Lokesh Kanagaraj: லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை.. ஒரு ஆண்டுக்கு பிறகு வந்த தீர்ப்பு - முழு பின்னணி
Lokesh Kanakaraj: இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், அவர் இயக்கிய லியோ படத்துக்கு அனைத்து தளங்களில் இருந்தும் தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் ஒரு ஆண்டுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான லியோ என்ற ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் கடந்த 2023இல் வெளியானது. பாக்ஸ ஆபிஸ் வசூலில் ரூ. 600 கோடிகளுக்கு மேல் அள்ளிய இந்த படத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை தள்ளுபடி செய்துள்ளது.
லியோவுக்கு தடை கோரி வழக்கு
லியோ படத்தில் வன்முறை காட்சிகள் அதிகளவில் இருப்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மதுரைச் சேர்ந்த ராஜமுருகன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், "தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்த இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளதோடு, துப்பாக்கி, கத்தி, இரும்பு கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களை தயாரிப்பது பற்றிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
மேலும், பல்வேறு மத சின்னங்களை பயன்படுத்தி மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, படத்தில் எதிரிகளை பழிவாங்க பெண்கள், குழந்தைகளை கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்கத்தகாத காட்சிகள் இடம்பிடித்துள்ளன.