அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!

அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 12, 2025 11:23 AM IST

நடிகர் அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வெற்றிக்குப் பின் அவரது அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி வருகிறது.

அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!
அஜித்தின் அடுத்த டைரக்டர் யார்? ஹீரோயின் எல்லாம் ரெடியா? அப்டேட் தரும் நெட்டிசன்ஸ்!

ரசிகர்களின் காத்திருப்பு

2023 ஆம் ஆண்டு ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படத்திற்கு பின் 2 வருடங்கள் எந்தப் படமும் வெளியாகாத நிலையில், அஜித்தை திரையில் பார்க்க ரசிகர்கள் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில் தான் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படம் வெளியானது.

ஏமாற்றம் தந்த விடாமுயற்சி

இந்தப் படத்தில் அஜித்தின் எந்த மாஸ் காட்சிகளும் இடம் பெறவில்லை. மாறாக, அஜித் சாதாரண மனிதனின் கோபத்தை வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும் என்பதை மட்டுமே காட்டியதால் இந்தப் படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். மேலும், இந்தப் படம் ஆங்கிலப் படத்தின் தழுவல் என்பதால் படத்தின் கதை அனைவருக்குமே தெரிந்ததாலும் இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிதாக வேலை செய்யாமல் போனது.

பசியை தீர்த்த ஆதிக்

இதனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தின் அடுத்த படமான குட் பேட் அக்லி படம் மீது ரசிகர்களின் எக்கச்சக்கமாக இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாக ஆதிக் ரவிச்சந்திரன் தனது படத்தை ரசிகர்களுக்கு விருந்தளித்தார். காட்சிக்கு காட்சி மாஸ் கூட்டி, பஞ்ச், பழைய படங்களின் ரெஃபரன்ஸ் என படம் அதகளம் செய்து பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கியது.

அடுத்த படம் யாரோடு?

இந்தப் படத்தை அடுத்து அஜித் எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார்? யார் அந்தப் படத்தின் இயக்குநர்? யார் கதாநாயகி? யார் தயாரிக்கிறார்? என்ற கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்தது. இதற்கெல்லாம் விடை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அஜித் விரைவாக படப்பிடிப்பை முடித்துவிட்டு, கார் ரேஸிற்கு சென்றார். அங்கு பல வெற்றிகளையும் குவித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.

கேஜிஎஃப் இயக்குநரா?

இந்த சமயத்தில் தான், ரசிகர்களே அஜித் தனது அடுத்த படத்தை யார் இயக்குவார் என்பதை யூகித்து வந்தனர். அஜித் குமார் தற்போது கார் ரேஸ்களில் அதிகம் கவனம் செலுத்தி வரும் நிலையில், குட் பேட் அக்லி படத்தையும் கார் ரேஸையும் முடித்தவுடன் கேஜிஎஃப் படத்தின் மூலம் புகழ்பெற்ற இயக்குநர் பிரசாந்த் நீலின் இயக்கத்தில் அஜித் படம் நடிப்பார் என பல நாட்களாக ஒரு தகவல் வந்த வண்ணமாகவே இருக்கிறது.

புஷ்பா இயக்குநரா?

இவர்களைத் தாண்டி தற்போது புஷ்பா படங்களின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சுகுமார், தான் அஜித்தை வைத்து படம் எடுக்க ஆசைப்படுவதாக சமீபத்தில் கூறி இருந்தார். இது எல்லாம் இப்படி இருக்க, விடாமுயற்சி படம் தோல்வி அடைந்ததால், மகிழ் திருமேனியுடன் இணைந்து அடுத்த படத்தில் நடிக்க தயாராகவும் வாய்ப்பு உள்ளதாக ஒரு தரப்பு கூறி வருகிறது.

மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி?

இந்த சமயத்தில், குட் பேட் அக்லி படம் கொடுத்த வெற்றியை அடுத்து அஜித் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடனே இணைந்து இன்னொரு படம் நடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் கூறப்படுகிறது. இந்தப் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும் இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது.

ஆனால், ஆதிக் இதுபற்றி எதுவும் இப்போதுவரை உறுதியாக கூறவில்லை. அதனால் அஜித்தின் அடுத்த படம் யாருடன் இணைந்து நடக்கும் என்பது குறித்த தகவலுக்கு ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர்.