ஹாப்பி 82..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஹாப்பி 82..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!

ஹாப்பி 82..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!

Malavica Natarajan HT Tamil
Published Jun 02, 2025 10:49 AM IST

தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, இந்திய ரசிகர்களால் இசை நாயகனாக கொண்டாடப்பட்டு வரும் இசைஞானி இளையராஜா இன்று தன் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்தவாறு தனது 82வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.

ஹாப்பி 82..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!
ஹாப்பி 82..! ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி வரும் இசைஞானி இளையராஜா! வாழ்த்து மழையில் இசை நாயகன்!

1000 படங்களைக் கடந்த அபூர்வ இசையமைப்பாளர்

1976-ம் ஆண்டு வெளியான அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பின், மக்களோடு மக்களாக அவரின் இசை கலக்கத் தொடங்கி மக்கள் மனங்களில் மிகவும் நெருக்கமான இசையமைப்பாளராக மாறினார் இளையராஜா. இசையமைக்க வந்த 3 ஆண்டுகளிலேயே 100 படங்களுக்கு இசையமைத்து அனைவரின் வாயிலும் விரலை வைக்க தொடங்கினார். பின், அவரது சாதனையை அவரே முறியடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் அடுத்த 100 படங்களுக்கு இசையமைத்தார்.

இப்படி, இவரது தனித்துவமான இசையால் பித்துப் பிடித்து திரிந்த பல மக்கள் இவரை இசையின் கடவுள், இசைஞானி என அழைத்து வருகின்றனர். அன்னக்கிளியில் தொடங்கிய பயணம் 1000 படங்களைக் கடந்து தற்போது வெளியாகி மக்களின் மனதைக் கவர்ந்த ஜமா படம் வரை இவரின் இசை இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்தி தான் வருகின்றன.

முறியடிக்க முடியாத சாதனை

ஏ.ஆர். ரகுமான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன் சங்கர் ராஜா, இமான், விஜய் ஆண்டனி, அனிருத் போன்ற பல இசையமைப்பாளர்கள் தமிழ் சினிமாவில் அவர்களின் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அவை இளையராஜா செய்த சாதனைகளை முறியடிக்குமா என்றால் சந்தேகம் தான். தற்போது அவர் தமிழ் சினிமாவில் அதிக படங்களுக்கு இசையமைக்கவில்லை என்றாலும், தற்போது வெளிவரும் பெரும்பாலான படங்களில் இவரது பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

உதாரணமாக, உலக அளவில் கவனம் பெற்ற மஞ்சுமெல் பாய்ஸ், வாழை, லப்பர் பந்து போன்ற படங்களில் அவரது பாடல்கள் அதிகளவில் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன.

அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல்

இந்நிலையில் தான் இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பின்னணி இசைகளை பதிவேற்ற அதிகாரப்பூர்வமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். இளையராஜா பிஜிஎம்'ஸ் என பெயரிடப்பட்டுள்ள அந்த யூடியூப் சேனலில் இனி இளையராஜா தனது பின்னணி இசைகளை ஒவ்வொன்றாக பதிவேற்றி வருகிறார்.

சிம்பொனி இசைக் கச்சேரி

இளையராஜா தனது முதல் சிம்பொனி இசையை 35 நாட்களில் எழுதி முடித்ததாக தெரிவித்த நிலையில், அவர் அந்த இசையை லண்டனில் உள்ள புகழ்பெற்ற அப்பல்லோ அரங்கத்தில் அரங்கேற்றம் செய்தார். இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அரங்கேறியதன் மூலம் சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியர் எனும் பெருமையை பெற்றுள்ளார் இசைஞானி இளையராஜா.

45 நிமிட நிகழ்ச்சி

சுமார் ஒன்றரை மணி நேரமாக இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றதாகவும், அதில் 45 நிமிடங்களுக்கு இளையராஜா, தனது பாடல்களின் சிம்பொனிக்களை அரங்கேற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த அரங்கேற்ற நிகழ்ச்சியில், பூவே செம்பூவே, கண்ணே கலைமானே போன்ற பாடல்கள் இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பின் இளையராஜா தன் ரசிகர்களுக்காக தமிழ்நாட்டின் பல இடங்களில் இசைக் கச்சேரிகளை நடத்தி அவர்களை மகிழ்வித்து வருகிறார்.