விரட்டி அடித்தவர்கள் முன் விருட்சமாய் வளர்ந்து நின்ற நடிகை.. மொழி, விருதுகளை கடந்து வென்ற வித்யா பாலன் பிறந்தநாள் இன்று!
தமிழ் சினிமாவில் இருந்து ராசி இல்லாத நடிகை என விரட்டி அடித்தவர்கள் முன் தேசிய விருது, பத்மஸ்ரீ விருது, பிலிம்ஃபேர் விருதுகளை குவித்து வெற்றி நடை போட்ட நடிகை வித்யா பாலனின் பிறந்தநாள் இன்று.

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த வித்யா பாலன் மும்பையில் தான் பிறந்து வளர்ந்தார். சிறு வயது முதலே சினிமாவில் ஈர்ப்பு கொண்ட வித்யா பாலன், ஹம் பாஞ்சின் என்னும் சீரியலில் நடித்தார். ஆனால், அவரது நடிப்பு கேரியருக்கு பெற்றோர் ஆரம்பத்திலேயே தடை விதித்து விட்டனர்.
படிப்பு தான் முக்கியம் என வீட்டில் கண்டிப்பாக சொல்லப்பட்டதால் சமூகவியலில் பட்டப்படிப்பையும், மும்பை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும் படித்து முடித்தார் வித்யா பாலன். இதையடுத்து பல விளம்பரங்களில் நடித்து வந்தார்.
தமிழ் சினிமாவின் ராசி இல்லாத நடிகை பட்டம்
இந்த நிலையில் தான் இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமியின் ரன் படத்தில் கதாநாயகியாக நடிக்க வித்யா பாலனுக்கு வாய்ப்பு கிடைத்தது. இவரை வைத்து சில நாட்கள் படமும் எடுக்கப்பட்ட நிலையில் வித்யா பாலன் படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கமிட் ஆன மோகன் லாலின் சக்கரம் படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. பின் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நீக்கப்பட்டார். இது தொடர் கதையாக மாறியதால், அவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார்.