Vishal Health: விஷால் உடல்நிலை குறித்து அவதூறு.. சேகுவாரா மீது நாசர் புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vishal Health: விஷால் உடல்நிலை குறித்து அவதூறு.. சேகுவாரா மீது நாசர் புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Vishal Health: விஷால் உடல்நிலை குறித்து அவதூறு.. சேகுவாரா மீது நாசர் புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 23, 2025 07:06 PM IST

Nasser Complaint On Vishal Health Issue: விஷால் உடல்நிலை குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடிகர் நாசர் புகார் அளித்திருக்கும் நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷால் உடல்நிலை.. நாசர் கொடுத்த புகார்.. சம்மந்தபட்டவர்கள் மீது ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்
விஷால் உடல்நிலை.. நாசர் கொடுத்த புகார்.. சம்மந்தபட்டவர்கள் மீது ஆக்‌ஷனில் இறங்கிய போலீஸ்

இதையடுத்து படத்தின் ரிலீஸுக்கு முன்னர் ஜனவரி முதல் வாரம் நடந்த மதகஜ ராஜா புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடிகர் விஷால் பேசியபோது, அவரது கைகள் நடுக்கத்தில் காணப்பட்டன.

இதைத்தொடர்ந்து விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகின. பிரபல பத்திரிகையாளர்களும், யூடியூப் சேனல்களும் விஷாலின் உடல்நிலை குறித்து பல்வேறு விஷயங்களை வெளிப்படுத்தினர்.

இதற்கிடையே விஷால் கை நடுக்கத்துடன் பேசிய விடியோ வைரலான நிலையில், பலரும் விஷால் உடல்நலம் பெற வேண்டும் என பிராத்திப்பதாக தெரிவித்தனர். அத்துடன் சக நடிகர்கள், பிரபலங்கள் பலரும் விஷால் பழையபடி மீண்டு வருவார் எனவும் கருத்துகளை பகிர்ந்தனர்.

நாசர் போலீசில் புகார்

இதையடுத்து விஷால் உடல் நலம் குறித்து அவதூறு பரப்பியதாக கூறி யூடியூப் சேனல்கள் மீது நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க தலைவருமான நாசர் தேனாம்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் யூட்யூப் சேனல்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால் நடிகராக மட்டுமில்லாமல், தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.

சேகுவாரா மீது குற்றச்சாட்டு

நாசர் தனது புகாரில், “யூடியூபர் சேகுவாரா என்பவர், நடிகர் விஷால் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் நடுக்கம் ஏற்பட்டுள்ளது என பேட்டியளித்துள்ளார். இது ஆதரமற்றது. அவரது உடல் நிலை குறித்து அவதூறு பரப்பும் வகையில் உள்ளது” என குறிப்பிட்டிருந்தார்

அத்துடன், சேகுவாரா மற்றும் அவரது பேட்டியை ஒளிபரப்பிய யூடியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் நாசர் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் சேகுவேரா மீதும், இரண்டு யூடியூப் சேனல்கள் மீதும் தேனாம்பேட்டை காவல்துறையினர் அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல்நிலை குறித்து தப்பான தகவல்கள்

இதைத்தொடர்ந்து மதகஜராஜா ரிலீஸுக்கு முந்தைய நாள் படத்தின் ப்ரிவியூ ஷோ திரையிடப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், "என் உடல்நிலை குறித்து தப்பான தகவல்கள் வெளிவந்தது. அப்படிலாம் ஒன்னும் இல்லை.

எனக்கு கடுமையான காய்ச்சல் தான். அன்னைக்கு என்னால முடியல. ஆனாலும் இத்தனை வருஷம் கழித்து படம் வருது. சுந்தர் சி சார் முகம் பார்க்கனும், அந்த பங்கஷனை மிஸ் செய்ய கூடாதுன்னு எப்படியாவது முடிஞ்ச அளவு அட்டெண்ட் செஞ்சேன்.

எனது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை. நண்பர்கள், பேன்ஸ் என எல்லோரும் பிரார்த்தனை செய்துள்ளார்கள். அனைவருக்கும் நான் கடமைபட்டிருக்கிறேன். நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார். இந்த பேட்டியின் போது விஷால் உடல்நிலை சீராகி இருந்ததுடன், மிகவும் தெளிவாகவும் பேசியிருந்தார்.

இதன் பின்னர் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் நடந்த சக்சஸ் மீட்டிலும் தெளிவாக பேசிய விஷால், உடல்நிலை பூரணமாக குணமடைந்ததாக தெரிவித்தார்.

பட்டையை கிளப்பும் மதகஜராஜா

கடந்த 12ஆம் தேதி வெளியான மதகஜராஜா படம் முதல் நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியாகி 12 நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40.66 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவர தகவல்களை வெளிப்படுத்தும் sacnilk.com தெரிவித்துள்ளது.

ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் மதகஜராஜா படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். காமெடியனாக சந்தானம் மற்றும் வில்லனாக சோனு சூட் நடித்துள்ளார். மறைந்த நடிகர்களான மனோபாலா, மணிவண்ணன், மயில்சாமி, சிட்டி பாபு, நெல்லை சிவா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளார்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.