பழைய கேங்க்..இப்போ ப்ரஷ்ஷா, புதுசா..அனைவர் அக்கவுண்டிலும் 7 லட்சம் டெபாசிட்! டிசம்பர் ட்ரீட்டாக வரும் சூதுகவ்வும் 2
மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்க முதல் பாகத்தின் தொடர்ச்சியாக உருவாகியிருக்கிறது சூது கவ்வும் 2. அத்துடன் முந்தைய பாகத்தில் இடம்பிடித்த பழைய கேங்க் நடிகர்களுடன், இந்த பாகம் ப்ரஷ்ஷா, புதுசா தயாராகி டிசம்பர் ட்ரீட்டாக திரைக்கு வருகிறது.
கடந்த 2013இல் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காமெடி கலந்த க்ரைம் கதையாக இருந்த சூது கவ்வும் சூப்பர் ஹிட்டானது. விஜய் சேதுபதி கேரியரில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது 11 ஆண்டுகள் கழித்து உருவாகியுள்ளது. சூது கவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்துள்ளார்.
இதையடுத்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த படத்தின் ட்ரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
பழைய கேங்குடன் காமெடியில் கலக்கல்
சூது கவ்வும் முதல் பாகத்தில் விஜய் சேதுபதி தவிர மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி, ராதா ரவி, எம்.எஸ்.பாஸ்கர், யோக் ஜேபி, அருள்தாஸ் உள்பட பலரும் இந்த பாகத்தில் தங்களது கதாபாத்திரங்களில் மீண்டும் தோன்றியுள்ளனர். கூடுதலாக சூது கவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கராத்தே கார்த்தி கல்கி என பலரும் நடித்துள்ளார்கள். விஜய் சேதுபதி சிறப்பு கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.
முதல் பாகத்தை போல் பல்வேறு நய்யாண்டி காமெடிகளுடன் இந்த பாகத்திலும் இடம்பிடித்திருக்கும் என்பதை ட்ரெய்லரை பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். அதற்கு சாம்பிளாக, " நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைவர் அக்கவுண்டிலும் 7 லட்சம் டெபாசிட்", "கல்யாணம் பண்ணா நிம்மதியா வாழவே முடியாது", "உயிர் வேணுமா உயிர் நாடி வேணுமா" போன்ற காமெடி கலக்கல் டயலாக்குகள் இருக்கின்றன.
டிசம்பர் ட்ரீட்டாக ரிலீஸ்
இந்த ஆண்டு ரிலீஸ்களில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த படமாக இருக்கும் சூதுகவ்வும் டிசம்பர் 13ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தை திருகுமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி. குமார் தயாரித்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி எஸ்.ஜே. அருண் இயக்கியுள்ளார். பாடல்கள் இசை - எட்வின் லூயிஸ் விஸ்வநாதன். பின்னணி இசை - ஹரி எஸ்.ஆர்.
ட்ரெண்ட் செட்டராக அமைந்த சூது கவ்வும்
தமிழ் சினிமாவில் ட்ரெண்ட் செட்டிங் படமாக விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் படம் அமைந்திருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் மிக பெரிய லாபத்தை பெற்று தந்தது. அத்துடன் ஹாலிவுட்டில் அதிகமாக வெளிவரும் மணி ஹெஸ்ட் வகை (பணம் கொள்ளையடிக்க திட்டமிடுதல்) பாணியில் உருவாகி, இதுபோன்ற கதைகளின் ட்ரெண்டிங் உருவாக்கியது. வெறும் ரூ. 2 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 30 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை பெற்றது.
சூது கவ்வும் படம் தெலுங்கு, பாகிஸ்தானில் உருது மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. படம் இந்தியில் மிக பெரிய பட்ஜெட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
மிர்ச்சி சிவா கலகல பேச்சு
கடந்த வாரம் சூது கவ்வும் 2 படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தனது வழக்கமான காமெடி பேச்சால் கலகலப்பூட்டினார் மிர்ச்சி சிவா. நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, "இந்த படத்தின் திரைக்கதையை மூன்று வருடமாக எழுதினோம் என்றார்கள். அப்படி எல்லாம் கிடையாது. இரண்டு வருடம் கொரோனா. அதனால் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லை. இதுதான் உண்மை. மூன்று வருடம் திரைக்கதையை எழுதினால் அவதார், டைட்டானிக் போன்று படம் எடுக்க வேண்டும். இப்படம் அது போன்று இல்லை.
தயாரிப்பாளர் சி.வி.குமார் தமிழ் திரை உலகுக்கு ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார். நிதி சிக்கல் குறித்து தயாரிப்பாளர் பல மேடைகளில் கண் கலங்கி பேசி இருப்பதை பார்த்திருக்கிறேன்.
சினிமாவை நேசிப்பவர்களை சினிமா கைவிடாது என்பார்கள். சினிமாவை அவர் அளவு கடந்து நேசிப்பதால் தான் நான் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். நாம் இதுவரை ’என்டர் தி டிராகன்’ படத்தை பார்த்திருக்கிறோம். அவர் இப்போது ’ரிட்டன் தி டிராகன்’ ஆக வருகை தந்திருக்கிறார்.
'சூது கவ்வும் - தர்மம் வெல்லும்' என்று அடுத்த படத்தை தயாரிக்க உள்ளதாக சொன்னார். ஆனால் அந்த படத்தில் நான் இருக்கிறேனா? இல்லையா? என்று சொல்லவில்லை. இருந்தாலும் அந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்து தெரிவிக்கிறேன்.
இந்த படத்துக்கு மற்றொரு தயாரிப்பாளர் தங்கராஜ். அவர் ஒரு உணவகத்தை நடத்தி வருகிறார். அதனால் படப்பிடிப்பு நடைபெறும் போது வயிறார உணவளித்தார். அவர் பெயரைப் போலவே தங்கமான மனதுடையவர். இந்தப் படத்தைப் பற்றி எல்லோரிடமும் பாசிட்டிவாக பேசக்கூடியவர். அவருடைய ஒத்துழைப்பிற்கு நன்றி." என்றார்.
டாபிக்ஸ்