என் பொண்டாட்டி ஊருக்கு போய்ருச்சு! மணிரத்னத்தின் 'அக்னி நட்சத்திரம்' Throwback
மணிரத்னத்தின் மாஸ் மசாலா படமாக வெளியாகிய அக்னி நட்சத்திரம் படத்தில் ஆக்ஷன், சென்டிமெண்ட், ரொமான்ஸ் என பல ஜனரஞ்சக விஷயங்கள் இடம்பெற்றிருந்தாலும், அவற்றையெல்லாம் ஒரங்கட்டிவிட்டு ஜனகராஜின் அந்த ஒற்றை வாசனமான "என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சு" நல்ல ரீச் ஆகி இன்று வரையிலும் பேசப்படுகிறது.

மெளன ராகம் ஹிட்டுக்கு பிறகு மணிரத்னம் இயக்க தொடங்கிய படம் அக்னி நட்சத்திரம். ஒரு மாஸ் மசாலா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மணிரத்னத்துக்கு கமலை வைத்து நாயகன் படம் இயக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
அப்போது அக்னி நட்சத்திரம் படத்தை ஓரங்கட்டிவிட்டு நாயகன் படத்தை இயக்கினார். இதைத்தொடர்ந்து பின்னர் மீண்டும் விட்ட இடத்திலிருந்து தொடங்கி முடித்து வெளியிடப்பட்ட இந்த படம் மணிரதனம் இயக்கிய சிறந்த கமர்ஷியல் படம் என்று பெயரெடுத்தது.
இந்த படத்தில் பிரபு - கார்த்திக் மோதிக்கொள்ளும் பேஸ் ஆஃப் காட்சிகள், பிரபு மற்றும் கார்த்திக் ஆகியோரின் க்யூட்டான காதல் காட்சிகள், சென்டிமெண்ட் காட்சிகள் என ஒரு ஜனரஞ்சக படத்துக்கு தேவையான அனைத்து சமாச்சரங்களையும் தனது பாணி ஸ்டைல் காட்சிகளுடன் வைத்திருந்தார் இயக்குநர் மணிரத்னம்.
மிக முக்கியமாக மணிரத்னம் படங்களில் காமெடி என்கிற விஷயம் அறவே இருக்காது, அப்படியே இருந்தாலும் அது கதையோடு இணைந்து பயணிக்கும் விதமாகவே இருக்கும். ஆனால் அக்னி நட்சத்திரம் படத்தில் காமெடிக்கு என தனியாக டிராக் வைத்து அதில் ஜனகராஜ், விகே ராமசாமி ஆகியோரை வைத்து சிரிக்க மட்டுமில்லாமல் ரசிக்கவும் வைத்திருப்பார்.
ஒரு சாமான்ய தொழிலாளி பெண்டாட்டி வீட்டை விட்டு ஊருக்கு போன பின்னரான அந்த தருணத்தில் முகத்தில் சோகத்தையும், மனதில் மகிழ்ச்சியையும் வைத்து கொண்டு அதை எப்படி வெளிப்படுத்துவார் என்கிற காட்சியாக "என் பொண்டாட்டி ஊருக்கு போயிருச்சு" என ஜனகராஜ் உரக்க கத்தி செலிபிரேஷனில் ஈடுபடுவது, ஒவ்வொரு கணவன்மார்களையும் குதூகலமாக்கும் காட்சியாகவே இன்று வரையிலும் அமைந்துள்ளது.
இந்த படத்தின் மற்ற சிறப்பு அம்சங்களில் ஒன்றாக லோ மற்றும் ரிப்லெக்ஸ் லைட்டிங்கில் படமாக்கப்பட்ட விதம், படத்தின் கதாபாத்திரங்கள் டிம்மாக தோன்றினாலும் அதையும் ரசிக்கும் விதமாக அமைத்து புதிய ட்ரெண்டிங்கை உருவாக்கினார்.
இளையராஜா இசையமைத்திருந்த இந்த படம் பாடல்கள் அனைத்தும், அதை படாமாக்கிய விதமும் சிறந்த விருந்தாகவே அமைந்திருந்தது. அனைத்து பாடல்களையும் வாலி எழுத இரண்டு ஹீரோக்களுக்கும் தலா மூன்று பாடல்களை ஒதுக்கி நன்றாக பேலன்ஸ் செய்திருப்பார்.
சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு அமெரிக்கா சென்ற விஜயகுமார், இந்தியாவுக்கு வந்திருந்தபோது அவரிடம் மீண்டும் நடிக்குமாறு மணிரத்னத்தின் அசிஸ்டென்ட் கே சுபாஷ் அப்ரோச் செய்தார். இதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த விஜயகுமார் பின் தனது கதாபாத்தை கேட்டு இம்பிரஸ் ஆகி அக்னி நட்சத்திரம் படம் மூலம் நடிப்புக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தார்.
ஸ்ட்ரோப் ஒளியமைப்பு (Strobes Lighting) எனப்படும் லைட்டுகள் பிளாஷாக மின்னும் விதமாக படமாக்கியிருப்பார் மணிரத்னம். லைட்டுகள் ப்ளாஷ் ஆவதும் ஆஃப் ஆவதுமாக இருக்க, அதிரடியாக சண்டையிட்டு எதிரிகளிடமிருந்து தந்தையை பிரபு மற்றும் கார்த்திக் ஆகியோர் காப்பாற்றும் விதமாக இந்த காட்சி அமைந்திருக்கும். சுமார் 10 நிமிடம் வரை ஓடக்கூடிய, இந்த காட்சிகள் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை தந்தன. படத்தின் முக்கியத்துவமான அந்த காட்சியை நிலையான லைட்டிங் இல்லாமல் டிஸ்கோ போன்று ப்ளாஷ் ஆகும் ஒளி அமைப்பில் துணிச்சலாக படமாக்கி அதில் வெற்றியும் கண்டது மணிரத்னம் - ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் கூட்டணி.
அந்த காலகட்டத்தில் மணிரத்னத்தின் சிறந்த மாஸ் மசாலா படமாக அமைந்திருந்த அக்னி நட்சத்திரம், தமிழ் புத்தாண்டு வெளியீடாக ஏப்ரல் 15, 1988இல் வெளியாகி சுமார் 200 நாள்களுக்கு மேல் பல திரையரங்குகளில் ஓடியது.
அத்தோடு இல்லாமல் இரண்டு பிலிம்பேர், மூன்று தமிழ்நாடு அரசின் விருதுகளையும் வென்றது. இந்த படம் வன்ஷ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக்கப்பட்டு பாலிவுட்டிலும் வெற்றி கண்டது.
மணிரத்னத்தின் மாஸ் மசாலா படமாக இன்றளவும் இருந்து வரும் அக்னி நட்சத்திரம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது. இந்த படத்தில் ஆக்ஷன் இருக்கி, ரொமான்ஸ் இருக்கி, செண்டிமென்ட் இருக்கி என கூறினாலும், சட்டென நினைவுக்கு வரும் விதமாக ஒவ்வொரு கணவன்மார்களின் சார்பாக ஜனகராஜ் பேசும் "என் பெண்டாட்டி ஊருக்கு போயிருச்சு" என்கிற காமெடி இருப்பது என்று சொன்னால் மிகையாகாது.
இந்த வசனத்தை தொடக்க வரிகளாக வைத்து இயக்குநர் செல்வராகவன் - எஸ்ஜே சூர்யா கூட்டணியில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை படத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல் ஒன்றை வைத்திருப்பார். அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனது.

டாபிக்ஸ்