Mansoor Ali Khan: அம்மாவின் இறப்புக்கு நீதி..! "இந்த வரேன்டா" - சினிமா ஸ்டைலில் டிடிவி தினகரனை சீண்டிய மன்சூர் அலிகான்
டிடிவி தினகரனை சீண்டி அறிக்கை வெளியிட்டிருக்கும் நடிகர் மன்சூர் அலிகான், அவருக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வரும் மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் அதற்கான ஆயத்த பணிகளை தற்போதே தொடங்கியுள்ளன. இது ஒரு புறம் இருக்க நாடாளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலாளர் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடப்போவதாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"கடந்த 1999இல் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டவண்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒரு லட்சம் வாக்குகள் பெற்றேன். அப்போது தான் டிடிவி தினகரன் முதன்முதலில் தேர்தலில் களம் இறங்கினார். ஜெயலலிதா பெயரால் அவர் வெற்றி பெற்றார்.
ஆனால் அந்த தாயை அவர்கள் எப்படி ஒழித்தார்கள், என்னவெல்லாம் கொடூரம் செய்தார்கள் என்பதை நாடு அறியும்.
நான் ஜெயலலிதா மரணத்தை விசாரித்து வழக்கு போட்டு அனைத்து ஆவணங்கலும் வைத்திருக்கிறேன். டிடிவி தினகரன் குடும்பத்தினர் எத்தனை லட்சம் கோடி ரூபாய் அடித்து உலையில் போட்டார்கள், எப்படி அம்மாவின் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு நயவஞ்சகம் செய்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் இழைத்தார்கள்.
ஆலமராமாகவும், அன்பின் ஆண்டாளாக இருந்த அம்மாவை வேரடி மண்ணோடு நாடகமாடி, ஆளுநர் உள்பட யாரையும் பார்க்கவிடாமல் மாய்த்த கொடூரத்தை எடுத்து சொல்ல மக்களோடு மக்களாக நின்று நான் தோல்வி அடைந்த அதே பெரியகுளம், தேனி மண்ணில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, துரோகிகளை மண்ணை கவ்வ வைப்பேன். இது சத்தியம்.
எந்த கட்சியுடன் கூட்டணி வைத்து வந்தாலும் சரி. இந்தா வரேன்டா"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் லியோ பட சக்சஸ் மீட்டில் நடிகை த்ரிஷா குறித்து பேசிய விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கினார் மன்சூர் அலிகான். இதுதொடர்பாக அவர் வருத்தமும் தெரிவித்தார்.
பின்னர் அவர் நடித்த சரக்கு என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மது பாட்டிலின் கழுத்து பகுதியில் வழக்கறிஞர்கள் அணியும் கழுத்துப்பட்டை இடம்பெற்றிருந்ததற்கு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு படி பட போஸ்டரில் அவை நீக்கப்பட்டது.
இதையடுத்து டிடிவி தினகரனை வம்புக்கு இழுத்து அறிக்கையை வெளியிட்டு நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்