Upasana Ram Charan: ‘என் ஆரோக்கியம், என் உரிமை’ - 2ஆவது குழந்தைக்கு ரெடியான உபாசனா ராம்சரண்!
ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய உபாசனா கொனிடேலா, கிளின் காராவுக்குப் பிறகு மற்றொரு குழந்தைக்கு எவ்வாறு தயாராக இருக்கிறேன் என்பது குறித்து மனம் திறந்தார்.
நடிகர் ராம் சரண் - உபாசனா கொனிடேலா தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இப்போது, உபாசனா 'இரண்டாவது குழந்தைப் பெற்று எடுக்கத் தயாராகிவிட்டார்' எனவும்; விரைவில் மற்றொரு குழந்தையைப் பெற்றெடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது ஐட்ரீம் மீடியாவுடன் பேசிய உபாசனா, பெண்களின் ஆரோக்கியம், 30 வயதுக்குப் பின், ஒரு குழந்தையைப் பெறுவதற்கான தனது தேர்வு மற்றும் பலவற்றைப் பற்றிப் பேசினார்.
உபாசனாவின் பேட்டி:
பெண்களின் ஆரோக்கியம் எவ்வாறு முக்கியமானது என்பதைப் பற்றி பேசுகையில், உபாசனா, "நமது ஆரோக்கியம் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். நம்மை நாம் தான் முன்னெடுத்துச் செல்ல முடியும். நம்மைப் பற்றி நாம் கவலைப்படவில்லை என்றால், வேறு யாரும் நம்மை கவனிக்கமாட்டார்கள். இங்கே தீர்வுகள் இருக்கும்போது பெண்கள் கஷ்டப்பட வேண்டியதில்லை என்று நான் உண்மையில் உணர்கிறேன். பெண்கள் தங்கள் வாழ்க்கையில் என்ன வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்.
நான் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு குழந்தையைப் பெற ஒரு முடிவு செய்தேன். அதற்காக நான் வருத்தப்படவில்லை. அது என் விருப்பம் சார்ந்தது. அதுதான் நான் செய்தது. என் மருத்துவர் எப்போது என்னைப் பரிசோதிக்க வந்தாலும் தாங்கள் இரண்டாவது குழந்தைப் பெற்று எடுக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பார். நானும் இரண்டாவது குழந்தைப் பெற்று எடுக்கத் தயார் ஆகி வருகிறேன். இது என் உடல்நிலை, என் விருப்பம் சார்ந்தது" என்று பேசினார். உபாசனா ராம் சரண்,34 வயதில் கிளின் காரா என்னும் மகளை முதல் குழந்தையாகப்பெற்று எடுத்துள்ளார்.
ராம்சரணின் நீண்டநாள் தோழி உபாசனா:
உபாசனா மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் நிச்சயதார்த்தம் செய்வதற்கு முன்பே பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்தனர். 2012ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர்.
ஜூன் 30, 2023அன்று, அவர்கள் தங்கள் முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். இந்த ஜோடி அடிக்கடி ஒன்றாக விடுமுறைக்குச் செல்லும்போது எடுக்கப்பட்ட காட்சிகளைப் பகிர்ந்து கொள்கிறது. சமீபத்தில் அயோத்தியில் நடந்த ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் ராம்சரண் மற்றும் உபாசனா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ராம் சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவியும் கலந்து கொண்டார்.
ராம்சரணின் அடுத்த திரைப்படங்கள்:
ராம்சரண், தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகை கியாரா அத்வானியுடன் சேர்ந்து, ’கேம் சேஞ்சர்’ என்னும் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படம் இந்த ஆண்டு வெளியாகவுள்ளது. உப்பேனா இயக்குநர் புஜ்ஜி பாபுவின் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பிலும் ராம் சரண் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்திற்கான நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். மேலும், சிவராஜ்குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9