SK25 Title: கதைக்குதான் பஞ்சம்.. தலைப்பும் கூடவா? பராசக்தி டைட்டில்..? சிவகார்த்திகேயன் 25வது பட தலைப்புக்கு எதிர்ப்பு
SK25 Title Issue: தமிழ் திரையுலகினரிடம் கதை கான் பஞ்சமாக இருந்தது. இப்போது தலைப்புக்கும் அந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. சிவகார்த்திகேயன் 25வது படத்துக்கு பராசக்தி தலைப்பை வைத்தால் போராட்டம் நடத்தப்படும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமரன் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார். இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இதில் நடிகர் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கிறார். ஹீரோயினாக தெலுங்கு நடிகை ஸ்ரீலீலா நடிக்கிறார். நடிகர் அதர்வா முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
டைட்டிலுக்கு வந்த எதிர்ப்பு
SK25 என்ற அழைக்கப்படும் இந்த படத்துக்கு சிவாஜ கணேசன் அறிமுகமான பரசக்தி படத்தின் டைட்டிலை வைத்திருப்பதாக பேசப்படுகிறது. டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் 25வது படம் மிகப்பெரும் பொருட்செலவில் வரலாற்று திரைப்படமாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு இன்னும் சில நாள்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தகவல்கள் உலா வருகின்றன. இந்த சூழ்நிலையில் பராசக்தி என்ற தலைப்பு வைப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பராசக்தி, இது வெறும் திரைப்படப் பெயர் மட்டுமல்ல. தமிழ் திரையுலக வரலாற்றை 1952க்கு முன் - 1952க்கு பின் என்று பிரித்து பார்க்கலாம். பாடல்களே படங்களாக, பாடத் தெரிந்தவர்களே நடிகர்களாக இருந்ததை மாற்றி, அனல் தெறிக்கும் வசனங்கள், உணர்ச்சியைத் தூண்டும் நடிப்பு, இவற்றோடு சமுதாய புரட்சியையும் ஏற்படுத்திய "பராசக்தி" திரைப்படத்தின் பெயரை மீண்டும் ஒரு திரைப்படத்துக்கு வைப்பது என்பதை ஏற்றுக் கொள்ளவே இயலாது.
ஒரு யுக கலைஞனாக, கலை உலகின் தவப்புதல்வனாக, கலைஞர் கருணாநிதியின் புரட்சிகர வசனங்களை, தனது உணர்ச்சிகர நடிப்பால் தமிழினத்திடம் கொண்டு சேர்த்த, நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் திரையுலகம், கலையின் கொடையாக உலகுக்கு தந்த திரைப்படம் தான் பராசக்தி.
படத் தலைப்புக்கும் பஞ்சமா?
தமிழ்த் திரையுலகுக்கு இப்போது என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை? கதைப் பஞ்சம் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. கருத்துள்ள பல பழைய பாடல்களை ரீமிக்ஸ் என்ற பெயரில் சிதைக்கிறார்கள். இப்போது, படத் தலைப்புக்கும் பஞ்சம் ஏற்பட்டுள்ளதா? ஏற்கனவே பராசக்தி என்ற பெயரில் ஒரு திரைப்படம் எடுக்க முயன்ற போது, அதற்கான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, மீண்டும் பராசக்தி என்ற பெயரில் அந்த திரைப்படம் வெளியானது.
தமிழ் திரையுலக வரலாற்றை சிதைக்கும் போக்கு
தற்போது மீண்டும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படத்துக்கு "பராசக்தி" என்று பெயர் சூட்டியிருப்பது லட்சோசோப லட்சம் நடிகர் திலகம் சிவாஜி ரசிகர்களை மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் சினிமாவை நேசிப்பவர்களுக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. வேண்டுமென்றே தமிழ்த் திரையுலக வரலாற்றை சிதைக்க முற்படும் இந்த போக்குக்கு எங்களுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்
பாரசக்தி என்ற பெயரை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினர்களை கேட்டுக்கொள்கிறோம். பராசக்தி என்ற பெயரை மற்றவில்லை என்றால் ரசிகர்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பராசக்தி படம்
முன்னாள் முதலைமைச்சர் மு. கருணாநிதி கதை, வசனம் எழுத, கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் 1952இல் வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்த படம் பராசக்தி. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அறிமுக படமான இது தமிழில் வெளியான சிறந்த சினிமாக்களில் ஒன்றாக கொண்டாடப்படுகிறது. படத்தில் சிவாஜி கணேசன் நடிப்பும், அவரது வசன உச்சரிப்புகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து. 175 நாள்களுக்கு மேல் திரையரங்கில் ஓடிய வெற்றி படமாக பராசக்தி இருக்கிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்