Vaazhai OTT Release : சூப்பர்.. மக்கள் கொண்டாடி தீர்த்த திரைப்படம்.. வெளியானது வாழை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி!
Vaazhai OTT Release: எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய வாழை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இதுவரை இயக்கிய மூன்று படங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இந்த படங்களை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் வாழை. கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இயக்குநர் பாலா பாராட்டு
வாழை படத்தினைப் பார்த்த இயக்குநர் பாலா, மாரி செல்வராஜைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். மேலும் கலங்கிய கண்களுடன் மாரி செல்வராஜின் கரங்களை வெகு நேரம் பற்றிக் கொண்டு, அதன் பின்னர் மாரி செல்வராஜிடம் ஒரே ஒரு வார்த்தை மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் படத்தை மனதாரா பாராட்டினர். இதனால் படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்ததோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது. பல நடிகர்கள் படத்தை பார்த்ததும் வெளியே வந்து மாரி செல்வராஜை ஓடி வந்து கட்டிப்பிடித்து வாழ்த்து கூறினர்.
படம் முழுவதும் நகைச்சுவை காட்சிகளாலும் உண்மைக்கு நெருக்கமான காட்சிகளாலும் ரசிகர்களை தனது கட்டுக்குள் வைத்திருந்த மாரி செல்வராஜ், படத்தின் க்ளைமேக்ஸ் முடிந்து, படத்தின் இறுதி டைட்டில் கார்ட் முடியும் வரை அனைவரையும் இருக்கையிலேயே அமரவைத்திருந்தார் மாரி செல்வராஜ்.
வாழை தார் தூக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை
வாழை தார் தூக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே. சதீஷ் குமார் ஆகியோர் மட்டுமே தெரிந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் இசையில் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளன.
மாரி செல்வராஜ் வலுவான திரைக்கதை, எதார்த்த காட்சி அமைப்புகள் வாழை படத்தை அனைத்து தரப்பினரையும் பார்க்க தூண்டியது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிய இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியது.
வாழை ஓடிடி ரிலீஸ்
எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய வாழை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி படம் வரும் அக்டோபர் 11ஆம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகின்றது என படக்குழு தெரிவித்துள்ளது. இது வாழை படத்தினை திரையரங்கில் பார்க்க முடியாமல் போன ரசிகர்களும் படத்தினை ஓடிடி தளத்தில் பார்த்துக் கொள்ளலாம். மேலும் படம், தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, பெங்காளி, மராத்தி மற்றும் கன்னட மொழிகளில் ஸ்ட்ரீம் ஆகவுள்ளது.
வாழை கதை சர்ச்சை
வாழை படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை ஒட்டி அமைந்திருப்பதாக எழுத்தாளர் சோ தர்மன் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில், “வாழை படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள் என்னுடைய வாழையடி சிறுகதையில் இருக்கும் விஷயங்கள் அப்படியே வாழை படத்தில் இருப்பதாக கூறினார்கள். வாழை படத்தில் உள்ள அனைத்தையுமே நான் என்னுடைய சிறுகதையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். ஆனால், படத்தில் சினிமாவுக்காக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய கதையை மாரி செல்வராஜ் படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவை அப்படியே அதில் இருக்கின்றன. ஆகையால் நான் தான் அதற்கு முழு உரிமையானவன்” என்று பேசினார்.
மாரிசெல்வராஜ் பதிலடி
இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாரிசெல்வராஜ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார்.
டாபிக்ஸ்