நேரத்துக்கு கொள்ளி வைக்கும் சோசியல் மீடியா.. காதல் கைகூடலன்னா பராவாயில்ல.. அப்பா அம்மாவ மட்டும்’ - நீலிமா ராணி பேச்சு!
கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. - நீலிமா ராணி பேச்சு!

பிரபல சீரியல் நடிகையான நீலிமா ராணி அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் இணையதளம் நடத்திய அக்னி சிறகே நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார்.
காதல் கைகூட வில்லை என்றாலும் பராவாயில்லை
அதில் அவர் பேசியதாவது, ‘கல்லூரி படிக்கும் பொழுது காதல் வருவது என்பது மிகவும் இயல்பான ஒன்று. சிலருக்கு அந்த காதல் கைகூடும்; பலருக்கு அந்த காதல் கைகூடாது; காதல் கைகூடவில்லை என்பதற்காக நாம் அதன் மீது மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருக்கக்கூடாது. மாறாக நம்முடைய வாழ்க்கையின் மீதும் நம்முடைய கவனம் நகர வேண்டும்.
நீங்கள் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்றாலும், நீங்கள் அது போன்ற எமோஷனை தினசரி வாழ்க்கையில் எதிர் கொண்டு இருக்கிறீர்கள் என்றாலும் பரவாயில்லை; ஆனால், இந்த விஷயத்தில் நீங்கள் அதனை உங்களது வாழ்க்கையின் முதல் அங்கமாக வைத்து, உங்களது கல்வியையும், உங்களது குடும்பத்தையும் அடுத்த இடத்தில் வைக்கப்போகிறீர்களா என்பதை கவனிக்க வேண்டும்.
இன்று கல்லூரி படிக்கும் பல மாணவர்கள் அவர்களது பெற்றோரின் பணத்தில் படிக்க வந்திருப்பார்கள். அப்படி இருக்கும் பொழுது, அவர்களுக்கு நீங்கள் திருப்பி என்ன கொடுக்கப் போகிறீர்கள் என்பது இந்த இடத்தில் மிக முக்கியமான ஒன்று; வாழ்க்கையில் கல்லூரி முடித்து வேலைக்குச் செல்லும் பொழுது, நமக்கு முதலில் கிடைக்கக்கூடியது பொருளாதார சுதந்திரம்.
பெரிய சுதந்திரம் கொடுக்கும்
அது நமக்கு மிகப்பெரிய சுதந்திரத்தை கொடுக்கும். அதனால், நாம் அதன் மூலமாக நமக்கு கிடைக்கக்கூடிய அனுபவங்கள் மீது அதிகமாக கவனம் செலுத்துவோம். ஆனால், அதை தவிர்க்க வேண்டும். அதற்கு ஜர்னல் எழுதுவது உங்களுக்கு கை கொடுக்கும். ஜர்னல் எழுதுவது என்பது, நாம் அன்றைய நாளில் என்ன விதமான எமோஷனில் இருந்தோம் என்பதை கவனிப்பது.
அதாவது அந்த நாளின் எந்தெந்த இடங்களிலெல்லாம் நாம் மகிழ்ச்சியாக இருந்தோம். எந்த இடங்களில் சோர்வாக இருந்தோம் உள்ளிட்ட விபரங்களை எழுதுவது ஆகும்.
நாம் இன்று செல்போனை அதிகமாக பயன்படுத்துகிறோம். ஒரு நாளின் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் அதற்கே சென்று விடுகின்றன. வரும் காலத்தில் பலரும் தனிமையை அதிகம் விரும்பக்கூடிய நபர்களாக மாறுவார்கள் என்று அறிவியல் சொல்கிறது. அதற்கு காரணம் மொபைலில் அதிக நேரத்தை நாம் செலவிடுவதுதான்.
இதற்கு மாற்றாக சில விஷயங்களை நாம் செய்ய வேண்டும். அது என்னவென்றால், தினமும் உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் தலா 10 நிமிடங்கள் பேசுவது. இதை நீங்கள் நிச்சயமாக செய்ய வேண்டும். இப்படி நீங்கள் செய்யும் பொழுது, அந்த நேரமானது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கும்.
பெற்றோருக்கு நேரம் கொடுங்கள்
உங்களுடைய சொந்தங்கள்தான் உங்களது உண்மையான அடித்தளம்; நண்பர்களும் முக்கியம்தான், ஆனால், நண்பர்கள் கடைசி வரை நம்முடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை இருந்தால் சந்தோசம்தான். இல்லையென்றாலும் பராவாயில்லை.
50, 55 வயதில் நம்முடைய பெற்றோர் நம்முடன் இருப்பதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அப்படி இருக்கும் பட்சத்தில், நாம் இந்த நேரத்தில் அவர்களுடன் நேரத்தை செலவு செய்ய வேண்டியது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆகையால் சோசியல் மீடியாவில் பிறரின் வாழ்க்கை பார்த்து நேரத்தை தொலைத்து விடாதீர்கள்’ என்று பேசினார்
