மன்னர்கள் செய்த வேலையை பிரதமர் செய்திருக்கிறார்.. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும் - இளையராஜா!
‘இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல்முறையாக நடக்கிறது. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம்’

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான திரைத்துறை பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். திரைத்துறை பிரபலங்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தனுஷ், அபிஷேக் பச்சன், கங்கணா ரனாவத் உள்ளிட்ட பல திரைத்துறை பிரபலங்களும், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்ட விளையாட்டுத்துறை பிரபலங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோயில் கருவறை ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது. அதன்பின்னனர், பால ராமர் பிரதிஷ்டை அடுத்து, பிரதமர் மோடி தீப ஆராதனை காட்டி வழிபாடு செய்தார். பிரதமர் மோடி மட்டுமின்றி பல்வேறு தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
நாடு முழுக்க உள்ள பக்தர்கள் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தைக் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பல்வேறு இடங்களிலும் கும்பாபிஷேக நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பப்பட்டன. இதற்கிடையே சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாரத கானா சபையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் இளையராஜா பேசுகையில், "இன்றைய நாளில் நடக்கும் நிகழ்வு சரித்திரத்தில் இடம்பெறக் கூடியது. இதுபோன்ற நிகழ்வு இதுதான் முதல்முறையாக நடக்கிறது. உலகிலேயே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை என்று சொல்லலாம். வரலாற்றில் முதல்முறையாக இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழைப் பெற்றுத் தரும். இந்த காரியத்தை முடித்த நமது பிரதமர் மோடிக்கு இந்த ஆழியாகப் புகழ் சென்று சேரும். யாருக்குக் கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும் இது.
அனைவராலும் இது செய்ய முடியுமா என்ன. அவருக்கு எழுதி இருக்கு பாருங்க. பிரதமர் நரேந்திர மோடிக்கு என்று கடவுள் எழுதியுள்ளார். இந்தியாவுக்கு எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். எது சரித்திரத்தில் நிற்கிறது என்று பாருங்கள்.மோடி செய்த காரியம் இருக்கிறதே சொல்லும் போதே கண்களில் நீர் வருகிறது.
இந்த நாளில் உங்கள் முன்பு இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது எனக்கு மிகவும் மனநிறைவைத் தருகிறது. அதேநேரம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான் இப்போது இங்கே இருப்பது எனக்கு வருத்தத்தை அளித்தாலும் உங்களுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கொஞ்சம் ஆறுதலைத் தருகிறது.
இந்தியாவில் எத்தனையோ கோயில்கள் இருக்கின்றன. அந்தந்த பகுதிகளில் ஆண்ட மன்னன் கட்டிய கோயிலாகத்தான் அது இருக்கும். மொத்த இந்தியாவுக்குமான கோயிலாக ஒன்று உருவாகியிருக்கிறது என்றால், அது அயோத்தி ராமர் கோயில்தான். மன்னர்கள் கோயில்களைக் கட்டிய நிலையில், ராமர் பிறந்த இடத்திலேயே அவருக்காக கோயில் கட்டியுள்ளார் பிரதமர் மோடி. பிரதமரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்” என்று அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்