திரும்ப பெறப்பட்ட வழக்கு.. சிம்புவுக்கு ரூ. 1 கோடி வட்டியுடன் திருப்பி தர நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சிம்பு நீதிமன்றத்தில் செலுத்திய ரூ. 1 கோடியை வட்டியுடன் திருப்பி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேல்ஸ் நிறுவனத்துக்கு இடையிலான பிரச்னை முடிவுக்கு வந்ததை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சிம்பு நடிப்பில் கொரோனா குமார் என்ற பெயரில் படம் தயாரித்தது. இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு ரூ. 9.5 கோடி சம்பளமாக பேசப்பட்டு, ரூ. 4.5 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது.
ஆனால் சிம்பு சொன்னபடி அந்த படத்தில் நடிக்கவில்லை என கூறப்பட்ட நிலையில், படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ரூ. 1 கோடிக்கான உத்தரவாதத்தை நடிகர் சிம்பு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
சிம்பு தரப்பில் கோரிக்கை
இந்த வழக்கில் நடிகர் சிம்பு மற்றும் வேல்ஸ் பிலிம்ஸ் பட நிறுவனத்துக்கு இடையேயான பிரச்னைக்கு தீர்வு காண, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.கண்ணன் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்த போது, நடிகர் சிம்பு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், மத்தியஸ்தர் முன் உள்ள வழக்கை இரு தரப்பினரும் திரும்பப் பெற்று விட்டதால், நடிகர் சிம்பு தரப்பில் டெபாசிட் செய்யப்பட்ட ரூ. 1 கோடியை வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்துமாறும், அதன்படி ரூ. 1 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 917 திருப்பித்தர உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, டெபாசிட் தொகையை வட்டியுடன் திருப்பிக் கொடுக்க உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சிம்பு புதிய படம்
சிம்பு நடிப்பில் கடைசியாக கடந்த 2023இல் பத்து தல படம் வெளியானது. இதைத்தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இந்த படத்தை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ் தேசிங்கு பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். எஸ்டிஆர் 48 என்று அழைக்கப்படும் இந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது
கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் யுவன் ஷங்கர் ராஜா நடத்தும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக சிம்பு தெரிவித்தார். இதையடுத்து யுவன் நடத்தும் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிங்கப்பூருக்கு சென்றுள்ளதாக சிம்பு இன்ஸ்டாவில் தெரிவித்திருந்தார். இதனால் இந்த இசை நிகழ்ச்சிக்கு இரு பிரபலங்களின் ரசிகர்களும் ஆர்வமுடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.
வெற்றிமாறன் கதையில் சிம்பு
லேட்டஸ்ட்டாக வெற்றி மாறன் கதையில், கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் உலா வந்தன. சிம்புவின் 50வது படத்தில் இந்த கூட்டணி இணையும் எனவும் கூறப்பட்டிருந்தது. இது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் ஒருவர் தகவல் தெரிவத்த நிலையில், இதுதொடர்பாக அதிகாரப்பூர்வமக எந்த தகவலும் வெளியாகவில்லை.
இந்த கூட்டணி குறித்த செய்தி கேட்ட பல இணையவாசிகள் வெற்றி மாறன் கதையில் சிம்பு எவ்வாறு பொருந்தி இருப்பார் என கலாய்த்து வருகின்றனர். மறுபுறும் இந்த காம்போ தெறிக்கிவடும் விதமாக இருக்கும் என, இது நிச்சயம் என எதிர்பார்ப்பதாக சிம்புவின் ரசிகர்கள் கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.