Ajithkumar: ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்.. ஆறு மாதங்கள் மட்டுமே தான் நடிப்பு.. அப்புறம்! அஜித்குமார் சொன்ன விஷயம்
Ajithkumar on Racing: ரேஸிங் சீசனில் அதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். ரேஸிங் இல்லாத காலகட்டத்தில் திரைப்படங்களில் கமிட்டாகி நடிப்பேன் என்று சர்வதேச ரேஸிங் நிகழ்வின்போது அளித்த பேட்டியில் நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகரான அஜித்குமார் நடிப்பு தவிர ரேஸ் விளையாட்டிலும் பங்கேற்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அத்துடன் போட்டோகிராபி, சமையல், துப்பாக்கி சுடுதல் போன்றவற்றின் மீது மிகவும் ஆர்வம் மிக்கவராகவும் உள்ளார். இந்தியா முழுவதும் பைக்கிலேயே சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் குமார், தற்போது துபாயில் நடைபெற்று வரும் சர்வதேச கார் ரேஸ் பந்தயத்தில் பங்கேற்றுள்ளார்.
அஜித்குமார் ரேஸிங் என்ற அணியை உருவாக்கி துபாயில் ஜனவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறும் 20வது சர்வதேச ரேஸிங் பந்தயத்தில் பங்கேற்கிறார் அஜித்குமார். இதற்காக தீவிர பயிற்சியும் மேற்கொண்டு வருகிறார். பயிற்சியில் இடையில் போட்டி அமைப்பாளர்களிடம் பேட்டியளித்த போது ஷாக் தகவல் ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார் அஜித்குமார்.
ரேஸிங்கில் மட்டும் முழு கவனம்
"செப்டம்பர் மாதம் வரை கார் ரேஸ் பந்தயம் நடைபெற உள்ளது. இந்த கார் ரேஸ் பந்தயம் முடியும் வரை நான் எந்தவொரு படத்திலும் நடிக்க மாட்டேன். கார் ரேஸிங் இல்லாத நேரங்களில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் படங்களில் நடிப்பேன். அதனால் யாரும் கவலைப்பட வேண்டாம். ரேஸிலும் முழு கவனம் செலுத்த முடியும். தற்போது விளையாட்டில் அதிக கவனம் செலுத்த விரும்புகிறேன். ட்ரைவராக மட்டுமில்லாமல் ஓனராகவும் அதை செய்ய நினைக்கிறேன்.
18 வயதில் கார் பந்தயத்தில் ஈடுபடத் தொடங்கினேன். அதன்பின்பு, சினிமாவில் நடித்து வந்ததால் பங்கேற்கவில்லை. 2010ஆம் ஆண்டு யூரோப்பியன் 2 பந்தயத்தில் பங்கேற்க களமிறங்கினேன். ஆனால், பங்கேற்க முடியவில்லை. தற்போது ரேஸிங் தொடருக்கு ஒரு உரிமையாளராக வந்துள்ளேன்." என்றார்.
சினிமா மற்றும் ரேஸிங்கை பேலன்ஸ் செய்கிறேன்
தொடர்ந்து பேசிய அவர், "2003இல் ஃபார்முலா BMW ஆசிய சாம்பியன்ஸிப்பிலும், 2004இல் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 ரேஸில் பங்கேற்றேன். ஆனால் இவற்றில் என்னால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. அதற்கு பிறகு 2010இல் யுரோப்பியன் ஃபார்முலா 2 ரேஸில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது, அதிலும் சினிமாவில் இருந்த கமிட்மெண்டகளால் முழுமையாக பங்கேற்க முடியவில்லை. சினிமா, ரேஸ் இரண்டிலும் சமமாக பேலன்ஸ் செய்யவேண்டிய நிலை இருந்தது" என்று கூறினார்.
அஜித்குமார் ரேஸிங் அணி
துபாயில் நடைபெற்று வரும் PORSCHE 992 GT 3 பிரிவிலான கார் ரேஸ் போட்டியில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்றுள்ளது. நடிகர் அஜித்குமார் தலைமையிலான அணியில் Fabian duffeiux, mathew deutry, Cam McLeod என மூன்று ஓட்டுனர்கள் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் 5 ரேஸ் போட்டிகளில் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்க உள்ளது. அஜித்குமார் தன்னுடைய அணிக்காக களத்தில் இருக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
அடுத்தடுத்து இரண்டு படங்கள்
அஜித்குமார் நடிப்பில் நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வந்த விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, சென்சார் செய்யப்பட்டுள்ளது. படத்தின் கதை, பிரபல ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் தழுவல் என்பதால், அதை தயாரித்த ஹாலிவுட் நிறுவனம் சார்பில் உரிமை தொகை கேட்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இருப்பினும் இம்மாத இறுதியில் படம் வெளியாகும் என தகவல்கள் உலா வருகின்றன.
இதற்கிடையே மிகவும் குறுகிய காலத்தில் அஜித்குமார் நடித்து முடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர் படமான குட் பேட் அக்லி படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்தடுத்து அஜித்குமார் படங்கள் இந்த ஆண்டில் வெளியாக இருப்பது ரசிகர்களை ஒரு வகையில் குஷிப்படுத்தினாலும், இந்த படங்களுக்கு பின்னர் வரும் அக்டோபர் வரை அடுத்த படத்தில் நடிக்கபோவது இல்லை என்று அஜித்குமாரே சொல்லி இருப்பது ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.
தொடர்புடையை செய்திகள்