54 years of Nam Naadu: 10 நாட்களில் உருவான எம்ஜிஆரின் பிரமாண்ட படம் 'நம் நாடு' ..வெளியான நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  54 Years Of Nam Naadu: 10 நாட்களில் உருவான எம்ஜிஆரின் பிரமாண்ட படம் 'நம் நாடு' ..வெளியான நாள் இன்று!

54 years of Nam Naadu: 10 நாட்களில் உருவான எம்ஜிஆரின் பிரமாண்ட படம் 'நம் நாடு' ..வெளியான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Nov 07, 2023 06:40 AM IST

நம் நாடு திரைப்படத்தில் இடம்பெற்ற 'வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமையா.' பாடல் இப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை ஓர் உற்சாகமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.

நம் நாடு
நம் நாடு

மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. அந்த வகையில், தமிழ்த்திரை உலகில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு தனி முத்திரை பதித்தன எம்ஜிஆர் திரைப்படங்கள். 'மக்கள் திலகம்' என்று எல்லோராலும் போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த திரைப்படங்கள் வெகுஜன மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தன. திரையிலும் அரசியலிலும் மக்கள் அவரை 'வாத்தியார்' ஆகவே பார்த்தார்கள். அப்படித்தான் 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7-ல் வெளியானது 'நம் நாடு'.

எம்ஜிஆர் நடிப்பில் இயக்குனர் ஜம்புலிங்கம் இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தில் எம்ஜிஆர் உடன் ஜெயலலிதா தான் கதாநாயகியாக நடித்திருந்தார். நாகி ரெட்டி தயாரித்த இப்படத்தில் எஸ்.வி.ரங்காராவ், எஸ்.ஏ.அசோகன், கே.ஏ.தங்கவேலு,ஆர்.எஸ்.மனோகர்,தேங்காய் சீனிவாசன், நாகேஷ், என்னடா கண்ணையா, பண்டாரி பாய், குட்டி பத்மினி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

எம்ஜிஆரின் சினிமா பயணத்தில் முக்கிய திரைப்படங்களில் ஒன்றாக 'நம் நாடு' அமைந்தது. தன்னை பற்றி கவலைப்படாமல் தன்னுடன் இருக்கும் மக்களுக்காக போராடுகிறான். அந்த அளவுக்கு நமது அன்றாட வாழ்க்கையோடு ஒட்டிய சம்பவங்களை அழகாக, வரிசைப்படுத்தப்பட்டு சுவையான திரைப்படமாக உருவாகி இருந்தது 'நம் நாடு'.

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. 'நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே', 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன்', 'வாங்கய்யா வாத்தியாரய்யா' போன்ற பாடல்கள் காலத்தை தாண்டி நிற்கும் பாடல்களாக அமைந்தன. கவிஞர் வாலியின் வைர வரிகளில் உருவான 'வாங்கய்யா வாத்தியாரய்யா வரவேற்க வந்தோமையா.' பாடல் இப்போது கேட்டாலும், பார்த்தாலும் நம்மை ஓர் உற்சாகமான மனநிலைக்கு அழைத்துச் செல்லும்.

தனது அரசியல் பயணத்தை திமுகவில் அதிரடியாக தொடங்கினார். கட்சியின் மீது அவர் கொண்ட அளவற்ற பற்றை வாலி தனது பாடலில், சூரியன் உதித்ததுங்க இங்கே காரிருள் மறைஞ்சதுங்க...சரித்திரம் மாறுதுங்க இனிமேல் சரியாப் போகுதுங்க...' போன்ற வரிகளை எழுதி இருந்தார். 1969-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளியான படம் இது. உதயசூரியன் ஆட்சிக்கு வந்ததும் இருள் விலகி விட்டது என்றும் புது சரித்திரம் உருவாகிறது என்றும் இனி எல்லாமே 'சரியாக நடக்கும் என்றும் எழுதியிருப்பார் வாலி. இந்த பாடல் எம்ஜிஆர் புகழை உச்சிக்கு கொண்டு சென்றது. மக்களுக்கு அவரால் நல்லது செய்ய முடியும் என்ற பிம்பம் உருவாக காரணமானது.

'நம் நாடு' திரைப்படத்தின் படப்பிடிப்பு, தயாரிப்பாளர் நாகி ரெட்டியின் விஜயா வாஹினி ஸ்டூடியோஸில்தான் நடைபெற்றது. அந்த ஸ்டூடியோவில் 14 படப்பிடிப்புத் தளங்கள் இருந்தது. அந்த அத்தனை படப்பிடிப்புத் தளங்களிலும் 'நம் நாடு' திரைப்படத்திற்காக செட் போடப்பட்டதாம். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு காலை 9 மணிக்கு தொடங்கினால் அதற்கு அடுத்த நாள் காலை 2 மணி வரை நடைபெறுமாம். பல நாட்கள் ஸ்டூடியோவிலேயே தூங்கிவிடுவாராம் எம்ஜிஆர். அந்த திரைப்படத்தில் எம்ஜிஆர் சம்பந்தப்பட்ட காட்சிகளை எம்ஜிஆரே இயக்கினாராம். எம்ஜிஆர் இல்லாத காட்சிகளை எல்லாம் இயக்குனர் ஜம்பு லிங்கம் படமாக்கினாராம். இவ்வாறு இரவும் பகலுமாக உழைத்து இத்திரைப்படத்தை பத்து நாட்களில் முடித்திருக்கிறார்கள்.

இத்தனை சிறப்புகளுடன் கூடிய 'நம் நாடு' திரைப்படம் வெளியாகி இன்றுடன் 54 ஆண்டுகள் ஆகின்றன. அதாவது 1969ம் ஆண்டு இதே நவம்பர் 7ம் தேதி இந்த படம் ரிலீஸாகியது. கிட்டத்தட்ட, 54 வருடங்களாகிவிட்டன. ஆனால்,நேற்று ரிலீஸானது போல் உள்ளது. எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மக்கள் உள்ளம் எனும் ஊரில் அவர் மறைந்து 36 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட நிலைத்து நின்றுகொண்டு இருக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.