தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Paradesi Is A Film That Exposes The Misery Of The Lives Of Tea Plantation Workers

11 Years of Paradesi: 'தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்வின் அவலத்தை தோலுரித்த படம் பரதேசி' மனதை பிழிந்த அடிமைகளின் ஓலம்!

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 15, 2024 06:00 AM IST

Director Bala: ரெட் டீ என்ற நாவலை தழுவி இரா.முருகவேள் எழுதிய எரியும் பனிக்காடு நாவலை தழுவி பாலா இயக்கிய படம் பரதேசி. வெள்ளை கார சாம்ராஜ்யம் இங்கு உருவாகும் வரை டீ பயன்பாடு யாருக்கும் தெரியாது. இங்கே தேநீருக்கான தேயிலை தோட்டங்களை உருவாக்கி அதன் பின்னணியில் நடைபெறும் கொடுமைக்கதை தான் பரதேசி.

பரதேசி
பரதேசி

ட்ரெண்டிங் செய்திகள்

1930 காலத்தையொட்டி எடுக்கப்பட்ட பீரியட் மூவி. வெள்ளை கார சாம்ராஜ்யம் இங்கு உருவாகும் வரை டீ பயன்பாடு யாருக்கும் தெரியாது. இங்கே தேநீருக்கான தேயிலை தோட்டங்களை உருவாக்கி அதன் பின்னணியில் நடைபெறும் கொடுமைக்கதை தான் பரதேசி.

அதர்வா, தன்ஷிகா, வேதிகா குமார் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். அதர்வா ராஜாவாகவும், வேதிகா அங்கம்மாவாகவும், தன்சிகா மரகதமாகவும், ஹரிணி வள்ளியாக, தனலட்சுமியும் ரித்விகா கருத்த கன்னியாகவும், புவிசா மனோகர் எலிசபெத் ஆகவும், கார்த்திக் தங்கராசுவாகவும், ஜெர்ரி கங்காணியாகவும், கல்பனா ஶ்ரீ அங்கம்மாவேதிகாவின் அம்மாவாகவும், சிவசங்கர் பரிசுத்தமாகவும், படத்தில் கதாபாத்திரங்களாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கொடூரமான முறையில் நடத்தும் முறையும், அடிமைத்தனமும், பாலியல் பலாத்காரமும், இரக்கமற்ற தண்டனைகளுமாய் படம் நெடுக விரவி கிடக்கிறது. திங்கிற சோத்துக்கு எந்த கேள்வியும் கேட்காம கொத்தடிமையாய் கிடக்கும் அவலத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக இயல்பாக படமாக்கி இருக்கிறார் பாலா. இயக்குனர் பாலாவோடு சேர்ந்து செழியனின் ஒளிப்பதிவு நம்மை கதைக்குள் மிகவும் நெருக்கமாக கொண்டு செல்கிறது. இந்த முதிர்ச்சியான கதைக்கு ஜி.வி.பிரகாஷ் அமைத்திருக்கும் இசை சோகத்தையும் துயரத்தையும் படத்தில் இழையோட வைத்து நமது மனதை பிசைகிறார்.

மேலும் படிக்க: 

ஒரு கிராமத்தில் வாழும் ஆவரேஜ் இளைஞனாக ராஜா என்ற கதாபாத்திரத்தில் ஜாலியாக போகிற போக்கில் வாழும் இளந்தாரியான அதர்வா. அவர் பாட்டியின் பராமரிப்பில் வாழ்ந்து வருகிறார். உள்ளூரில் வசிக்கும் அங்கம்மாவாக வேதிகா பதுமையாக வருகிறார். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் முளைத்து பற்றி கொள்கிறது.

 

பொறுப்பு இல்லாத பயலுக்கு பொண்ணு கொடுத்து விட்டு யார் சிரமப்படுவது என்று மனசு அலைபாயும் வேதிகாவின் அம்மா. பொசுக்குன்னு ரோசப்பட்ட ராசா பக்கத்து ஊருக்கு பொழப்பு தேடிப் போறதில் இருந்து கதையும் சூடு பிடிக்கிறது. அங்கு அவருக்கு கங்காணி ஒருவருடன் தொடர்பு ஏற்படுகிறது. அந்த கங்காணி ராஜாவையும், அவருடன் சேர்ந்து சில கிராமவாசிகளையும் சேர்த்து அழைத்து கொண்டு மலைக்கிராமம் ஒன்றில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணியமர்த்துகிறார். இலவசமாக தங்குமிடம் உணவு கைநிறைய சம்பளம் என்று பொய்யான வாக்குறுதிகளை நம்பி வேலைக்கு சேர்ந்த இடத்தில் நடப்பது அத்தனையும் கொடுமைகளும் மனித உரிமை மீறல்களுமாக இருக்கிறது.

எந்தவித எதிர் கேள்விகளும் கேட்க முடியாது. ஏனெனில் வேலைக்கு சேரும் போது ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்தும் கைநாட்டுமாய் எழுதி வாங்கி அடிமையாக மாற்றி விடுகிறார்கள். அங்கே தனி ராஜ்யம் தான். அடித்து மிதித்து உழைப்பையும் சுரண்டி பிழைக்கும் அதிகார கும்பல் முன்பு மண்டியிட்டு கிடப்பதை தவிர வேறு எதுவும் இல்லை. அந்த அடிமை கூட்டத்தில் மரகதம் என்ற பெண்ணையும் அவரது மகளையும் ராஜா சந்திக்கிறான். அவளிடம் பேசும் போது அந்த பெண்ணின் கணவர் இந்த முகாமில் இருந்து தப்பித்து ஓடிய ஒரே ஒரு ஆள் என்று தெரிகிறது. அவர்களோடு ஊர் கதையை பேசி கொண்டே இருப்பான்.

இந்த நிலையில் அங்கம்மாவாம் கர்ப்பமாக இருக்கும் செய்தியும் வந்து சேரும். இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்து செல்வதையும் தவிர வேறு வழியில்லை என்று கருதி தீவிரமாக முயற்சி செய்கிறான். முயற்சி தோற்கடிக்கப்பட தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் அங்கம்மா மரகதம் என்ன ஆனார்கள். ராஜாவோடு கிராம வாசிகளுக்கு நிம்மதியாக ஊர் திரும்ப முடிந்ததா என்று சோகங்களும் துயரங்களையும் சுமந்து கொண்டு நகர்கிறது இந்த யதார்த்த சினிமா. படம் நெடுகிலும் அடிமைகளின் ஓலம் நமது மனதையும் பிழிகிறது.

முதன் முறையாக பாலா படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதி இருக்கிறார். மொத்தத்தில் ஐந்து பாடல்கள். இந்த படத்தில் ஆடை அமைப்புக்காக பூர்ணிமா ராமசாமி தேசிய விருது பெற்றார். பிலிம்பேர் விருதுகள் உட்பட பல முக்கிய விருதுகள் பல பிரிவுகளில் இந்த படத்துக்கு கிடைத்தது.

மொத்தத்தில் ஒருகாலத்தில் நடைபெற்ற கொத்தடிமைத்தனத்தை சோகங்களும் துயரங்களுமான வாழ்க்கையை அந்த அழுக்கு மனிதர்களின் மனதையும் நமக்கு நெருக்கமாக இயல்பாக எந்தவித ஜோடனையுமின்றி அப்பட்டமாக காட்டிய சினிமா.

இது கதையல்ல. இன்னும் வாழ முடியாது போயிருக்கும் பல மனிதர்களின் புதிய வழித்தடத்துக்கான முயற்சி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

Google News: https://bit.ly/3onGqm9

IPL_Entry_Point

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்