Pechi Movie Review: ‘அரண்மனை 4 மிரட்டலை மிஞ்சியதா அரண்மனை காடு?’ பேச்சி திரை விமர்சனம்!
Pechi Movie Review: முதல் பாதி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி பறக்கிறது. அதிலும் பேச்சியின் ஆட்டம் ஆரம்பித்ததும், காடு பற்றி எரிகிறது. இரவு இல்லாமல் பேய் படம் எடுக்க முடியும் என்பதை நிரூபித்ததற்கே அவர்களுக்கு சல்யூட் அடிக்கலாம். பகலில் பார்வையாளர்களை மிரட்டுவது அவ்வளவு எளிதல்ல.

Pechi Movie Review: ஹாரர் திரைப்படங்கள், எப்போதும் சீசன் திரைப்படங்களாக தான் திரைக்கு வரும். ஒரு அருந்ததி வெற்றி பெறும் போது, பல அருந்ததிகள் வருவார்கள். ஒரு முனி வெற்றி பெறும் போது, பல முனியாண்டிகள் வருவார்கள். இது அரண்மனை காலம். சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ மெகா வெற்றி பெற்று, மீண்டும் ஹாரர் திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. அந்த சமயத்தில் வெளியாகியிருக்கும் படம் தான் பேச்சி!
காடும் கதையும் செய்யும் பயணம்
அரண்மனைக் காடு என்கிற மலை கிராமத்தில் சுற்றுலாவுக்கு வரும் நண்பர்கள் குழு. அவர்களை ட்ரெக்கிங் அழைத்துச் செல்ல, உள்ளூர் வன ஊழியர் ‘சைடு பிசினஸாக’ பணியை ஏற்கிறார். ஊரில் உள்ள கட்டுப்பாடு, அதன் பின்னணியில் இருக்கும் அமானுஸ்ய சம்பவங்களை நன்கு அறிந்த அந்த வன ஊழியர், சுற்றிப் பார்க்க வந்திருக்கும் அந்த குழுவினரிடம் பல முறை எச்சரிக்கிறார்.
அவர் எச்சரிக்கையை மீறி, நண்பர்கள் செய்யும் வேண்டாத வேலை, காட்டில் காத்திருக்கும் பேச்சிக்கு அவர்கள் விருந்தாக வழி செய்கிறது. யார் அந்த பேச்சி? எதற்காக காத்திருக்கிறாள்? அவளிடம் சிக்கினால் என்ன ஆகும்? என்பது தான் கதை. வன ஊழியராக பால சரவணன். இதுவரை காமெடியில் மட்டுமே பார்த்து வந்த பால சரவணன், இந்த முறை படு சீரியஸாக நடித்திருக்கிறார்.