Ilaiyaraaja: ‘பாட்டும் இல்லை.. இசையும் இல்லை..’ வைரமுத்து vs இளையராஜா பஞ்சாயத்திற்கு அன்றே ‘பஞ்ச்’ கொடுத்த வாலி!
Ilaiyaraaja vs Vairamuthu: ‘ஒரு பாடலை எவ்வளவு பிரமாதமாக எழுதினாலும், அதற்கு எவ்வளவு பிரமாதமாக இசையமைத்தாலும், எவ்வளவு பிரமாதமாக ஒரு பாடகரோ, பாடகியோ அதை பாடினாலும், எந்த கோயில் கோபுரம் மீது ஏறியும் நான் சத்தியம் செய்வேன்..’
பாடல் வரிகள் பெரிதா? இசை பெரிதா? என்று கவிஞர் வைரமுத்துவும், இசைஞானி இளையராஜாவும் பனிப்போர் நடத்திக் கொண்டிருக்க, அது தொடர்பான பல்வேறு கருத்துக்களை, அவர்கள் சார்ந்தவர்கள், அவரவருக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவுகள் போட்டு வருகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன், இயக்குனர்கள் சங்கம் நடத்திய விழாவில், மறைந்த வாலிபக் கவிஞர் வாலி மற்றும் மறைந்த இசை மேதை எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் மேடையில் கவுரவிக்கப்பட்டனர். அப்போது வாலி பேசியவை, இன்றைய இந்த பனிப்போருக்கு பொருத்தமாக இருக்கும். இதோ வாலியின் அன்றைய பேச்சு:
வாலியின் தக் ஃலைப் சம்பவம்
‘‘பாட்டு எழுதி இசையமைப்பது அந்த காலம். அதெல்லாம் மாறிப் போய் 30 ஆண்டுகள் ஆகிறது. முன்பு குழந்தையை பெற்று அதற்கு சட்டை தைப்பார்கள். இப்போது சட்டையை தைத்து அதற்கு மாதிரி குழந்தையை நசுக்கிக் கொண்டிருக்கிறேன்.
பி.வாசு கைதட்டுகிறார். அவருக்கு தெரியுமே. இதையெல்லாம் விஸ்வநாதன் அண்ணன் அருகில் அமர்ந்து பேசுவதே அதிக பிரசிங்கி தனம். இன்றைக்கு வாலி என்று ஒருவன் இருக்கிறான் என்றால், அது விஸ்வநாதன் அண்ணன் போட்ட பிச்சை.
ரஜினி வைத்த கோரிக்கை
சந்திரமுகி பட விழா மேடையில் நான் சொன்னேன், ‘விஸ்வநாதன் அண்ணனை சந்திக்கும் முன்பு வரை எனக்கு சோத்துக்கு வக்கில்லை; விஸ்வநாதன் அண்ணனை சந்தித்தப் பின், எனக்கு சோறு தின்னவே நேரம்இல்லை’ என்று நான் கூறினேன். அதே வார்த்தையை பாலசந்தர் குறித்து பேச தனக்கு அனுமதி தருமாறு ரஜினி கேட்டார். யாரு வீட்டு சொத்து பயன்படுத்துக்கோங்க என்று கூறினேன்.
பாலசந்தரை சந்திக்கும் முன் எனக்கு சோற்றுக்கு வழியில்லை; அவரை சந்தித்தப் பின் சோறு திங்க நேரம் இல்லை என்று ரஜினி பேசினார். நான் இந்த வயதில் பொய் பேசக்கூடாது. அப்போ அந்த வயதில் பொய் பேசினீங்களா? என்று கேட்டால், பொய் பேசவில்லை என்றால், சினிமாவுக்கே வரமுடியாது.
பொய் சொன்னால் தான் சினிமா
உண்மையை சொன்னால் ஒரு பய வேலை தர மாட்டான். கண்ணதாசன் பாடலை தான் இங்கு சொல்ல வேண்டியிருக்கிறது. ‘வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை, புத்தியுள்ள மனதரெல்லாம் வெற்றி பெற்றதில்லை’ என்பது தான் சினிமாவில் உண்மை.
ஏன் இதை சொல்கிறேன் என்றால், ஒரு பாடலை எவ்வளவு பிரமாதமாக எழுதினாலும், அதற்கு எவ்வளவு பிரமாதமாக இசையமைத்தாலும், எவ்வளவு பிரமாதமாக ஒரு பாடகரோ, பாடகியோ அதை பாடினாலும், எந்த கோயில் கோபுரம் மீது ஏறியும் நான் சத்தியம் செய்வேன், ஒரு இயக்குனரில் காட்சியமைப்பில் தான் அது வெற்றி பெறும்.
இசையமைப்பாளரை கடிக்காதீங்க!
இதை இப்போதுள்ள இயக்குனர்கள் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள். இசையமைப்பாளரை கண்டால் கடிக்கிறார்கள். இயக்குனர் காட்சியமைப்பில் தான் பாடலும், படமும் நிற்கும். போனால் போகட்டும் போடா பாடலை கொடைக்கானலில் ஷூட் செய்து விட்டு, எடிட்டிங் டேபிளில் பீம்சிங் போட்டுள்ளார். அதைப் பார்த்த வேலுமணி, ‘என்ன மாதிரியான பாடலை இப்படி சிவாஜியை நடக்கவிட்டு எடுத்துருக்காரு’ என்று வேதனைப்பட்டுள்ளார்.
3 நாட்கள் கழித்து வந்த போது, அந்த பாடல் வேறு மாதிரி ரகத்தில் இருந்துள்ளது. காட்சிகளில் அந்த பாடலை எங்கேயோ கொண்டு சென்று விட்டார் பீம்சிங். இது ஏதோ இயக்குனர்கள் சங்க விழா என்பதற்காக இதை சொல்லவில்லை. 50 ஆண்டுகளாக சினிமாவில் நான் குப்பை கொட்டிக் கொண்டிருக்கிறேன். இயக்குனரின் காட்சிகளால் மோசமான பாடலை ஹிட் ஆக்க முடியும், நல்ல பாடல்களை கெடுக்கவும் முடியும். காட்சி அமைப்பு தான் மிக முக்கியமானது.
அதை விட்டுட்டு பாட்டு ஹிட் ஆனது என்னால தான் என்று காலரை தூக்குவதெல்லாம் கத்துக்குட்டி தனம். உண்மையை சொன்னால், இயக்குனர்களின் காட்சி அமைப்பு தான் முக்கியம்,’’ என்று அந்த நிகழ்ச்சியில் கவிஞர் வாலி பேசியிருந்தார்.
டாபிக்ஸ்