RIP Manoj Bharathiraja: ‘எனக்கு எல்லாமே சினிமா தான்.. இறங்கி வேலை பார்க்க ரெடி’ - மனோஜ் பாரதிராஜாவின் த்ரோபேக் பேட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rip Manoj Bharathiraja: ‘எனக்கு எல்லாமே சினிமா தான்.. இறங்கி வேலை பார்க்க ரெடி’ - மனோஜ் பாரதிராஜாவின் த்ரோபேக் பேட்டி

RIP Manoj Bharathiraja: ‘எனக்கு எல்லாமே சினிமா தான்.. இறங்கி வேலை பார்க்க ரெடி’ - மனோஜ் பாரதிராஜாவின் த்ரோபேக் பேட்டி

Marimuthu M HT Tamil Published Mar 26, 2025 12:11 AM IST
Marimuthu M HT Tamil
Published Mar 26, 2025 12:11 AM IST

RIP Manoj Bharathiraja: நடிகரும் இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். அவரது நம்பிக்கையான பேட்டி, நம்மை நிலைகுலையச் செய்கிறது. அதன் தொகுப்பு:-

RIP Manoj Bharathiraja: ‘எனக்கு எல்லாமே சினிமா தான்.. இறங்கி வேலை பார்க்க ரெடி’ - மனோஜ் பாரதிராஜாவின் த்ரோபேக் பேட்டி
RIP Manoj Bharathiraja: ‘எனக்கு எல்லாமே சினிமா தான்.. இறங்கி வேலை பார்க்க ரெடி’ - மனோஜ் பாரதிராஜாவின் த்ரோபேக் பேட்டி

தாஜ்மஹால், சமுத்திரம், கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம், ஈர நிலம் ஆகியப் படங்களில் நடித்து பலரை ஈர்த்தவர், நடிகர் மனோஜ் பாரதிராஜா. தேனி மாவட்டம், கம்பத்தில் 1976ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் தேதி பிறந்த மனோஜ், திரைத்துறையில் நடிப்பதில் மட்டுமின்றி, இயக்குநர்களான மணிரத்னம், ஷங்கர், தனது தந்தை பாரதிராஜா ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணிபுரிந்தவர்.

’தாஜ் மஹால்’ என்னும் முதல் படத்திலேயே நடிப்பில் துருதுருவென நடித்து மிரட்டியிருப்பார். இப்படத்தில் ’ஈச்சி எலுமிச்சி’ என்னும் பாடலையும் தன் குரலில் பாடி, பலரை ஈர்த்தவர். 90-களில் பிறந்த குழந்தைகள் பலருக்கும் இப்பாடல் இன்றைக்கும் ஃபேவரைட் என்றால் மறுக்கமுடியாது.

‘சாதுர்யன்’ என்னும் படத்தில் தன்னுடன் நடித்த சக நடிகை நந்தனாவை காதலித்து மணம்புரிந்தவர், மனோஜ் பாரதிராஜா. இத்தம்பதியினருக்கு அர்த்திகா மற்றும் மதிவதனி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். சமீபத்தில் மனோஜ் இயக்கிய மார்கழித் திங்கள் படம், 2023ஆம் ஆண்டு, அக்டோபர் 27ஆம் தேதி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பினைப் பெற்றது.

அந்தப் படத்தின் ரிலீஸ் சமயத்தில், இந்தியா கிளிட்ஸ் தமிழ் யூட்யூப் சேனலுக்கு 2023ஆம் ஆண்டு மனோஜ் பாரதிராஜா அளித்த பேட்டி, அவரது நம்பிக்கை மிகுந்த பேச்சு, மனதில் இருக்கும் வைராக்கியம் ஆகியவை அப்படியே மிக யதார்த்தமாக வெளிவந்தன. அந்த த்ரோபேக் பேட்டியை கீழே பகிர்கிறேன்.

மனோஜ் பாரதிராஜா அளித்த பேட்டியில், ‘எனக்கு ஆரம்பத்தில் டைரக்‌ஷனில் தான் ஆர்வம். அதனால் தான், மணிரத்னம் சாரோட ’பம்பாய்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தேன். அதன்பின், அப்பாவின் ஆசைக்காக அமெரிக்கா சென்று நடிப்புப் பயிற்சி படிச்சிட்டு வந்து, நடிக்க வந்தேன்.

’சினிமா தான் எனக்கு எல்லாமே’: மனோஜ் பாரதிராஜா!

என்னுடைய படங்களில் எனக்குப் பிடித்த பாடல்கள் என்றால், ’ஈச்சி எலுமிச்சி’ மற்றும் ’சொல்லாயோ சோலைக்கிளி, முதல்முதலாய் உன்னைப் பார்க்கிறேன் ஒன்று கேட்கிறேன்னு’ வருஷமெல்லாம் வசந்தத்தில் வரும் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தோட கதை சொல்லும்போது எமோஷனலாக இருந்துச்சு.

அதனால் வருஷமெல்லாம் வசந்தம் படம் பண்ண ஒத்துக்கிட்டேன். டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று எல்லாம் பார்க்கலை. இப்பவுமே எனக்கு என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரத்தை மனசில் ஓட்டிப்பார்ப்பேன். அப்படி தான், அந்தப் படம் பண்ணுனேன்.

ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் வரலை. விரக்தி வந்திடுச்சு. நாமாளாகத் தேடி போகவும் முடியாத சூழ்நிலை. சினிமா தான் நமக்கு எல்லாமே. அப்போது எந்திரனில் பணிபுரிய ஒரு வாய்ப்பு கிடைச்சது. ஒரு 8 மாதங்கள், கடைசி உதவி இயக்குநராக, ஷங்கர் சார் டீமில் வொர்க் பண்ணுனேன். அதில் ரஜினி சாருக்கு நான் தான் டூப். கைவெட்டுற சீன், மணலில் ஓடுற சீன் நான் தான் பண்ணுனேன். நான் ஹீரோ, அப்படி இப்படின்னு யோசிச்சு, ஈகோ பார்த்தால் எங்கேயுமே வேலை பார்க்கமுடியாது.

’என் நேசம், பாசம் எல்லாம் சினிமா தான்'- மனோஜ் பாரதிராஜா

சினிமாவில் எந்த துறையில் வேண்டுமென்றாலும் இறங்கிவேலை பார்க்க ரெடி. ஏனென்றால், என் நேசம், பாசம் எல்லாம் சினிமா தான். அப்பாகிட்ட பேசும்போது அவர் எனக்கு சொன்னது என்றால், நம்பிக்கையோடு இரு. கனவுகளைத் துரத்து அப்படின்னு சொல்லியிருக்கார். அதேமாதிரி சினிமாவில் எந்த வொர்க் எடுத்து நீ பண்ணாலும் சின்ஸியராக இரு, ஒழுங்காக உழைச்சுப்பார். உனக்குக் கிடைக்கும்ன்னு சொல்வார். அதுக்காக காத்திருன்னு சொல்லியிருக்கார்.

இந்த உலகத்தில் பிறந்த எல்லாருக்கும் அவன் பிறந்ததுக்கு ஒரு காரணம் இருக்கு. அதை ஒழுங்காக துரத்தினால் அது நிச்சயம் கிடைக்கும். நீ அதை துரத்து. உனக்கு அது வரும்முன்னு சொல்வார்.

அப்பா ரொம்ப ஜாலியானவருங்க. திருச்சிற்றம்பலம் படத்தில் வர்ற மாதிரி தான். கிண்டல்,கேலிக்கு அளவே இருக்காது. பேத்திகளை எல்லாம் ஓட்டுவார். பதிலுக்கு அவங்களும் திருப்பி செம கலாய் கலாய்ச்சுடுவாங்க.

’முரளி சார் எனக்கு அண்ணன் மாதிரிதான்’:மனோஜ் பாரதிராஜா!

முரளி சார் வந்து எனக்கு அண்ணன் மாதிரி தான். சமுத்திரம் படம் பண்ணும்போதும், என்னை இப்படி பண்ணு, அப்படி பண்ணுனு சொல்வார். அதைவிட ‘கடல் பூக்கள்’ படத்தில் நடிக்கும்போது, எனக்கு அவர் நண்பனாக நடிச்சிருப்பார்.

அப்போது தான் நிறைய அனுபவங்களை சொன்னார். அவர் பட்ட கஷ்டங்களைச் சொன்னார். நாம நடிக்கும்போது சீனியர் ஆர்ட்டிஸ்ட் கூட நடிக்கிறோம்ன்னு ஒரு சின்ன பயம் இருக்கும். எல்லாத்தையுமே உடைச்சிவிட்டுட்டார். இரண்டாவது நாளே, பிரதர் மாதிரின்னு சொல்லி, தோளில் தட்டிக்கொடுத்து நடிக்க வைச்சார். நிறைய சொல்லிக்கொடுத்தார். முரளி சாருக்கு அப்படி ஆகியிருக்கக் கூடாது. ரொம்ப நல்ல மனுஷன். அதே மாதிரி தான், சரத் குமார் சாரும்.

’நிறைய இளம் இயக்குநர்கள் பிடிக்கும்’: மனோஜ் பாரதிராஜா!

இப்போது நான் வியந்து பார்க்கிற டைரக்டர்ஸ் என்றால், வெற்றிமாறன் சார், சுசீந்திரன் சார், கார்த்திக் சுப்புராஜ் சார் மற்றும் நிறைய இளம் இயக்குநர்கள். இனிவரக்கூடிய காலங்களில் நடிப்பு மற்றும் இயக்கம் இரண்டு துறையிலும் என்னைப் பார்க்கலாம்.

வீட்டைப் பொறுத்தவரைக்குப் பார்த்தீர்கள் என்றால் பெரிய பொண்ணு அம்மா செல்லம். சின்னப்பொண்ணு என் செல்லம். ரொம்ப சேட்டையும் கூட. பெரியவங்களுக்கு அனிமேஷன் பிடிக்கும். சின்னவங்களுக்கு மியூசிக் பிடிக்கும். நல்லவிதமாக வரணும். பார்ப்போம் கடவுள் என்ன கொடுத்திருக்காரோ’’ என மனோஜ் பாரதிராஜா முடித்திருப்பார்.

ஒரு பெரிய இயக்குநரின் மகனாக இருந்தாலும் தன் சுய முயற்சியில் சினிமாவில் ஒரு பெரிய ஆளாகத் தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருந்த மனோஜ் பாரதிராஜா மறைந்தாலும் அவரது ஆன்மா இன்றும் அவரது படங்களிலும் பாடல்களிலுமே உயிர்ப்புடன் இருக்கும்!

மனோஜ் பாரதிராஜாவின் சில படைப்புகள்:-

Marimuthu M

TwittereMail
ம.மாரிமுத்து, சீஃப் கன்டென்ட் எடிட்டராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடகம் என 11+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, சினிமா, ஜோதிடம், லைஃப்ஸ்டைல், தேசம்-உலகம், கிரிக்கெட் உள்ளிட்டப் பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் கட்டுரைகளை எழுதி வருகிறார். சிவகங்கையிலுள்ள பண்ணை பொறியியல் கல்லூரியில் எம்.இ- ஸ்ட்ரக்சுரல் இன்ஜினியரிங் மற்றும் தென்காசி - புளியங்குடியிலுள்ள எஸ்.வி.சி.பொறியியல் கல்லூரியில் பி.இ - சிவில் இன்ஜினியரிங்கும் படித்திருக்கிறார். விகடன், மின்னம்பலம்,காவேரி நியூஸ் டிவி, நியூஸ்ஜே டிவி, ஈடிவி பாரத் ஆகிய ஊடகங்களைத் தொடர்ந்து 2023 ஆகஸ்ட் முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். விகடனின் தலைசிறந்த மாணவப்பத்திரிகையாளர் 2014-15ஆக விருதுபெற்றவர். இவரது சொந்த ஊர் வடுகபட்டி, தேனி மாவட்டம் ஆகும்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.