்தது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ கால தமிழுக்கு சப்டைட்டில் வேண்டும் என ரசிகர்கள் கேட்டது மனதில் தோன்றியதோ என்னவோ, மிகவும் தெளிவாக தற்போது பேசும் நடைமுறை தமிழில் வசனங்களை அமைத்துள்ளார்கள் இயக்குநர் மணிரத்னம், குமாரவேல், ஜெயமோகன் கூட்டணி.

படத்தின் நீளம் ஒரு குறைபாடாக இருந்தாலும், ஐந்து பாகங்கள் இருக்கும் மிகப் பெரிய நாவலை சினிமாவாக இரண்டு பாகங்களாக சுருக்குவதற்கு இந்த நீளம் தேவைதான் என்ற நியாயத்தை முன்னிருந்த்துகிறது. இதனால் படத்தை புகழ வேண்டும் என்ற எண்ணம் தோன்றாவிட்டாலும் ரசிக்க முடியாமல் கடந்து செல்ல முடியாது.

மொத்தத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை எந்த சமரசமும் இல்லாமல் அப்படியே திரைவடிவில் தனது பாணியில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். பாகுபலி போல் இரண்டாம் பாகத்துக்கான ஆர்வத்தையும் இறுதியில் ஏற்படுத்தி அதற்கான வெய்டிங்கை ரசிகர்கள் மனதில் உருவாக்கியுள்ளனர்.

பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்கள் குறை கூறாத அளவிலும், படிக்காதவர்கள் ரசிக்கும் வகையும் இந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம் அமைந்துள்ளது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்