51 Years of Ulagam Sutrum Valiban: தடைகளை தாண்டி வெளியாகி கொடை வள்ளல் எம்ஜிஆருக்கு டபுள் ட்ரீட் தந்த படம்
அதிமுக கட்சியை தொடங்கிய பிறகு எம்ஜிஆர் நடிப்பில் பல்வேறு தடைகளை தாண்டி வெளியான படம் உலகம் சுற்றும் வாலிபன். கொடை வள்ளலாக இருந்த எம்ஜிஆர் சினிமா கேரியரில் வசூல் கொடையை அள்ளி கொடுத்த இந்த படம், டபுள் ட்ரீட்டாகவும் அமைந்தது.

எம்ஜிஆர் ரசிகர்களால் மட்டுமின்றி, பொதுமக்களாலும் கொண்டாடப்பட்ட எம்ஜிஆர் படமாக இரட்டை வேடங்களில் அவர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன் இருந்தது. நாடோடி மன்னன் படத்துக்கு பின்னர் எம்ஜிஆர் தானே நடித்து, இயக்கிய இரண்டாவது படமாக அமைந்தது. படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார்.
சயின்ஸ் பிக்ஷன் கதை
வித்தியாசமான கதை களங்களை கமர்ஷியல் படமாக வெகுஜனங்களுக்கு பிடிக்கும் வண்ணம் உருவாக்குவதில் வல்லவரான எம்ஜிஆர், பல முறை அதை செய்தும் காட்டியிருக்கிறார். அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தை சயின்ஸ் பிக்ஷன் கதையாக உருவாக்கியிருந்தார்.
விஞ்ஞானி அண்ணாக வரும் எம்ஜிஆர் கண்டறிந்த ரகசிய பார்மூலா மற்ற விஞ்ஞானிகள் கைபற்ற முயற்சிக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் வில்லன்கள் பிடியில் மாட்டிக்கொள்கிறார். அண்ணன் மீட்பதும், அவரது பார்முலாவை காப்பதும் தம்பி எம்ஜிஆர் உலகம் முழுதுவதும் சுற்றி இறுதியில் அதை செய்வதும் தான் படத்தின் ஒன்லைன்.
எம்ஜிஆர் படங்களுக்கே உண்டான காதல், காமெடி, ஆக்ஷன், செண்டிமென்ட் என அனைத்து விஷயங்களுடன் ஜனரஞ்சக படமாக உலகம் சுற்றும் வாலிபன் படத்தை உருவாக்கியிருப்பார்கள். இந்த படத்துக்கு முதலில்
மேலே ஆகாயம் கீழே பூமி என்று தான் தலைப்பை வைத்தார் எம்ஜிஆர். பின்னர் தான் உலகம் சுற்றும் வாலிபன் என்று மாற்றினார்.
தனது ஆஸ்தான ஜோடி ஜெயலலிதாவுக்கு பதிலாக இந்த படத்தில் மஞ்சுளாவை நடிக்க வைத்திருப்பார். சந்திரகலா, லதா மற்றும் தாய்லாந்து நடிகையான மேட்டா ரூங்ராத் என நான்கு ஹீரோயின்கள் படத்தில் நடித்திருப்பார்கள்.
வழக்கம்போல் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக தோன்றும் நம்பியார் இந்த படத்திலும் வில்லனாக மிரட்டியிருப்பார். அத்துடன் அசோகன், ஆர்.எஸ், மனோகர், நாகேஷ், தேங்காய் சீனிவாசன் உள்பட பலரும் நடித்திருப்பார்கள்.
வெளிநாடுகளில் படப்பிடிப்பு
இந்த படத்தின் படப்பிடிப்பு ஹாங்காங், சிங்கப்பூர், ஜப்பான், தாய்லாந்து நாடுகளில் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டது. இதனால் படபிடிப்புக்குக்கூட அதிகம் பேர் அனுமதிக்கப்படவில்லை.
இந்த படத்தின் தாய்லாந்து ஷெட்யூலுக்கு வெறும் பத்து நாள்களே அனுமதி கிடைத்தது. படப்பிடிப்பின்போது அருகே உள்ள பகுதியில் தாய்லாந்து நடிகர் விபத்தில் சிக்கியுள்ளார்.
இதையறிந்த எம்ஜிஆர் சம்பவ இடத்துக்கு நேரடியாக சென்ற உதவி புரிந்துள்ளார். இது பற்றி தகவல் பரவ எம்ஜிஆர் மீது நன்மதிப்பு ஏற்பட்டு உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு தாய்லாந்து அரசு கூடுதல் நாள் வழங்கியது.
எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் இன்றும் ஒலிக்கும் பாடல்கள்
கண்ணதாசன், வாலி, புலமைபித்தன், புலவர் வேதா பாடல் வரிகள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். முதலில் இந்த படத்துக்கு குன்றக்குடி வைத்தியநாதன் தான் இசையமைப்பாளாராக புக் ஆனார். பின்னர் சில காரணங்களால் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பாளரானார்.
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் என்ற இண்ட்ரோ பாடல் இன்றும் அதிமுக கட்சியின் அதிகாரப்பூர்வ பாடலாக ஒலித்துக்கொண்டிருக்கிறது. இது தவிர நிலவு ஒரு பெண்ணாகி, லில்லி மலருக்கு கொண்டாட்டம் போன்ற மெலடி, சிரித்து வாழ வேண்டும், உலகம் உலகம் போன்ற செலிபிரேஷன் பாடல்களும் சிறந்த கிளாசிக் பாடலாகவே இருந்து வருகின்றன.
தடைகளை தாண்டி வெளியான உலகம் சுற்றும் வாலிபன்
திமுகவுடன் கருத்துவேறுபாட்டால் அதிமுக என்ற தனிக்கட்சி தொடங்கிய பின்னர் இந்த படத்தில் நடித்தார் எம்ஜிஆர். இந்த படம் அறிவிப்பில் இருந்த பல்வேறு சவால்களையும், சிக்கல்களையும் கடந்து படப்பிடிப்பை நடத்தி முடித்தார்.
இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு இடைதேர்தலும் அறிவிக்கப்பட்டது. அப்போது பிரச்சாரத்துக்கு வந்த எம்ஜிஆரிடம் படம் ரிலீஸ் குறித்து ரசிகர்கள் கேட்க, தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன், அதாவது மே 11 ரிலீஸ் என்று அறிவித்தார்.
அப்போது இருந்தே படத்துக்கு போஸ்டர் ஒட்டுவதில் சிக்கல், தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் என படத்தின் ரிலீஸுக்கு பல்வேறு தடைகள் இருந்தன. ஆனாலும் ரசிகர்கள், தொண்டர்களின் பலத்தால் ஆளும் கட்சியாக இருந்த திமுகவை எதிர்கொண்டு படத்தை ரிலீஸ் செய்தார்.
ஒபனிங்கில் வரும் நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் தவிர இந்தப் படத்தில் அரசியல் பன்ச் வசனங்கள் பெரிதாக ஏதும் இருக்காது. ஆனாலும் ரசிகர்களின் ஆரவாரத்தால் படம் வெற்றிகரமாக ஓடியது. கூடுதலாக ஆளும்கட்சியின் அனைத்து அடக்குமுறைகளையும் மீறி திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
அந்த வகையில் உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் ஹிட் எம்ஜிஆருக்கு டபுள் ட்ரீட்டாக அமைந்தது.
பாக்ஸ் ஆபிஸ் வசூல்
திரையிட்ட இடங்களிலெல்லாம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிய இந்த படம் கொடை வள்ளல் எம்ஜிஆருக்கு வசூல் கொடையை வாரி வழங்கியது. இந்த படத்தின் வசூலில் இருந்து வரியாகவே சில லட்சங்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட்டது.
எம்ஜிஆர் கேரியரில் சிறந்த படமாக மட்டுமில்லாமல், அவரது பெயரை கேட்டவுடன் பொதுமக்களும் அடையாளப்படுத்திக்கொள்ளும் படமாக இருந்த உலகம் சுற்றும் வாலிபன் வெளியாகி இன்றுடன் 51 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
