Nayantara vs Dhanush: நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayantara Vs Dhanush: நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்

Nayantara vs Dhanush: நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 23, 2025 01:58 PM IST

Nayantara vs Dhanush Legal Battle: நானும் ரெளடிதான் படத்தில் அணிந்திருக்கும் நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது என தனுஷ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. தனுஷ் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் கார சாரமாக நடைபெற்றது.

நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்
நயன்தாரா டிரஸ் வரை உரிமை உள்ளது.. நீதிமன்றத்தில் காரா சார வாதம் - நடந்தது என்ன? முழு விவரம்

இந்த விவகாரத்தில், தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்த மனுவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் தரப்பிடம் இருந்து ரூ. 10 கோடி இழப்பீடு கேட்கப்பட்டது. இந்த வழக்கில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்தின் வேண்டுகோள் படி வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. இதன்பேரில் வழக்கு விசாரணையை ஜனவரி 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நாளில் வழக்கின் இறுதி விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்தது.

நயன்தாராவின் டிரஸ் முதல் அனைத்துக்கும் உரிமை உள்ளது

நடிகர் தனுஷ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன்,"நானும் ரெளடிதான் படத்தில் இடம்பெறு்ம ஒவ்வொரு கதாபாத்திரம் உள்பட அனைத்து விஷயங்களுக்கான காப்புரிமை அனைத்தும் என்னிடம் உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா அணிந்திருக்கும் ஆடைகள் மீது கூட காப்புரிமை உள்ளது. மேலும், உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தத்தில் நயன்தாரா கையெழுத்திட்டுள்ளார். எனவே, இதை கருத்தில் கொண்டு வழக்கை தடை செய்யாமல் விசாரணைக்கு எடுக்கொள்ள வேண்டும்" என்ற வாதத்தை முன் வைத்தார்.

தொடர்ந்து, "தனது டாக்குமென்டரியில் நானும் ரெளடிதான் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட பிடிஎஸ் காட்சியாக 28 விநாடி விடியோவை பயன்படுத்தியதன் மூலம், நயன்தாரா பதிப்புரிமை சட்டம் 1957இன் படி விதியை மீறியுள்ளார். எனவே இந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தால் நடத்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டார்.

வழக்கை மும்பையில் நடத்த வேண்டும்

இதன் பின்னர் நெட்பிளிக்ஸ் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பார்த்தசாரதி, உண்டர்பாரின் பதிவு செய்யப்பட்ட அலுவலகம் சென்னையில் இல்லை. மாறாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருப்பதால், இந்த வழக்கை விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. எனவே உண்டர்பாரின் மனுவை நிராகரிக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனம் 1957ஆம் ஆண்டு பதிப்புரிமை சட்டம் 62வது பிரிவின்படி காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்திலோ அல்லது கடிதங்கள் காப்புரிமைச் சட்டம், 1865 இன் பிரிவு 12 இன் படி நெட்பிளிக்ஸ் அதன் பதிவு அலுவலகத்தை கொண்டிருக்கும், மும்பை உயர் நீதிமன்றத்தையோ அணுகியிருக்க வேண்டும்" என்று வாதிடப்பட்டது.

சென்னையில் வழக்கு நடத்த உரிமை உள்ளது

இதற்கு பதில் அளித்த பி.எஸ்.ராமன், 2015ஆம் ஆண்டு நானும் ரெளடிதான் படத்துக்காக நயன்தாரா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, தனுஷின் உண்டர்பார் நிறுவனம் சென்னையில் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் இயக்கி வந்தது. படத்தின் ஒரு பகுதி சென்னையில் தான் படமாக்கப்பட்டது. நெட்பிளிக்ஸ் வெளியிட்ட அந்த ஆவணப்படம் சென்னை உட்பட இந்தியா முழுவதும் வெளியிடப்பட்டது. எனவே, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய உண்டர்பாருக்கு முழு உரிமை உண்டு.

இரு தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி அப்துல் குத்தோஸ், வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

தனுஷ் - நயன்தாரா வழக்கு பின்னணி

நடிகை நயன்தாரா, தனது திருமண ஆவண படத்துக்கு தனது உண்டர்பார் நிறுவனம் தயாரித்த நானும் ரெளடிதான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாக கூறி, ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு தனுஷ் தரப்பில் நயன்தாராவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது.

இதற்கு தனுஷ் மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்து நடிகை நயன்தாரா தரப்பில் வெளியிட்ட அறிக்கை திரையுலகினர் மட்டுமல்லாமல் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

பின், நடிகர் தனுஷின் உண்டர்பார் நிறுவனம் தரப்பில் நெட்பிளிக்ஸ் நிறுவனம் மற்றும் நடிகை நயன்தாராவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், மும்பையை சேர்ந்த நெட்பிலிக்ஸ் நிறுவனத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், தனுஷ் மற்றும் நயன்தாரா தரப்புக்கு இடையேயான பிரச்சனை தமிழக அதிகார வரம்புக்குள் நடைபெற்றுள்ளதால், சென்னை உயர் நீதிமன்றத்திலேயே இந்த உரிமையியல் வழக்கு தொடரலாம் எனஉத்தரவிட்டார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். அந்த வழக்கு நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, நெட்பிளிக்ஸ் நிறுவனம் வழக்கு விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது. இதை ஏற்ற நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

அப்போது, இந்த வழக்கின் விசாரணை வரும் ஜனவரி 22ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வரும். இதற்கு மேல் இந்த வழக்கில் கால அவகாசம் கேட்டக் கூடாது என்று கூறப்பட்டது. அத்துடன் ஜனவரி 22ஆம் தேதி இடைக்கால மனுக்கள் குறித்த விசாரணையும் நடைபெறும் எனக் கூறியது.

இந்த வழக்கின் இறுதி விசாரணையில் இரு தரப்பினரின் கார சார வாதங்களை தொடர்ந்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனுஷின் பழிவாங்கும் நடவடிக்கை

முன்னதாக, நயன்தாரா வெளியிட்ட அறிக்கையில், "தனுஷின் தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாகப் பாதிப்படைந்திருக்கிறோம்.

காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம்பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில், என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும்கொடுமையானது" என தெரிவித்திருந்தார்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.