Vijay: நடிகர் விஜய் அரசியல் பிரவேசம் - அமைச்சர் உதயநிதி, திருமாவளவன் சொன்னது இதுதான்!
நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அமைச்சர் உதயநிதி மற்றும் திருமாவளவன் சொன்ன கருத்துகள் பற்றிக் காண்போம்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சியினரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது, '' இந்திய ஜனநாயகத்தில் எவருக்கும் அரசியல் இயக்கம் தொடங்கும் உரிமையுள்ளது. நடிகர் விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார். அவருக்கு நம் அனைவரின் சார்பில் பாராட்டுகள். மக்கள் பணி சிறக்கட்டும்’’ என்றார்.
அதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தொ.திருமாவளவன், நடிகர் விஜய்யின் அரசியல் வருகைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ''நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவதுபற்றிக் கருத்துக் கூறும்போது, வரவேற்கிறோம். ஜனநாயகத்தில் மக்கள் தொண்டாற்றுவதற்கு, எந்த கட்டுப்பாடும் இல்லை. யாரும் எந்த நேரத்திலும் அரசியலுக்கு வரலாம். பொதுமக்களுக்குத் தொண்டாற்றலாம். அது தான் ஜனநாயகம்.
அந்த வகையில் நடிகர் விஜய் அவர்கள் கட்சி பெயரை அறிவித்திருப்பது வரவேற்புக்குரியது. வரவேற்கிறோம்.
நடிகர் விஜயை நம்பி அணி திரளும் இளைஞர்களுக்கு, நம்பிக்கையாக கருத்தினைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறார். அவரது நம்பிக்கை முக்கியமானது. அந்த வகையில் அவருடைய கருத்துகளை சொல்லியிருக்கிறார். முற்போக்கான பார்வையுடன் அவரது சிந்தனைகள் இருப்பதாக நம்புகிறேன். அதை வரவேற்கவும் கடமைப்பட்டிருக்கிறேன். அவருடைய தொலைநோக்குப் பார்வை முற்போக்காக இருக்கிறது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் எனக் கூறியிருப்பது வரவேற்புக்குரியது''என்றார்.
நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு வெளியானதும் அவரது ரசிகர்களும் விஜய் மக்கள் இயக்கத்தினரும் தமிழ்நாடு முழுக்க பட்டாசு வெடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
முன்னதாக விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனது அரசியல் கனவை வளர்த்து வந்தார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வந்தனர்.
அண்மையில் 10, 12ஆம் வகுப்புகளில் மாவட்ட அளவில், ஊரக அளவில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வே.ராமசாமி மற்றும் காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் லட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார்.
தான் அரசியலுக்கு வரப்போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர், அரசியலுக்குள் நுழைந்து தமிழக முதலமைச்சராகப் பதவி வகித்தனர். அதேபோல், திரைக்கதை எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் ஐந்துமுறை முதலமைச்சராக இருந்துள்ளார். அந்த வழியில் தேமுதிக என்னும் கட்சியைத் தொடங்கி, மறைந்த நடிகர் விஜயகாந்த், எதிர்க்கட்சி அந்தஸ்துவரைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்