Amaran: 100 நாட்களைக் கடந்த அமரன்.. கொண்டாட்ட மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்ட படக்குழு..
Amaran: அமரன் திரைப்படம் வெளியாகிய 100வது நாளை முன்னிட்டு படத்தின் இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பு நிறுவனம் மக்களுக்கு நன்றி கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

Amaran: தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். இது ஒரு மாதத்தை கடந்து தியேட்டரில் வசூல் சாதனை புரிந்து வந்த நிலையில், ஓடிடியிலும் மக்கள் மனதை கவர்ந்தது.
இந்நிலையில், அமரன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதையடுத்து, அமரன் படக்குழுவினர், ரசிகர்களுக்கும், மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.
என்றென்றும் நன்றி உள்ளவன்
அமரன் படம் 100வது நாளை இன்று கடக்கும் நிலையில், படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, தனது எக்ஸ் தள பக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "#100வது அமரன் தினத்தில் இதை எழுத விரும்பினேன்
அன்புள்ள இந்து ரெபேக்கா வர்கீஸ் மேடம், நீங்கள் நேர்த்தியான ஆளுமை. நீங்கள் எடுத்த அனைத்து முடிவுக்கும் நன்றி. மேஜர் முகுந்த் வரதராஜன் சார் மற்றும் உங்களை சினிமாவில் எல்லா சுதந்திரத்துடனும் நம்பிக்கையுடனும் அழியாமல் இருக்க என்னையும் எங்கள் குழுவையும் அனுமதித்த உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்!
என் வாழ்க்கையிலும் அமரனுடன் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையிலும் நீங்கள் ஒரு முத்திரையை பதித்துள்ளீர்கள்." எனக் கூறியுள்ளார்.
நன்றி சொன்ன சிவகார்த்திகேயன்
அமரன் 100வது நாளை ஒட்டி, நடிகர் சிவகார்த்திகேயன் அவரது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமரன் படம் குறித்த ஆரம்ப பேச்சுவார்த்தை முதல் படப்பிடிப்பு முடிந்த தருணம் வரையிலான க்ளிப்பிங்ஸை இணைத்து பிண்ணனியில் பாடல் ஒலிக்க விட்டு வீடியோவை பதிவிட்டுள்ளார். மேலும், அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
போஸ்டர் வெளியிட்ட ராஜ் கமல் பிலிம்ஸ்
அமரன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர் நேஷனல் பிலிம்ஸ், தனது எக்ஸ் தள பக்கத்தில் அமரன் படத்தின் தூண்களான இயக்குநர், கதா நாயகன், நாயகி, இசையமைப்பாளருக்கு போஸ்டர் டிசைன் தயாரித்து வெளியிட்டுள்ளது.
அத்துடன், நீங்கள் இல்லாமல், இந்த கனவானது கலையாக மாறி இருக்காது. உங்கள் காதல் ஒரு வீரமான கதையை உயிர்ப்பித்தது. எங்களின் ஆர்வத்தை ஒரு தலைசிறந்த படைப்பாக மாற்றியது. இதற்காக அனைத்து பார்வையாளர்களுக்கும் அமரன் படக் குழுவினருக்கும் நன்றி எனத் தெரிவித்துள்ளது.
நன்றி சொன்ன ஜிவி பிரகாஷ்
அமரன் படத்திற்காக வெளியிட்ட போஸ்டரை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த ஜிவி பிரகாஷ், அமரன் 100வது நாளைக் கொண்டாடும் ரசிகர்களுக்கும், படக்குழுவிற்கும் நன்றி தெரிவித்தார்.
இராணுவ வீரரின் உண்மைக் கதை
அமரன் படம் காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கொண்டுள்ளது. உண்மைக் கதை என்பதால் படம் வெளியாகும் முன்பே படத்திற்கு அதிக வரவேற்பு இருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பயன்படுத்திய பெரிய ரக துப்பாக்கி உண்மையானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழ்ந்து காட்டிய நடிப்பு அரக்கர்கள்
நடை, உடை, பாவனை, கட்டு மஸ்தான உடம்பு என முகுந்தின் ஒட்டு மொத்த உருவமாக இதுவரை நாம் பார்க்காத நடிகராக சிவகார்த்திகேயனை மாற்றி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். நடிப்பிலும் முழுக்க முழுக்க வேறொரு களத்தில் இறங்கி, மீண்டும் ஒரு பரீட்சார்த்த முயற்சியை கையில் எடுத்து அதில் வெற்றியும் பெற்று இருக்கிறார் சிவா. ஒரு இராணுவ வீரனுக்கான மிடுக்கு ஒரு பக்கம் கவர, இன்னொரு பக்கம் அவர் நடிப்பில் வெளிப்பட்ட எமோஷன் திரையை சிதற விடுகிறது. இதனால், ஏற்கனவே படம் பார்த்தவர்களும் கூட, இவர்களின் நடிப்பால் ஈர்க்கப்பட்டு தியேட்டருக்கு திரும்பத் திரும்ப வருகின்றனர்.
திரும்பத் திரும்ப தியேட்டர் சென்ற ரசிகர்கள்
தாங்கள் எதிர்பார்க்காத ஒன்றை அமரன் படம் வழங்கியதால், நாளுக்கு நாள் தியேட்டருக்கு சென்று அமரன் படம் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தை திரும்பத் திரும்ப வந்து தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களும் அதிகரிக்கத் தொடங்கினர்.
இதனால், நாளுக்கு நாள் அமரன் படத்தின் வசூல் அதிகரிக்கத் தொடங்கியது. அந்த சமயத்தில், வெளியான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அமரன் படத்தின் வசூலை பாதிக்குமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தை அடித்து நகர்த்தி தொடர்ந்து அமரன் முன்னேறி வந்தது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்