விஜய் படத்துக்கு சிக்கலைத் தரும் கமல்.. ஜனநாயகனை குறிவைக்கும் நெட்டிசன்கள்! என்ன நடக்கிறது?
நடிகர் கமல் ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை எனில் தக் லைஃப் படம் கர்நாடகாவில் வெளியாகாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட நிலையில், நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு தற்போது சிக்கல் வந்துள்ளது.

தமிழ் மற்றும் கன்னடம் குறித்த தனது சமீபத்திய கருத்துகளுக்குப் பின்னர், தனது வரும் படம் 'தக் லைஃப்' கர்நாடகத்தில் வெளியிடப்படுவதைத் தள்ளி வைக்க நடிகர் கமல்ஹாசன் ஒப்புக்கொண்டுள்ளார். 'தக் லைஃப்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், 'கன்னடம் தமிழில் இருந்து தோன்றியது' என்று அவர் கூறினார். இதுதொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இந்த சமயத்தில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் பட வெளியீடு கேள்விக்குறியாகி உள்ளது.
ஜனநாயகனுக்கு சிக்கல்
நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதால், அவர் சினிமாவிற்கு முழுக்கு போட நினைத்து இயக்குநர் ஹெச். வினோத்துடன் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம். அதன் பின் முழுநேர அரசியலுக்கு சென்று விடுவேன் என அறிவித்தார். இந்நிலையில், படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், படத்தின் வெளியீட்டிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.