இளையராஜாவுடன் கைகோர்க்கும் ஆஸ்கார் நாயகன்.. எதிர்பாராத சம்பவம் எல்லாம் காத்திருக்கு!
ஆஸ்கார் விருதுகளை வென்று சாதனை புரிந்த இசையமைப்பாளரான எம். எம்.கீரவாணி, இசையமைப்பாளர் இளையராஜா இசையில் பாடல் ஒன்றை எழுதி உள்ளார்.
உலக சினிமா கலைஞர்கள் தங்களுக்கு கிடைக்கும் உயரிய விருதாக நினைப்பது ஆஸ்கார் விருதைத் தான். அப்படிபட்ட விருதை ஆர்ஆர்ஆர் படத்திற்கு தான் இசையமைத்த பாடல்களுக்காக வென்றுள்ளார் எம்.எம். கீரவாணி. இவர் அதிகம் தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்திருந்தாலும் தமிழில் சில படங்களுக்கும் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்திய அளவில் மாபெரும் இசைமேதையாக புகழப்படும் இளையராஜாவுடன் இணைந்து கீரவாணி பணியாற்றி உள்ளார். ஷஷ்டி பூர்த்தி எனும் தெலுங்கு படத்தில் இளையராஜா இசையமைக்க, அந்தப் படத்தில் ஒரு பாடலை எழுதியுள்ளார் கீரவாணி.
ஷஷ்டிபூர்த்தி படம்
ரூபேஷ் கதாநாயகனாக நடிக்கும் 'ஷஷ்டிபூர்த்தி' படத்தை MAA AAI புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் திலகம் டாக்டர் ராஜேந்திர பிரசாத், இரண்டு முறை தேசிய விருது வென்ற நடிகை அர்ச்சனா ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'லேடீஸ் டெய்லர்' படத்தில் நடித்ததற்கு பின் 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படம் இது.
கீரவாணியின் பாடல் வரிகள்
இப்படத்தில் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான ரூபேஷுக்கு ஜோடியாக ஆகாங்க்ஷா சிங் நடிக்கிறார். பவன் பிரபா இப்படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திலிரு்து 'ஏதோ.. ஏ ஜென்மலோதோ..' என்ற பாடல் விரைவில் வெளியாகும் என்று புத்தாண்டு தினமான நேற்று படக்குழு அறிவித்தது. இந்தப் பாடலின் சிறப்பு என்னவென்றால், இசைஞானி இளையராஜா இசையமைக்க, ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி பாடல் வரிகளை எழுதியுள்ளது தான்.
கீரவாணி சாரிடம் கேட்டோம்
இதுகுறித்து படத்தின் இயக்குநர் பவன் பிரபா கூறுகையில், ''எங்கள் படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. சைதன்ய பிரசாத் சில பாடல்களுக்கு வரிகள் எழுதியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் வரும் பாடலுக்கு கீரவாணி சார் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்தோம். சைதன்ய பிரசாத்துக்கு கீரவாணி நெருக்கமானவர். அவர் மூலம் கீரவாணியை அணுகினோம். அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் கீரவாணி சென்னையில் தான் இருந்தார். பின் அவரை மதிய உணவு நேரத்தில் அவரைச் சந்தித்து சூழ்நிலையை விளக்கி பாடல் எழுதக் கேட்டுக் கொண்டோம். '' என்றார்.
இது எங்கள் அதிர்ஷ்டம்
இதற்கு கீரவாணி சம்மதித்தார். இதையடுத்து நாங்கள் ஸ்டுடியோவுக்குத் திரும்பிய சமயத்தில் அவர் பல்லவியை எழுதி அனுப்பிவிட்டார். அதே நாளில் சரணத்தையும், மறுநாள் மற்றொரு சரணத்தையும் எழுதித் தந்தார். இளையராஜாவின் இசையில் ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி பாடல் வரிகள் எழுதியிருப்பதும், அது எங்கள் படத்தில் இடம்பெற்றிருப்பதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இது எங்கள் படக்குழுவின் அதிர்ஷ்டம்'' என்றார்.
இதுவே முதல் முறை
''கீரவாணி இதுவரை 60க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். ஆனால், இளையராஜாவின் இசையில் எழுதுவது இதுவே முதல் முறை. அதுவும் கீரவாணி ஆஸ்கார் விருது வாங்கிய பிறகு எழுதுவது இன்னும் சிறப்பு'' என்றார் 'ஷஷ்டிபூர்த்தி' இயக்குநர் பவன் பிரபா.
குடும்ப உறவுகள், விழுமியங்கள்
படத்தின் கதாநாயகனும், தயாரிப்பாளருமான ரூபேஷ் கூறுகையில், ''இளையராஜாவின் இசையில், கீரவாணியின் பாடல் வரிகளுடன் கூடிய பாடல் எங்கள் படத்தில் இருப்பதை விட வேறு என்ன வேண்டும்? கதாநாயகனாகவும், தயாரிப்பாளராகவும் எனக்கு இந்த வாய்ப்பு இவ்வளவு சீக்கிரம் கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும். மற்ற பாடல்களும் நன்றாக வந்துள்ளன. குடும்ப உறவுகள், விழுமியங்களை மையமாகக் கொண்ட படம் இது'' என்றார்.
விரைவில் வெளியீட்டு தேதி
''ராஜேந்திர பிரசாத், அர்ச்சனா போன்ற மூத்த நடிகர்களுடன் நடித்தது எனக்கு ஒரு கற்றல் அனுபவம் மற்றும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. தற்போது படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்'' என்றார் கதாநாயகன் ரூபேஷ்.
டாபிக்ஸ்