Mysskin speech: ‘மன்னிப்பு.. மன்னிப்பு.. மன்னிப்பு.. திருக்குறளில் காமத்துப்பால் இல்லையா?’ -மிஷ்கின் பேச்சு
Mysskin speech: இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த லெனின் பாரதியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவன் என்னை தத்துவ ரீதியாக விமர்சனம் செய்திருந்தான்; அவனுக்கு என்னுடைய வருத்தத்தையும் மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். - மிஷ்கின்

Mysskin speech: பா.ரஞ்சித் தயாரிப்பில் சோம சுந்தரம் கதாநாயகனாக நடித்து வெளியான ‘பாட்டில் ராதா’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில், இயக்குநர் மிஷ்கின் வரம்பு மீறி பேசி இருந்தார். இதற்கு திரைத்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில் இன்று நடந்த பேட் கேர்ள் பட நிகழ்வில் அதற்காக அவர் மன்னிப்புக்கோரி இருக்கிறார்.
வெற்றி என்னை அப்படி
அதில் அவர் பேசும் போது, ‘ முதலாவதாக நான் மன்னிப்பு கேட்க நினைப்பது பாடல் ஆசிரியர் தாமரையிடம்... அவர் என்னை விமர்சித்து பேசி இருந்தார். அப்போது அவர் ஒரு விஷயத்தை குறிப்பிட்டு இருந்தார். அதில், வெற்றி என்னை அப்படி பேச வைத்திருக்கிறது என்று இருந்தது.
18 வருடங்களாக நான் போராடிக் கொண்டே இருக்கிறேன் தாமரை சகோதரி அவர்களே... தினமும் ஒரு 10 நிமிடம் உன் மரணத்தை பற்றி தியானி என்று பௌத்தம் சொல்வது போல, தினமும் தியானித்துக்கொண்டிருக்கிறேன். வெற்றி என் தலை மீது இருந்திருந்தால் நான் பெரிய பெரிய ஆட்களோடு படம் செய்திருக்க வேண்டும்.
மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
இரண்டாவதாக எனக்கு மிகவும் பிடித்த லெனின் பாரதியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அவன் என்னை தத்துவ ரீதியாக விமர்சனம் செய்திருந்தான். அவனுக்கு என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள்தாஸ் என்ற நடிகர் விமர்சித்து பேசியிருந்தார்; எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவரது முகத்தில் அவ்வளவு கருணை இருக்கும். அவரது முகத்தை பார்க்கும் பொழுது, பழைய தமிழ் உள்ளே இருப்பது போன்று இருக்கும்.
அவருடன் நான் நீண்ட நாட்களாக வேலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தேன். கடந்த மூன்று நாட்களாக அவர் என்னை திட்டி, திட்டி மிகப்பெரிய பிரபலமாக மாறிவிட்டார். அவரிடமும் என்னுடைய மன்னிப்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை வைத்து படம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர் தாணுவிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். அதே போல யாரோ ஒருவர் என் மீது செருப்பு எறிய வேண்டும் என்று கூறியிருந்தார்; தயவு செய்து இரண்டு செருப்பாக எறியுங்கள். 8 நம்பராக பார்த்து எறியுங்கள்.
புத்தக குறியீடு
Jokes and the unconscious என்ற புத்தகமொன்று இருக்கிறது. அதில், ஒரு நகைச்சுவையை சொல்லும் பொழுது அதைக் கேட்பவர்கள் ஆழ்மனதிலிருந்து அதற்காக சிரிப்பை வெளிப்படுத்துவார்கள். அவர்கள் தங்களுடைய சுய நினைவில் இருந்து அதற்கு ரியாக்ட் செய்வதில்லை. அதுதான் ஒரு நகைச்சுவையுடைய இயல்பு என்பது குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அன்றைய தினம் மேடையில் அதுதான் நடந்தது. அமீரிடமும், வெற்றிமாறனிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிறைய பேர் நான் முகம் சுளிப்பது போல பேசியதாகவும், அதற்கு அவர்கள் இருவரும் சிரித்ததாகவும் விமர்சனம் செய்திருந்தார்கள்
அன்று அவர்கள் மட்டும் சிரிக்கவில்லை; மேடையில் இருந்தவர்களும், என் முன் இருந்த பத்திரிகையாளர்களும் சிரித்தார்கள்; அது அந்த வீடியோவில் இருக்கிறது; ஆழ்மனதிலிருந்து பேசும் பொழுது, ஒரு சில வார்த்தைகள் கொஞ்சம் மேலே சென்று விட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
நான் யாரையும் குறிப்பிட்டு அன்றைய தினம் அப்படி பேசவில்லை; விஷாலுக்கும் எனக்கும் பிரச்சினை வந்த போது கூட, அவன் என்னை அவ்வளவு மோசமாக பேசியபோதும் கூட, பிறரிடம் என்னைப் பற்றி தவறாக பேசிய போதும்கூட, நான் அவனைப் பற்றி மேடையில் பேசும் பொழுது பொறுக்கி என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு வார்த்தையை கூட நான் தவறாக பயன்படுத்தவில்லை
அன்று என் மனதில் ஆழத்திலிருந்து நான் அதை பேசியிருந்தேன். அது உங்களை புண்பட செய்திருக்கிறது திருக்குறளில் காமத்துப்பால் இல்லையா? பெருமாள் முருகன் எழுதிய கட்டுரையில் அல் புல் என்ற வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ என்ற தலைப்பில் படம் வந்தது. அது பற்றி யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கடந்த மூன்று நாட்களாக டிவியில் என்னுடைய பெயர் தான் உலாவி கொண்டிருந்தது. என்னைப் பற்றி உங்களுக்கு தெரிய வேண்டுமென்றால், என்னுடைய படங்களை பார்த்து சொல்லுங்கள்; வெற்றிமாறனிடம் கேளுங்கள்.’ என்று பேசினார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்