Music Director Ilayaraja: ‘என் துணைக்கு நீ தான்.. உன் துணைக்கு நான் தான்..’: மொரிஷியஸில் தனிமையைப் போக்கும் இளையராஜா
Music Director Ilayaraja: மொரிஷியஸில் தான் தனியாக இருக்கும் புகைப்படத்தை இசையமைப்பாளர் இளையராஜா பகிர்ந்துள்ளார்.
Music Director Ilayaraja: மொரிஷியஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, தன் படத்தைப் பகிர்ந்துள்ளார். அது வைரல் ஆகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மூத்த இசையமைப்பாளர், இளையராஜா. அன்றைய பிரிக்கப்படாத மதுரை மாவட்டத்தில் (தற்போது தேனி மாவட்டம்) உள்ள பண்ணைப்புரம் என்னும் கிராமத்தில் பிறந்தவர். 'அன்னக்கிளி' என்னும் தமிழ்ப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி எனப்பல்வேறு மொழிகளில் இசையமைத்து ஹிட்டடித்தவர். இவரது 1000-ஆவது படமாக, இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த ’தாரை தப்பட்டை’ இருந்தது.
சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக, ஜன.25 மாலை 5.20 மணிக்கு இலங்கையில் காலமானார். இரைப்பை புற்றுநோய் காரணமாக ஆயுர்வேத சிகிச்சைக்காக இலங்கை சென்றிருந்த அவர் சிகிச்சைப் பலனளிக்காத நிலையில் இயற்கை எய்தியிருந்தார்.
அதன்பின் அவரது உடல், இளையராஜாவின் அன்னை சின்னத்தாய், அவரது மனைவி ஜீவா ஆகியோரது நினைவிடம், அமைந்துள்ள ‘லோயர்கேம்ப் பங்களா’ எனப்படும் தோட்டத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளது.
முன்பே மனைவியின் இறப்பில் தனிமையில் வருந்தி வந்த நிலையில்,தன் ஆசை மகளின் மரணமும் அவரை நிலைகுலைய வைத்துவிட்டது என்றே அவரது நண்பர்கள் கூறுகின்றனர்.
இதனால் அவரது தாய், மனைவி மற்றும் மகளின் நினைவிடத்துக்குப் போய், இளையராஜா அவ்வப்போது தியானம் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பெரும்பான்மையாக சினிமா நிகழ்ச்சிகள் எதிலும் தலைகாட்டாத இளையராஜா, தன் கதையை வைத்து எடுக்கும் பயோபிக்குக்கான முன் புரோமோசன் நிகழ்ச்சியில் மட்டும் மரியாதை நிமித்தமாக கலந்துகொண்டார்.
இந்தப் படத்தில் தனுஷ் இளையராஜாவின் தோற்றத்தில் நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.
அப்போது அந்தப்படத்தின் துவக்கவிழாவில் கலந்துகொண்டு, டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்த இளையராஜா, “ஆரம்பத்தில், இது என்னுடைய தனிப்பட்ட பயணமாக இருந்தது. ஆனால், இப்போது அது கதையாக மாறி, உலகம் முழுவதும் இருக்கும் லட்சக்கணக்கான இசை ஆர்வலர்களின் இதயத்தை தொடப்போகிறது. முழு அணியும் வெற்றிபெற வாழ்த்துகள்!” என்று பதிவிட்டு வாழ்த்தியிருந்தார்.
அடிப்படையில் இசைஞானி இளையராஜாவும், தனுஷும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரர்கள். இளையராஜாவுக்கு பண்ணைப்புரம் என்றால், தனுஷுக்கு மல்லிங்காபுரம் சொந்த ஊர். அதுதவிர, இளையராஜாவின் மனைவி ஜூவாவும், தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் உடன்படித்தவர்கள் என்பதால், இளையராஜாவின் மேனரிசங்கள், வட்டார வழக்கு மொழி, நடை ஆகியவற்றை தனுஷ் அழகாக உள்வாங்கி நடித்துவிடுவார் என்கின்றனர், படக்குழுவினர்.
இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அவரது 171ஆவது படமான ‘கூலி’ படத்தின் டீசர் வெளியானது. அதில், இளையராஜா இசையமைப்பில் ரஜினிகாந்த் நடித்த ’’தங்கமகன்’’ படத்தில் இடம்பெற்ற பாடலை அனிருத் பயன்படுத்தியிருப்பார். இதனால் இளையராஜா தன்னுடைய பாடலை பயன்படுத்தி இருப்பதாக, தயாரிப்பு நிறுவனமான, சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு எதிராக நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற செயல்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் எனவும், விக்ரம் திரைப்படத்தில் இடம்பெற்ற “விக்ரம் விக்ரம்” பாடலுக்கும் தங்களிடம் அனுமதி பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே போன்று, லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் வெளியான ‘ஃபைட் கிளப்’ என்ற படத்திலும் “என் ஜோடி மஞ்ச குருவி” பாடலின் இசையையும் அனுமதியின்றி மறு உருவாக்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இதனால் இளையராஜாவை நெட்டிசன்கள் பயங்கரமாக கலாய்த்து வருகின்றனர். முன்னதாக இளையராஜாவின் நெருங்கிய நண்பரான எஸ்.பி.பாலசுப்ரமணியத்தையே, மேடைக் கச்சேரிகளில், தனது பாடலைப் பாட விடாமல் நோட்டீஸ் அனுப்பியவர் என வசைபாடி வருகின்றனர்.
இந்நிலையில் இவ்விவகாரம் சூடுபிடித்து ஓடிக்கொண்டிருக்க, மொரிஷியஸ் தீவில் தான் தனிமையில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து இருக்கிறார், இசையமைப்பாளர் இளையராஜா. தற்போது இது வைரல் ஆகியுள்ளது.
இது இளையராஜா தனிமையில் தவிப்பதனை சுட்டிக்காட்டுவதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கமெண்ட் இட்டு வருகின்றனர். மேலும் மகள் பவதாரிணியின் மரணத்துக்குப் பின், இளையராஜா யாரிடமும் அதிகம் பேசிக்கொள்வதில்லை எனவும்; தனிமையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டாபிக்ஸ்