24 Mani Neram:"என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கீங்களே"! சத்யராஜ் ட்ரேட் மார்க் வசனம் - தமிழில் சிறந்த த்ரில்லர் படம்
சத்யராஜ் ட்ரேட் மார்க் வசனம் "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கீங்களே" இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது. வழக்கமான பழிக்கு பழி கதையை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொன்ன தமிழில் சிறந்த த்ரில்லர் படமாக 24 மணி நேரம் உள்ளது.

நூறாவது நாள் படம் தந்த வெற்றியால் இயக்குநர் மணிவண்ணன் அதேபாணியிலான விறுவிறுப்பான த்ரில்லர் படமாக உருவாக்கியது தான் 24 மணி நேரம் திரைப்படம். நூறாவது நாள் ஜோடியான மோகன் - நளினி ஆகியோர் இந்த படத்திலும் நடித்திருப்பார்கள். சத்யராஜ் ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டியிருப்பார். ஜெயசங்கர் போலீஸ் அதிகாரியாக தோன்றியிருப்பார்.
பழிக்கு பழி கதை
சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் மோகன் அங்கிருந்து தப்பித்து 24 மணி நேரத்துக்குள் தொழிலதிபரான சத்யராஜை கொலை செய்ய சபதம் எடுத்து அதை எப்படி செய்கிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன்.
அதற்கு முன் பிளாஷ்பேக்கில், சமூகத்தில் அந்தஸ்து பெற்ற தொழிலதிபராகவும், உமனைசராகவும் வரும் சத்யராஜ் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிறார். டாக்டராக இருக்கும் நளினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்கிறார். அந்த பலியும் மோகன் மீது விழுந்து ஜெயிலுக்கு செல்கிறார்.
மனைவியை பாலியில் பலாத்காரம் செய்து கொன்ற சத்யராஜை, பழிவாங்க ஜெயலில் இருந்து தப்பிக்கும் மோகன் அதை எப்படி செய்கிறார் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் சொல்லியிருப்பார் இயக்குநர் மணிவண்ணன்.
ஸ்டைலிஷ் வில்லனாக கலக்கிய சத்யராஜ்
சத்யராஜுக்கு முகவரி ஏற்படுத்தி தந்த படங்களில் முக்கிய படமாக 24 மணி நேரம் உள்ளது. பறந்து பறந்து பைட் செய்யாமல் தனது காமம் கலந்த பார்வை, மேனரிசம், நக்கல் பேச்சால் வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார். சத்யராஜ் பேசும் பிரபல வசனமான "என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கீங்களே" இந்த படத்தில் தான் இடம்பிடித்துள்ளது.
முதலில் இந்த கேரக்டரில் பழம்பெரும் இயக்குநரான வீணை எஸ். பாலசந்தர் அல்லது எம்.என். நம்பியாரை நடிக்க வைக்கலாம் என கூற சத்யராஜ் ஒதுங்கியுள்ளார். ஆனால் சத்யராஜ் தான் இந்த கேரக்டரின் உருவ அமைப்புக்கும், லுக்குக்கும் பொருத்தமா இருப்பார் என மணிவண்ணன் அவரையே நடிக்க வைத்துள்ளார். மணிவண்ணனின் கணிப்பு படி சத்யராஜ் வேடம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், அவருக்கும் பெரிய பிரேக்காக அமைந்தது.
அதேபோல் காதல் நாயகனாக வலம் வந்த மோகன் இந்த படத்தில் கோபக்காரனாகவும், பழி உணர்ச்சியை வெளிப்படுப்பவராகவும் அதிரடி ஆக்ஷனில் மிரட்டியிருப்பார். செந்தில், சின்னி ஜெயந்த், வடிவுக்கரசி உள்பட பலரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருப்பார்கள்.
மிரட்டிய இளையராஜா பின்னணி இசை
த்ரில்லர் படம் என்பதால் படத்துக்கு பின்னணி இசை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ரோஸ் வேகத்தில் செல்லும் காட்சிகளுக்கு ஏற்ப இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக அமைந்தது. புலமைபித்தன் பாடல் வரிகளில் மோகன் - நளினி ரெமாண்ஸ் காட்சிகளுடன் கூடிய குளிக்கும் போதிலே என்ற பாடல் கவரும் விதமாக இருக்கும்.
வில்லனை ஹீரோ பழிக்கு பழி வாங்குவது என்ற வழக்கமான கதையை திருப்புமுனை காட்சிகள், வசனங்களுடன் இடம்பிடித்து ரசிகர்களை பெரிதும் கவர்ந்த 24 மணி நேரம் படம் வெளியாகி இன்று 40 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/

டாபிக்ஸ்