Pa Ranjith: எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை..யாவரும் சாதியவாதிகளே.. ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு - பா. ரஞ்சித்
Director Pa Ranjith: ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு பார்க்கப்படுகிறது. அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை. சமூக நீதி ஆட்சியில் போலீஸ் காவிமயமாகிறது என்று பா. ரஞ்சத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருகிறார் பா. ரஞ்சித். தற்போது சார்பட்டா 2 படத்தின் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார்.
பொங்கலை முன்னிட்டு உலக அளவில் புகழ் பெற்ற மதுரை பாலமேடு, அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலகலமாக முடிவடைந்துள்ள நிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு பார்க்கப்படுவதாக இயக்குநர் பா. ரஞ்சித் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆண்ட பரம்பரைக்கு திராணி இல்லை
இதுதொடர்பாக அவர் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் நீலம் சோசியல் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், "ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய நாம்தான், அதிலும் சாதி உள்ளது என்றவுடன் மௌனம் காக்கிறோம்! ஜல்லிக்கட்டைத் தடை செய்தபோது, ஒட்டுமொத்த தமிழகமும் போராடிய தருணத்தில், அது எங்கள் சாதிக்கான விளையாட்டு எனச் சொல்வதற்கு எந்த ஆண்ட பரம்பரைக்கும் திராணி இல்லை.
ஆனால், இன்று அது எங்களுக்கான விளையாட்டு எனக் கருதி அதிலும் சாதியப் பாகுபாட்டைக் கடைபிடிப்பது இழிவான மனநிலை என்றே சொல்ல வேண்டும். இதைக் கண்டிக்காமல் கள்ள மௌனம் காக்கும் யாவரும் சாதியவாதிகளே" என குறிப்பிட்டுள்ளார்.
காவி மயமாகும் காவல்துறை
அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் முன்விரோத தகராறு தொடர்பாக சமாதான பேச்சுவார்த்தைக்கு போலீஸார் சென்றபோது, அவர்கள் முன்னிலையிலேயே இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு காவி மயமாகிய காவல்துறை என இயக்குநர் பா. ரஞ்சித் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பகிர்ந்திருக்கும் பதிவில், "பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கைகளத்தூர் பகுதியைச் சேர்ந்த தலித் இளைஞர் மணிகண்டன் மீது முதல்வரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய காவல்துறையின் மெத்தப்போக்கினால், அவர்களின் கண்முன்னே சமூக விரோதிகளான சாதி வெறியர்களால் நிகழ்த்தப்பட்ட சாதியப் படுகொலை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போனதற்கு மற்றுமோர் சாட்சி" என குறிப்பிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டிலும் சாதிய பாகுபாடு
முன்னதாக, கடந்த 15ஆம் தேதி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இருமுறை முதல் பரிசு வாங்கிய தமிழரசன் என்ற மாடுபிடி வீரர் சாதிய பாகுபாடு காரணமாக புறக்கணிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுபற்றி தனது நீலம் பண்பாட்டு மையம் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்த பா. ரஞ்சித், "மதுரை ஜல்லிக்கட்டில் சாதி பாகுபாடு! இருமுறை முதல் பரிசு வென்ற வீரர் தமிழரசன் என்று அனைவரும் அறிந்தும் திட்டமிட்டு டோக்கன் அளிக்காமல் நேரத்தை வீணடித்துள்ள நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கிறோம்.
அமைச்சர் மூர்த்தி தனது சாதி சேர்ந்த வீரருக்கு மட்டும் ஆதரவாக இருப்பதும், போராடி டோக்கன் வாங்கியும் தன்னை ஜல்லிக்கட்டில் அனுமதிக்கவில்லை. களமிறங்க முயற்சித்தும் காவல்துறை ஒருபக்கம் தாக்கினார்கள். இதற்கு முழு காரணம் சாதிதான் என்று குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழரசன் கண்ணீர் பேட்டி சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாக மாறியுள்ளன. வீரர் தமிழரசன் புறக்கணிக்கத்திருப்பது ஏன் ???" எனவும் தெரிவித்திருந்தார்.
அடுத்தடுத்த நாள்களில் தொடர்ந்து ஆளும் அரசால் நிகழ்த்தப்படும் சாதி பாகுபாடுக்கு எதிராகவும், சட்ட ஒழுங்கு சீர்குலைவு பற்றியும் தனது கண்டனங்களை இயக்குநர் பா. ரஞ்சித் வெளிப்படுத்தி வருகிறார்.
சார்பட்டா அப்டேட்
தனது துணை இயக்குநர் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பா.ரஞ்சித், "சார்பட்டா பரம்பரை 2 படத்தின் இறுதி காட்சியை எழுதி முடித்துவிட்டேன். ஒரு படத்தை எழுதி முடிப்பதுபோல் மகிழ்ச்சியான விஷயம் வேறு எதுவுமில்லை.
ஏற்கனவே திரைக்கதை ஆசிரியர் தமிழ் பிரபா இதன் திரைக்கதையை ஒரு முறை எழுதிவிட்டார். நான் எனது பாணியில் மீண்டும் ஒருமுறை இதனை எழுதி பார்த்தேன். எழுதும்போது எனக்கு கிடைத்த இந்த சந்தோஷம் துணை இயக்குநர் அவருடைய புத்தகத்தை முடித்ததும் அவர் முகத்திலும் இருந்ததைப் பார்த்தேன்" என்று கூறினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்