திருமணத்துக்காக மகனுக்கும், மருமகளுக்கும் நாகார்ஜுனாவின் காஸ்ட்லி கிஃப்ட்..வைரலாகும் விடியோ!
திருமணத்துக்காக மகனுக்கும், மருமகளுக்கும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா காஸ்ட்லி கிஃப்ட் ஆக சொகுசு கார் தரவுள்ளாராம். இந்த காரை நாகார்ஜுன் ஓட்டி செல்லும் விடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு சினிமாவின் மூத்த ஹீரோவான நாகார்ஜுனா மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்து வருகிறார். தனது மகன்களான நாக சைதன்யா, அகில் ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் நிலையில், இருவரின் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். முதலில் மூத்த மகள் நாக சைதன்யா - நடிகை சோபிதா துலிபாலா ஆகியோரின் திருமணம் நடைபெற இருக்கிறது.
டிசம்பர் 4ஆம் தேதி இந்த நட்சத்திர தம்பதிகளுக்கு திருமண நடக்கவுள்ள நிலையில், இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்க ஹால்டி நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
சொகுசு கார் வாங்கிய நாகார்ஜுனா
ஒரு புறம் திருமண ஏற்பாடுகள் ஜோராக நடந்து கொண்டிருக்க, நடிகர் நாகார்ஜுனா புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. லெக்சஸ் எல்எம் எம்பிவி என்ற காரை நடிகர் நாகார்ஜுனா ஓட்டி வருவது போன்ற விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
மெரூன் நிற ஷேடில் இருக்கும் இந்த காரை ஓட்டியவாறு நடிகர் நாகார்ஜுனா கரிதாபாத்திலுள்ள ஆர்டிஓ அலுவலத்துக்கு வந்துள்ளார். காரை பதிவு செய்வதற்காக அவர் வந்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாகார்ஜுனா வாங்கியிருக்கும் இந்த சொகுசு காரின் விலை ரூ. 2.5 கோடி எனவும், ஹைப்ரிட் எலெக்ட்ரிக் வாகனமாக இருப்பதுடன், இது சுற்றுச்சூழலில் கார்பன்-நடுநிலை தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
லெக்சஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர் இணையத்தள பக்கத்தில் இந்த காரின் அடிப்படை மாடல் விலை ரூ. 2.1 கோடியில் இருந்து தொடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து விலை உயர்ந்த இந்த சொகுசு காரை தனது மகன் நாக சைதன்யா மற்றும் மருமகள் சோபிதா ஆகியோருக்கு பரிசாக தரப்போவதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாக சைதன்யா - சோபிதா திருமணம்
கடந்த ஆக்ஸ்ட மாதம் இந்த நடச்சத்திர ஜோடியின் திருமண நிச்சயதார்த்தம் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்க நடைபெற்று முடிந்தது. இதன் பின்னர் இந்த நிகழ்வின் புகைப்படங்களுடன் நடிகர் நாகார்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதன்பின்னர் நாக சைதன்யா - சோபிதா திருமணம் டிசம்பர் 4ஆம் தேதி நடக்கவுள்ளதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. திருமணத்துக்கு இன்னும் சில நாள்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திருமணத்தின் முந்தைய நிகழ்வுகள் கோலகலமாக தொடங்கியுள்ளன.
சோபிதாவின் திருமண ரதம் நிகழ்வு நடைபெற்று முடிந்திருக்கும் நிலையில், அதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
நாக சைதன்யா ஏற்கனவே நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், கடந்த 2021இல் அவரை பிரிவதாக அறிவித்தார். தற்போது இரண்டாவதாக சோபிதா துலிபாலாவை மணமுடிக்க உள்ளார்.
நாகார்ஜுனாவின் இரண்டாவது மகன் அகிலுக்கும் கடந்த இரு நாள்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோவாக இருந்து வரும் அகிலின் வருங்கால மனைவி ஜைனப் ராவ்ஜி பிரபல ஓவியராக திகழ்கிறார்.
பிரபல தொழிலதிபரும், ஆந்திர முன்னாள் முதலமைச்சரை ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி நியமித்த மத்திய கிழக்கு பகுதிகளின் ஆந்திர பிரதேச மாநில அரசின் பிரதியாக இருந்த சுல்ஃபி ராவ்ட்ஜீயின் மகள்தான் ஜைனப் ராவ்ஜி.