மரண வெயிட்டிங்கில் மக்கள்.. ஹிண்ட் கொடுத்த புரொடியூசர்.. ஓடிடியில் வேர்ல்டு ஃபயர் ரிலீஸ் எப்போ?
புஷ்பா 2 தி ரூல் திரைப்படம் எந்த ஓடிடியில் எப்போது வெளிவரும் என்ற தகவலை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2: தி ரூல்' திரைப்படத்தை தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்து கருத்து தெரிவித்துள்ளது.
டிசம்பர் 5-ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 12,500 திரையரங்குகளில் வெளியான புஷ்பா 2 படம் இதுவரை ரூ.1,500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சங்கராந்தி வரை பெரிய படங்கள் எதுவும் தியேட்டர் ரிலீஸ் ரேஸில் இல்லாததால் அதுவரை புஷ்பா 2 ஜோராக தியேட்டரில் தொடர வாய்ப்புள்ளது எனக் கூறுகிறது
ஓடிடியில் புஷ்பா 2 எப்போது வெளியாகும்?
மேலும், புஷ்பா 2 படம் விரைவிலேயே ஓடிடியில் வெளியாகும் என்ற செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், புஷ்பா 2 படமானது வெளியாகி 56 நாட்களுக்குள் ஓடிடியில் வெளியாகாது என்றும் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதுவரை புஷ்பா 2 படத்தை மக்கள் தியேட்டரில் ரசிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளது.
இந்த வரிசையில், மைத்ரி திரைப்பட தயாரிப்பாளர்கள் கிறிஸ்துமஸ் மற்றும் சங்கராந்தி விடுமுறைகளையும் குறிப்பிட்டு, விடுமுறை காலத்தில் படத்தை பெரிய திரையில் பார்த்து ரசிக்க மக்கள் விரும்புவர். அதனால் சங்கராந்திக்கு பிறகு புஷ்பா 2 ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றனர்.
போட்டி போட்ட நெட்பிளிக்ஸ்
புஷ்பா 2 படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் பெரும் விலைக்கு வாங்கியுள்ளது. அமேசான் பிரைம் தளத்துடன் கடும் போட்டி இருந்தபோதிலும், ஓடிடி உரிமையை ரூ. 270 கோடிக்கு வாங்கியுள்ளதாக தெரிகிறது. அமேசான் பிரைம் வீடியோ 2021 ஆம் ஆண்டில் புஷ்பா: தி ரைஸ் திரைப்படத்தின் ஓடிடி உரிமைகளை வாங்கியது என்பது நிலையில் புஷ்பா 2 படத்தையும் வாங்க முற்பட்டு பின் அதிலிருந்து பின் வாங்கியது.
பாக்ஸ் ஆபிஸ் ரூல்
இந்த மாதம் தொடக்கத்தில் வெளியான புஷ்பா 2: தி ரூல் திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் ரூல் செய்து வருகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் கைது
புஷ்பா 2 ரிலீஸ் நாளுக்கு முந்தைய நாள் ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் படத்தின் ப்ரீமியர் ஷோ திரையிடப்பட்டது. இதை பார்ப்பதற்காக அல்லு அர்ஜுன் வரவிருந்த தகவல் பரவிய நிலையில், அவரை காண ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்ததாக தகவல்கள் வெளியாகின.
ஜாமீனில் வெளிவந்த அல்லு அர்ஜூன்
முன்னதாக, ரேவதி இறப்பு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் திரையரங்கு ஊழியர்கள் சிலரை கைது செய்தனர். அத்துடன் இந்த துயர சம்பவம் நடக்க அல்லு அர்ஜுன்தான் காரணம் எனக்கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதில் அல்லு அர்ஜுனுக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில், மேல் முறையீட்டில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.