தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Muni Is A Hit Movie That Made The Viewers Laugh Nervously Muni Is Raghava Lawrences Hit Movie

17 Years of Muni: பேய் படம் பார்க்க வந்தவர்களை மிரட்டலோடு கைதட்ட வைத்த படம் 'முனி' ராகவா லாரன்ஸின் ஹிட் மூவி

Pandeeswari Gurusamy HT Tamil
Mar 09, 2024 06:00 AM IST

Muni: மொத்தத்தில் பேய் படம் பார்க்க போய் பயந்து மிரண்டு வெளியேறும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்து ஆவிகளுக்காக கைதட்டலுமாய் ஆர்ப்பரித்து கொண்டாட்ட மனநிலையில் திரையரங்குகளிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார் "முனி". முனி போட்ட தனி ரூட்டில் இதுவரை 4 முனி சீரிஸ் வந்திருக்கிறது.

முனி திரைப்படம்.
முனி திரைப்படம்.

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த முனி 2007 ஆம் ஆண்டு மார்ச் 9 வெளியான நாள். ஜெமினி புரொடக்சன் நிறுவனம் தயாரித்து ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து அவரே திரைக்கதை எழுதி இயக்கிய படம். வசனங்களை ரமேஷ் கண்ணா எழுதி இருக்கிறார். கே.வி.குகன் ஒளிப்பதிவும் பரத்வாஜ் பாடல்களுக்கும் எஸ். பி.வெங்கடேஷ் பின்னணி இசையும் செய்துள்ளனர்.

கணேஷ் என்ற இளைஞனாக ராகவா மாஸ்டரும், படத்தின் தலைப்பில் வரும் முனியாண்டியாக ராஜ்கிரணும், பிரியாவாக ஹீரோயின் வேதிகாவும், ராகவாவின் பெற்றோர் கந்தசாமி மற்றும் கண்ணம்மாவாக வினுசக்ரவர்த்தி, கோவை சரளா ஆகியோரும், ஹீரோயின் பெற்றோராக டெல்லி கணேஷ் , மீரா கிருஷ்ணன் ஆகியோரும், அரசியல்வாதி தண்டபாணியாக காதல் தண்டபாணி யும், மஸ்தான் பாயாக ராகுல் தேவ் உட்பட பலர் நடித்து உள்ளனர்.

வழக்கம் போல் பழிவாங்கும் கதைதான். இதில் வித்தியாசமான அனுபவம் என்ன என்றால் முனியாண்டி என்ற நபர் தன்னையும் தனது மகளையும் ஏமாற்றி துரோகம் செய்து கொன்று விட்ட அரசியல்வாதி தண்டபாணியை ஆவியாக மாறி இன்னொரு மனிதனுடைய உடலுக்குள் புகுந்து கொண்டு பழிவாங்கும் கதைதான். இந்த டெம்ப்ளேட் கதைக்குள் காமெடியை புகுத்தி வெற்றி பார்முலாவை உருவாக்கி விட்டார். 

பொழுது சாய்ந்து இருட்ட ஆரம்பித்து விட்டால் வெளியே தனியாக போகவே பயப்படும் இளைஞர் கணேஷ் ராகவா லாரன்ஸ் தனது பெற்றோர் மற்றும் மனைவியோடு ஒரு புதிய வீட்டுக்கு குடியேறுகிறார்.  இந்த இடத்தில் உங்களுக்கு சந்திரமுகி நினைவுக்கு வருகிறதா.. இங்கே சாமானியன் முனியாண்டி ராஜ்கிரண் வாழ்ந்த இடம் என்பது பின்னர் தெரிய வரும். ராகவா லாரன்ஸின் பயந்தாங்கோலி கதாபாத்திரத்தை விளக்க வைக்கப்பட்டுள்ள காட்சிகள் எல்லாம் சிரிப்பு மத்தாப்புக்கள். விணுசக்ரவர்த்தி, கோவை சரளா, டெல்லிகணேஷ் என்று எல்லோரும் காமெடியை அள்ளி வீசி கலகலப்பான முதல்பாதி படமும் போவதே தெரியவில்லை.

அந்த குடியிருப்பு பகுதியில் வாழ்ந்த முனியாண்டி என்ற முனி வேடத்தில் ராஜ்கிரண் நடிப்பில் மிரட்டுகிறார். இறப்புக்கு முன்பு சாந்தமாகவும் ஆவியாக மாறி பழிவாங்கும் காட்சிகளில் மனிதன் மிரட்டுகிறார். அந்த பகுதியில் வாழும் மக்களின் செல்வாக்கு பெற்ற நல்ல மனிதர் முனியாண்டி யிடம் அந்த பகுதியில் வாழும் மக்கள் ஓட்டுகளை பெற்று வெற்றி பெறுவதற்காக வாக்குறுதி களை அள்ளி வீசி வெற்றி பெற்ற பிறகு பதவி வந்த திமிரில் ஏகத்துக்கும் கர்ஜிக்கிறார் தண்டபாணி. நம்பிய மக்களுக்கு ஆதரவாக முனி குரல் கொடுக்க தண்டபாணி ராஜ்கிரணை கொன்று எரித்து விடுகிறார். முனி ஆவியாக லாரன்ஸ் உடம்புக்குள் தண்டபாணியை பழிவாங்க புகுந்து விடுகிறார்.

பயப்படும் கணேஷ் உடலுக்குள் முனி ஆவியாக புகுந்தவுடன் ஏற்படும் மாற்றங்களால் பயந்து போன பெற்றோர்கள் உள்ளூர் பூசாரியிடம் போகிறார்கள். அப்போது முனியாண்டி ஆவியாக கணேஷ் உடலுக்குள் புகுந்த காரணம் எல்லோருக்கும் தெரிகிறது. கணேஷ் தண்டபாணி வீட்டுக்கு சென்று மிரட்டுகிறார். தண்டபாணி க்கும் முனி ஆவியாக புகுந்த விசயம் தெரிந்து மஸ்தான் பாயின் உதவியோடு ஆவியை ஒழிக்க முயற்சி செய்கிறார். 

நீண்ட போராட்டத்தில் ஆவி வென்றதா என்பதை கலகலப்புக்கு பஞ்சமில்லாமல் வரிசையாய் சரவெடி காட்சிகளோடு அமர்க்களம் செய்திருப்பார்கள். பேய் படத்தைப் பார்க்க போய் சிரிப்பு சத்தமும் கைதட்டலுமாய் மக்கள் ஆவிகளுக்கு பெரிய சப்போர்ட் தந்து படத்தை பாக்ஸ் ஆபிசில் சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்கி விட்டனர். இந்த வெற்றி தான் தொடர்ந்து முனி சீரிஸாக 4 வரை வந்து தொடர் வெற்றி பெற வைத்தது. இந்த முனி தெலுங்கிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது. பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் அந்த நேரத்தில் ஹிட் அடித்த பாடல்கள். குறிப்பாக

"வர்ரண்டா முனி"

"கருகரு சக்ரவர்த்தி"

"அசா புஸ்ஸா"

"குல்லா குல்லா டிராகுல்லா" ஆகிய பாடல்கள் படத்தின் கமர்சியல் வெற்றிக்கு பெரிதும் உதவின. ஒளிப்பதிவும் , காட்சி தொகுப்பும் மிகவும் நேர்த்தியாக அமைந்தது.

மொத்தத்தில் பேய் படம் பார்க்க போய் பயந்து மிரண்டு வெளியேறும் ரசிகர்களை வெகுவாக ரசிக்க வைத்து சிரிக்க வைத்து ஆவிகளுக்காக கைதட்டலுமாய் ஆர்ப்பரித்து கொண்டாட்ட மனநிலையில் திரையரங்குகளிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தார் "முனி". மொத்தத்தில் இந்த முனி போட்ட தனி ரூட்டில் இதுவரை 4 முனி சீரிஸ் வந்திருக்கிறது. இந்த பாணியில் முனி எந்த தொனியில் வந்தாலும் அதை மக்கள் வரவேற்பார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்