Pa.Ranjith: ‘குடிச்சு குடிச்சே கல்லீரல் போச்சு.. அம்மாவ அப்படி கஷ்டப்படுத்தி.. தற்கொலை பண்ணவே போயிட்டேன்’ -பா.ரஞ்சித்
அஞ்சலை என்ற ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த அஞ்சலை தான் என்னுடைய அம்மா.. என்னுடைய ஆசையே என்னுடைய அம்மா கஷ்டப்பட்டது போல என்னுடைய மனைவியோ, குழந்தைகளோ கஷ்டப்படக் கூடாது என்பதுதான் - ரஞ்சித்

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா. ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய ரஞ்சித், ‘நான் அப்போது 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் இரவில் தனியாக அமர்ந்திருந்த நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அதற்கு காரணம், இந்த பாட்டல் ராதா திரைப்படத்தில் வரக்கூடிய அந்த கதை கருவான குடி போதைதான். என்னுடைய அம்மா தினம் தினம் கஷ்டப்பட்டு கொண்டே இருந்ததை பார்க்கும் பொழுது, ஒரு கட்டத்தில் நான் நொறுங்கி விட்டேன்.
தினம் தினம் ரணம்
தினம் தினம் அதைப் பார்த்து நடந்ததினால் இந்த படத்தின் இயக்குனரும் என்னுடைய நண்பருமான தினகரன் இதுபோன்ற ஒரு ஸ்கிரிப்டை என்னிடம் கொடுத்தும் போது எனக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. எப்படி இவனுக்கு இது புரிந்தது என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த படத்தில் அஞ்சலை என்ற ஒரு கதாபாத்திரம் வருகிறது. அந்த அஞ்சலை தான் என்னுடைய அம்மா.. என்னுடைய ஆசையே என்னுடைய அம்மா கஷ்டப்பட்டது போல என்னுடைய மனைவியோ, குழந்தைகளோ கஷ்டப்படக் கூடாது என்பதுதான்.
ஊரில் திருவிழா என்றால் எல்லோர் வீடும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். ஆனால் எங்கள் வீடு அப்படி இருக்காது. காரணம் என்னுடைய அப்பா; அப்பா எங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் சரியாகவே செய்தார். ஆனால், குடி என்று வரும் பொழுது, அவர் அவரை இழந்து விடுவார். ஆனால், கடைசி காலத்தில் அவர் வாழ வேண்டும் என்று நினைத்தார்.
வாழ வேண்டும் என்று நினைத்தார்
நான் பெரிய ஆளாக ஆன பின்னர் அவர் அதை எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு கல்லீரல் கோளாறு ஏற்பட்டு விட்டது. ஒரு கட்டத்தில் முற்றிலுமாக அது செயலிழந்ததால், அவரால் வாழ முடியவில்லை.
மருத்துவர்கள் அவர் இன்னும் ஆறு மாத காலம் உயிரோடு இருப்பார் என்று சொல்லி இருந்தார்கள்; ஆனால் அவர் ஒரு வாரத்திலேயே இறந்து விட்டார். அது எனக்கு மிகுந்த கவலையை தந்தது அதிலிருந்து எப்படி நான் வெளியே வந்தேன் என்று தெரியவில்லை.
குடி ஒரு நோய்
உண்மையில் குடிப்பவர்களை பார்த்தால் நாம் கோபப்படுகிறோம்; ஆனால் உண்மையில் அது ஒரு மிகப்பெரிய நோய். அது ஒரு பழக்கமாக அவர்களிடம் மாறி இருக்கிறது. அவர்கள் தங்கள் குடியால் அவர்களை இழந்து எப்படி செயல்படுகிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்வதற்கே நமக்கு நேரம் பிடிக்கும். இந்த மாதிரியான சிறு பட்ஜெட் படங்களை திரையரங்குக்கு கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருக்கிறது; ஆனால் அதைப் பார்த்து நாங்கள் பயப்படவில்லை.
காரணம் நீலம் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வெளியாகும் படங்களின் நோக்கம் வெற்றி மட்டுமே கிடையாது; மக்களிடம் திரைத்துறைக்கு புதிதாக வருபவர்களிடம் அது என்ன மாதிரியான மாற்றத்தை உருவாக்குகிறது என்பதையும் பார்க்கிறோம். இந்த படம் குறித்து இங்கு பேசியவர்கள் நல்விதமாக பேசியது எனக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
என்னுடைய படங்கள் மட்டுமல்லாமல் என்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் படங்களையும் மிகவும் கருணையற்ற விமர்சிக்கிறார்கள். ஆனால் அதற்காக நான் இப்படி விமர்சனம் செய்யாதீர்கள் என்று நான் கூற மாட்டேன் எங்களைப் பற்றி பேசுவதே எங்களுக்கு பெரிய விஷயம் தான்’என்று பேசினார்.

டாபிக்ஸ்