தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Mgr Asked Sivaji To Build A Theatre In Thanjavur

எம்ஜிஆர் போட்டார் அச்சாரம்; தஞ்சையில் சிவாஜி கட்டினார் முத்தாரம்

I Jayachandran HT Tamil
May 17, 2023 03:55 PM IST

புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் விருப்பத்தை நிறைவேற்றிய சம்பவம் பற்றி இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

எம்ஜிஆரும் சிவாஜியும்
எம்ஜிஆரும் சிவாஜியும்

ட்ரெண்டிங் செய்திகள்

சென்னையில் ஒரு திரையரங்க விழா நடந்தது. எம்.ஜி.ஆரும், சிவாஜி கணேசனும் அதில் பங்கேற்றார்கள். அப்போது எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த நேரம். விழாவில் எம்.ஜி.ஆர். பேசத் தொடங்கினார். திரையரங்க விழா என்பதால், சாந்தி தியேட்டரைப் பற்றி பேச்சின் இடையே எம்.ஜி.ஆர். குறிப்பிட்டார். அந்தத் தியேட்டரின் பிரமாண்டத்தின் மீது எப்போதும் அவருக்கு ஒரு காதல் உண்டு!

"தம்பி சிவாஜி கணேசன், சாந்தி தியேட்டரைப் போன்று அவரது பிறந்த ஊரில், ஒரு திரையரங்கைக் கட்டவேண்டும்" என்று அப்போது எம்.ஜி.ஆர். தனது ஆசையை வெளிப் படுத்தினார்.

உடனே அதற்கு பதிலளிக்கும் விதமாக மேடையில் அமர்ந்திருந்த, நடிகர் சிவாஜி கணேசன் எழுந்து, "அண்ணனின் ஆசையை, கண்டிப்பாக நிறைவேற்றுவேன்" என்றார்.

அதைக் கேட்டு அங்கு குழுமியிருந்த இருவருடைய ரசிகர்களும் மகிழ்ச்சியால் குதூகலித்தார்கள்.

அதன்படி ஒருநாள் எம்.ஜி.ஆரின் ஆசைப்படியே தஞ்சாவூரின் மையப்பகுதியில், தியேட்டர் கட்டும் பணியை சிவாஜி கணேசன் தொடங்கினார். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் சுமார் 1 ஏக்கர் 15 சென்ட் பரப்பளவு நிலத்தில் இரட்டைத் தியேட்டர்கள் கட்டப்பட்டு வந்தன. கட்டிடப் பணிகளை சிவாஜியின் சகோதரர் வி.சி.சண்முகம் முன்நின்று கவனித்து வந்தார். சிவாஜியின் விருப்பப்படி அந்த இரட்டைத் திரையரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது.

ஒரு தியேட்டருக்கு சாந்தி என தன்னுடைய மகளின் பெயரையும், மற்றொரு தியேட்டருக்கு தன்னுடைய மனைவி கமலாவின் பெயரையும் சூட்டி அழகு பார்த்தார். சாந்தி தியேட்டர் பெரியதாகவும், கமலா தியேட்டர் சற்று சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டன. 2 தியேட்டர்களிலும் 'குளுகுளு' வசதிகள் செய்யப்பட்டு இருந்தன.

புதிய தியேட்டர்களின் திறப்பு விழாவை மிகவும் விமரிசையாக நடத்த சிவாஜி கணேசன் முடிவு செய்தார். ஆனால் தியேட்டர்களுக்கு உரிமம் வழங்காமல் மாவட்ட நிர்வாகம் இழுத்தடித்து வந்தது. அவரோ வேதனை அடைந்தார்.

இதனால் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சிவாஜி மன்றத்தினர் போராட முடிவுசெய்தனர். தஞ்சை கீழவாசல் ஆட்டுமந்தை தெருவில் கண்டன பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடானது. அகில இந்திய சிவாஜி மன்ற தலைவர் வி.சி.சண்முகம் தலைமையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய அனைவரும், தஞ்சை மாவட்ட ஆட்சியரையும், நிர்வாகத்தையும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். எம்.ஜி.ஆர். காதுகளுக்கு அவை எட்டின.

மறுநாள் மாவட்ட ஆட்சியர், தியேட்டர்களை திறப்பதற்கான அனுமதி சான்றுடன் வந்து, சிவாஜியின் சகோதரர் வி.சி.சண்முகத்தை நேரில் சந்தித்துக் கொடுத்தார்.

அதன்பிறகு திறப்புவிழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கத் தொடங்கின. எம்.ஜி.ஆரையே அழைத்து புதிய தியேட்டர்களைத் திறப்பதென முடிவானது.

1984-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் காலை 10.30 மணிக்கு திறப்பு விழா நடந்தது.

அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் (பின்னாளில் குடியரசுத் தலைவர் ஆனவர்) தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். ரிப்பன் வெட்டி சாந்தி-கமலா இரட்டைத் திரையரங்கைத் திறந்துவைத்தார்.

சாந்தி தியேட்டரின் திரைப்படக் கருவியைத் துளசியய்யா வாண்டையாரும், கமலா திரையரங்கின் திரைப்படக் கருவியை ராமானுஜமும் இயக்கி வைத்தார்கள்.

புதிய திரையரங்குகள் திறக்கப்பட்டதும், சாந்தி தியேட்டரில் சிவாஜி கணேசன் நடித்த 'வாழ்க்கை' திரைப்படமும், கமலா தியேட்டரில் பிரபு நடித்த 'நியாயம்' திரைப்படமும் திரையிடப்பட்டன. முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜியுடன் அமர்ந்து 'வாழ்க்கை' திரைப்படத்தைப் பார்ப்பதற்காக சாந்தி தியேட்டருக்குச் சென்றார்.

இருக்கைகளில் இருவரும் அமர்ந்தவுடன் எம்.ஜி.ஆர். நடித்த 'இதயக்கனி' படத்தில் இடம் பெற்ற 'நீங்க நல்லாயிருக்கோணும் நாடு முன்னேற... இந்த நாட்டிலுள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற' என்ற பாடல் காட்சி சில நிமிடங்கள் திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ரசிகர்கள் உற்சாகத்தில் "ஓ..!"என்று ஒருசேரக் குரல் எழுப்பினார்கள். அதன்பிறகு வாழ்க்கை திரைப்படம் திரையிடப்பட்டது.

திரையரங்க திறப்புவிழாவில் நடிகர்கள் மேஜர் சுந்தர்ராஜன் வி.கே. ராமசாமி, விஜயகுமார், நம்பியார், இயக்குனர் பாரதிராஜா, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் மஞ்சுளா, சுஜாதா, மனோரமா என ஏராளமான திரைப்படக் கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.

அவர்களை எல்லாம் எம்.ஜி.ஆர்., "என் தம்பி வீட்டு விழாவுக்கு வந்து இருக்கீங்க. எல்லோரும் சாப்பிட்டு விட்டுத்தான் போகணும். நான் எல்லோருக்கும் பந்தி பரிமாறுவேன்" என்று அன்போடு அழைத்தார்.

சூரக்கோட்டையில் உள்ள சிவாஜி கணேசனுக்கு சொந்தமான பண்ணையில் நண்பகல் சுவையான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தியேட்டர் திறப்பு விழாவில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவரும் அந்த விருந்தில் பங்கேற்றனர். எம்.ஜி.ஆர். நண்பகல் விருந்து முடிந்து நீண்ட நேரம் சிவாஜியோடு உரையாடிவிட்டு அதன் பிறகே சென்னை திரும்பினார்.

WhatsApp channel

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.