Pawan Kalyan: ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண்?: அரசியல் அரங்கில் பவர்ஃபுல் ஆளான பவர் ஸ்டார் பவன் கல்யாண்!
Pawan Kalyan: ஆந்திராவின் சந்திர பாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில், துணை முதல்வர் பவன் கல்யாண் எனப் பேச்சு அடிபடுகிறது. மேலும், பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் பிற வி.ஐ.பிக்கள் கலந்து கொண்டனர்.
Pawan Kalyan: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு ஜூன் 12 நாளை முதலமைச்சராக பதவியேற்க உள்ள நிலையில், தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டாரும், ஜனசேனா கட்சியின் தலைவருமான கொனிடேலா பவன் கல்யாண் ஆந்திர மாநிலத்தின் துணை முதலமைச்சராக இருக்க வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
ஆந்திர அரசியலில் பவர் ஸ்டார் ஆன பவன் கல்யாண்:
ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஏ-கன்வென்ஷன் சென்டரில் இன்று(ஜூன் 11) காலை 9.30 மணிக்கு மூன்று கட்சிகளைச் சேர்ந்த புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம், ஜனசேனா கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி ஆகியவற்றை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக சந்திரபாபு நாயுடு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பிற்பகலில், தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள், ஆந்திர ஆளுநர் எஸ்.அப்துல் நசீரிடம் ஒரு கடிதத்தை சமர்ப்பிப்பார்கள், அவர் சந்திர பாபு நாயுடுவை அழைத்து, அரசாங்கத்தை அமைக்குமாறு கூறுவார். பதவியேற்பு விழா நாளை ஜூன் 12 புதன்கிழமை காலை 11.27 மணிக்கு விஜயவாடா சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கேசரபள்ளி ஐ-டி மையம் அருகே நடைபெறும்.
பிரதமர் மோடி பங்கேற்பு:
பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் பல்வேறு மாநில முதல்வர்கள் மற்றும் பிற விஐபிக்கள் கலந்து கொள்வார்கள் என்று தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அட்சென்னைடு நேற்று(ஜூன் 10) தெரிவித்தார். நிகழ்ச்சியையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 10ஆம் தேதி நேற்று காலை புதுடெல்லியில் இருந்து திரும்பிய சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் மாநில அமைச்சரவையை அமைப்பது குறித்து பரபரப்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, அமைச்சரவையில் முதல்வரைத் தவிர, அதிகபட்சமாக 25 அமைச்சர்கள் இருப்பார்கள் எனவும் நமது ஊடகத்திடம் தெரிவித்தார்.
பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி?:
மேலும் அவர், "சந்திரபாபு நாயுடு தனது அமைச்சரவையை அமைக்கும்போது உறுப்பினர்களின் மூப்பு மற்றும் அனுபவத்தைத் தவிர, சாதி மற்றும் பிராந்திய சமன்பாடுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ஏராளமான எம்.எல்.ஏக்கள் - மாநில சட்டமன்றத்தில் 175 உறுப்பினர்களில் 135 பேர் - இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டதால், அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்துவது சந்திரபாபு நாயுடுவுக்கு ஒரு கடினமான பணியாக இருக்கும்.
இருப்பினும், தேர்தலுக்கு முன்னர் கூட்டணி அமைப்பின் போது ஏற்பட்ட புரிதலின்படி, கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பித்தாபுரம் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவியை சந்திரபாபு நாயுடு வழங்க வாய்ப்புள்ளது. அநேகமாக அவருக்கு வீடு மற்றும் ஊரக வளர்ச்சித் துறையும் சேர்த்து வழங்கப்படும்’’ என்றார் அவர்.
இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத ஜன சேனா கட்சி நிர்வாகி கூறியதாவது,’’ஆரம்பத்தில், பவன் கல்யாண் அமைச்சரவையில் சேரத் தயங்கினார். ஏனெனில் அடுத்த ஒரு வருடத்தில் முடிக்க வேண்டிய சில படங்கள் கைவசம் இருந்தன. இருப்பினும், அவர் அமைச்சரவையில் சேர முடிவு செய்தார். ஏனெனில் அது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அவருக்கு சில பொறுப்புணர்வை அளிக்கும்.
பவன் கல்யாண் மாநில அமைச்சரவையில் தனது கட்சிக்கு ஐந்து அமைச்சர் பதவியைக் கேட்டுள்ளார். ஆனால், சந்திரபாபு நாயுடு தனது சொந்த கட்சிக்குள்ளேயே அவர் எவ்வாறு அழுத்தத்தின் கீழ் இருக்கிறார் என்பதை விளக்கி, துணை முதல்வர் பதவி உட்பட நான்கு ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ.க்களை அமைச்சரவையில் சேர்க்க ஒப்புக் கொண்டார்.
பவன் கல்யாணைத் தவிர, தெனாலியைச் சேர்ந்த நாடெண்ட்லா மனோகர், அனகாபள்ளியைச் சேர்ந்த கோனதலா ராமகிருஷ்ணா, அவனிகட்டாவைச் சேர்ந்த மண்டலி புத்த பிரசாத் மற்றும் நெல்லிமார்லாவைச் சேர்ந்த லோகம் நாக மாதவி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்படுகின்றன. புத்த பிரசாத்துக்கு அமைச்சர் பதவியை வழங்க முடியாவிட்டால், அவருக்கு துணை சபாநாயகர் பதவி வழங்கப்படலாம்’’ என்று ஜனசேனா நிர்வாகி கூறினார்.
பாஜகவுக்கு என்ன ஆதாயம்?
இதற்கிடையில், பாஜகவுக்கு இரண்டு அமைச்சரவை பதவிகள் கிடைக்கக்கூடும். விஜயவாடா (மேற்கு) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சுஜனா சவுத்ரி என்று பிரபலமாக அறியப்படும் முன்னாள் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி மற்றும் தர்மாவரத்தைச் சேர்ந்த ஒய்.சத்ய குமார் ஆகியோருக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கக்கூடும். முன்னாள் அமைச்சர் காமினேனி ஸ்ரீனிவாஸின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது.
தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களில், சந்திர பாபு நாயுடு சாதி மற்றும் பிராந்திய சமன்பாடுகளை சமநிலைப்படுத்தும் ஒரு பட்டியலை உருவாக்கி வருகிறார். மங்களகிரி சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது மகனும் முன்னாள் அமைச்சருமான நர. லோகேஷ், அமைச்சரவையின் ஒரு பகுதியாக இருப்பார். மேலும் சந்திரபாபு நாயுடு அரசாங்கத்தின் முந்தைய பதவிக்காலத்தில் அவர் வகித்த நகராட்சி நிர்வாகம் மற்றும் நகர்ப்புற மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை இலாகாக்களைப் பெறுவார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு கட்சி நிர்வாகி கூறினார்.
மூத்த உறுப்பினர்களான யனமலா ராமகிருஷ்ணுடு, கே.அட்சென்னைடு, துலிபல்லா நரேந்திரா, கோரண்ட்லா புச்சையா சவுத்ரி, காந்தா சீனிவாச ராவ், பையவுல கேசவ், பி.நாராயணா மற்றும் கே.ரகு ராமகிருஷ்ண ராஜு ஆகியோரின் பெயர்களும் அமைச்சரவை பதவிகளுக்கு பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
டாபிக்ஸ்