'ஹாரிஸ் மாம்ஸ்'ங்குற பேர் எனக்கு பிடிச்சிருக்கு.. அன்பா கொடுத்தா நிச்சயம் ஏத்துப்பேன்- ஹாரிஸ் ஜெயராஜ்
ரசிகர்கள் தன்னை ஹாரிஸ் மாம்ஸ் எனக் கூப்பிடுவது மகிழ்ச்சியாகத் தான் உள்ளது. அவர்கள் அன்போடு கொடுப்பதை நிச்சயம் ஏற்றுக் கொள்வேன் எனவும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மானுக்கு பின் அதிக ரசிகர்களை கொண்ட இசையமைப்பாளராக இருப்பவர் ஹாரிஸ் ஜெயராஜ். இவரது பாடல்கள் எல்லாம் எத்தனை முறை கேட்டாலும் புதிதாக கேட்பது போலவே ஒரு அனுபவத்தை தரும். அந்த அனுபவத்தை மக்களுக்கு நேரடியாக தரும் பொருட்டு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பல இடங்களில் லைவ் கான்செர்ட் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சேலம் கான்செர்ட்
அப்படி தான் தற்போது சேலம் மாவட்டத்தில் உள்ள ஜவஹர் மில் திடலில் நாளை ஏப்ரல் 13 ஆம் தேதி ஹாரிஸ்- தி கிங் ஆஃப் ஹார்ட்ஸ் எனும் லைவ் கான்செர்ட்டை நடத்துகிறார். இதற்கான முன்னேற்பாடு வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று ஹாரிஸ் ஜெயராஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.
பலன் கிடைச்சுட்டே இருக்கு
அப்போது ஆஸ்கார் விருது பற்றிய தனது கருத்துகளை அவர் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய ஹாரிஸ், "வாழ்க்கையில ஆஸ்கார் மாதிரியான விருது எல்லாம் ஒரு சுவாரசியமான பரிசு. அதுல ஒரு நிகழ்வு தெரியாம நடக்கும் போது ரொம்ப நல்லா இருக்கும். நான் என்ன சொல்றேன்னா நம்மளோட வேலைய மட்டும் செஞ்சிட்டு போயிட்டே இருப்போம். பலன் அது அது அப்பப்போ கிடைக்கும். எனக்கு பலன் கிடைச்சுகிட்டே இருக்கு.
அவார்டுக்கும் மேல சந்தோஷம்
நான் இன்னும் போக நிறைய தூரம் இருக்கு. எல்லாத்தையும் விட இன்னைக்கு இவ்வளவு மக்கள் வரப்போறாங்க அப்டிங்குற செய்தி எனக்கு பல அவர்டுகளுக்கு மேல சந்தோஷம் தருது. நான் லைவ்வா அந்த அவர்டுகளை எல்லாம் பாக்குறேன். எனக்கு இது ரொம்ப சந்தோஷமானதா இருக்கு.
ஹாரிஸ் மாம்ஸ் பிடிச்சிருக்கு
நீங்க கான்செர்ட்ட பாக்கும் போது அது வேற மாதிரியான அனுபவம். அத்தனை ஆயிரம் மக்கள ஒன்னா பாக்குறது பிஃபா உலகக் கோப்பை கால்பந்து ஆட்டத்த பாக்குற மாதிரி எனர்ஜி தருது. ரசிகர்கள் என்னை ஹாரிஸ் மாம்ஸ் என கூப்பிடுறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவங்க கான்செர்ட்ல போர்டு வைச்சிருப்பாங்க. அதுக்கு அவங்க ஒரு விளக்கமும் தர்றாங்க. ரசிகர்கள் அன்பா கொடுக்குற பட்டத்த நாம ஏத்துக்கணும் என்றார்.
இதுல தப்பு இல்ல
ரீமிக்ஸ் பாட்டு எல்லாம் இப்போ வருதான்னு தெரியல. இப்போ அதை கவர் சாங் மாதிரி யூஸ் பண்றாங்க. அதெல்லாம் நல்ல விஷயம் தான், இப்போ ஒரு பாடகர் உருவாக ஒரு வாய்ப்பு தரணும். அவர் இந்த மாதிரி கவர் சாங் எல்லாம் பண்ணும் போது ரீச் ஆகிடுறாரு. இதே அவர் சொந்தமா மியூசிக்ல பாடுனா அது யாருக்கும் தெரியாமலே போயிடும். இந்த மாதிரி பழைய பாட்டு எல்லாத்தையும் கவர் சாங் மாதிரி பாடி பாப்புலர் ஆனவங்க எவ்ளோ பேர் இருக்காங்க. சினிமாவுல பெரிய இடத்துக்கு எல்லாம் போயிருக்காங்க என்றார்.
இளையராஜா புகழப்படணும்
இசையமைப்பாளர் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தியது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். அப்போது, " அவர் இசையமைத்தது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. அவரோட வேலை கண்டிப்பா புகழப்படணும். அதுவும் அவர் இருக்கும் போதே புகழப்படணும் என்றார்.
