Top Cinema News: நயன்தாரா படம் டீஸர்.. எம்.ஆர்.ராதா லுக்கில் துல்கர்.. வில்லன் நடிகர் கைது! இன்றைய டாப் சினிமா செய்திகள்
Top Cinema News Feb 3: நயன்தாரா - மாதவன் முதல் முறையாக இணைந்திருக்கும் படம் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. எம்.ஆர். ராதா லுக்கில் துல்கர் சல்மான் இருக்கும் காந்தா போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. கத்தி பட வில்லன் கைது, கிராமி விருது வென்ற இந்திய வம்சாவளி பாடகி உள்பட இன்றைய டாப் சினிமா செய்திகளை பார்க்கலாம்

பொங்கலுக்கு வெளியான படங்களில் மதகதராஜா அதன் பின்னர் அடுத்தடுத்த வாரங்களில் வெளியான குடும்பஸ்தன், பாட்டல் ராதா, மிஸ்டர். ஹவுஸ்கீப்பங் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடி வருகின்றன. இதற்கிடையே இன்றைய டாப் சினிமா செய்திகள் பற்றி பார்க்கலாம்
1.நயன்தாரா - மாதவன் நடிக்கும் டெஸ்ட் டீஸர் வெளியீடு
மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க ஸ்போர்ட்ஸ் ட்ராமா பாணியில் உருவாகியிருக்கும் டெஸ்ட் படத்தின் டீஸரை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இந்த படத்தின் மூலம் முதல் முறையாக மாதவன் - நயன்தாரா ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். அதேபோல் மீரா ஜாஸ்மின் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுக்கிறார்
2.எம்.ஆர். ராதா வாழ்க்கை வரலாறு படத்தில் துல்கர் சல்மான்?
லக்கி பாஸ்கர் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் புதிய படத்துக்குக காந்தா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராணா டகுபதியும் நடிக்கிறார். தி ஹண்ட் பார் வீரப்பன் படத்தை இயக்கிய செல்வமணி செல்வராஜ் இயக்கும் இந்த படம் எம்.ஆர். ராதா வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட கதையாக இருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. அதேபோல் படத்தில் தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரில் எம்.ஆர். ராதா போல் இருக்கும் துல்கர் சல்மான் லுக் வைரலாகி வருகிறது.
3.அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட கத்தி பட வில்லன்
பாலிவுட் நடிகரான நீல் நிதின் முகேஷ், தமிழில் விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கத்தி படத்தில் வில்லனாக நடித்திருந்தார். நியூ யார்க் விமான நிலையத்தில் சென்று இறங்கிய போது அதிகாரிகள் அவரது பாஸ்போர்ட்டை பார்த்துவிட்டு உடனே கைது செய்துள்ளனராம். இந்தியர் போல் இல்லை என்று காரணம் சொல்லி அவரை கைது செய்ததாக கூறப்படும் நிலையில் பல மணி நேரம் விசாரணைக்கு பிறகு விடுவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
4.கிராமி விருதை வென்ற இந்திய வம்சாவளி பாடகி
இசை உலகின் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அதன்படி 67வது கிராமி விருதுகளில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாடகி சந்திரிகா டன்டன் (70) விருது வென்றுள்ளார். 'த்ருவேனி' என்ற பாடலுக்காக Best New Age Album என்ற பிரிவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை எம்சிசி கல்லூரியில் படித்த இவர் தற்போது அமெரிக்காவில் தொழிலதிபராக உள்ளார்
5.பிரபல தயாரிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளரான கே.பி. செளத்ரி (44) தனது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். கோவா மாநிலத்தின் வட பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தங்கியிருந்தார். அவரது அறை திறக்கப்படாமல் இருப்பத நிலையில் அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் கே.பி. செளத்ரி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி தெலுங்கு பதிப்பின் தயாரிப்பாளராக இருந்துள்ளார்
6.பிறந்தநாளில் சர்ப்ரைஸ் அறிவிப்பு வெளியிட்ட சிம்பு
நடிகர் சிம்பு பிப்ரவரி 3ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பை வெளியிட்டார். அட்மென் சினி ஆர்ட்ர்ஸ் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கும் சிம்பு தனது 50வது பட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் அவர் தனது 50வது படத்தில் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
7.ஹீரோயினாக அறிமுகமாகும் பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று பிரபலமானவர் ஆயிஷா. இதன் பிறகு பல்வேறு டிவி ஷோக்கள், சீரியல்கள், வெப் சீரிஸ்களில் நடித்து வரும் இவர் ரெமாண்டிக் காமெடி த்ரில்லர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ராவண கோட்டம் போன்ற படங்களில் நடித்த கணேஷ் சரவணன் நடிக்கிறார்.
8.முகேஷுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்
மலையாள சினிமாவில் நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அதன்படி நடிகை ஒருவர், பிரபல நடிகரும் எம்.எல்.ஏவுமான முகேஷ் உள்ளிட்ட சிலர் மீது பாலியல் புகார் கூறியிருந்தார். இதில் போலீசார் விசாரணைக்கு பின் ஜாமீனிவில் விடுவிக்கப்பட்டார் முகேஷ்.
எர்ணாகுளம் நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு, முகேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவருக்கு எதிராக டிஜிட்டல் ஆதாரம் உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
9.சிசிஎல் கிரிக்கெட் போட்டி 2025 அட்டவணை அறிவிப்பு
திரையுலக நட்சத்திரங்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி சிசிஎல் என்ற பெயரில் 2011 முதல் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்குகிறது. மார்ச் 2ஆம் தேதி இந்த தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறுகிறது. இந்த டி20 தொடரில் சென்னை ரைனோஸ், மும்பை ஹீரோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டி ஷேர், போஜ்புரி டப்பாங்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன
10.தொழிலதிபரை மணக்கிறார் நடிகை பார்வதி நாயர்
சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் மணக்க இருக்கும் பார்வதி நாயர், தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.
"பார்டி ஒன்றில் வைத்து தான் எதார்த்தமாக நான் அசோக்கை சந்தித்தேன். அன்று நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். அதன் பின்னர் சில மாதங்கள் கழித்து நெருக்கமானோம். எங்களது திருமணம் உணவில் இருந்து ஹல்தி, மெஹந்தி, சங்கீத் என திருமண சார்ந்த அனைத்து சடங்குகளும் மலையாளி மற்றும் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடக்கும். பிப்ரவரி 6ஆம் தேதி சென்னையில் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு பின் வரவேற்பு கேரளாவில் நடைபெறும்" என கூறியுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்