11 years of kadal: மணிரத்தினத்தின் வித்தியாசமான முயற்சியில் கார்த்திக் மகன் நடித்த கடல்!
சந்தர்ப்பம் சூழல்களும் தான் மனிதனை வடிவமைக்கிறது என்ற தத்துவத்தை உள்ளடக்கி அற்புதமான கற்பனையோடு கதையை உருவாக்கி இருந்தாலும் கடல் ரசிகர்களை ஏனோ பெரிதாக கவர தவறி விட்டதோ என தோன்றுகிறது.
பிரபல தமிழ் இயக்குநர் மணிரத்னம் இயக்கி பதினோரு ஆண்டுகள் முன்பு 2013 பிப்ரவரி முதல் தேதி வெளியானது. அந்த சமயத்திலும் சரி.. கடல் திரைப்படம் படம் வருவதற்கு முன் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருந்தது. அது சாதாரண சினிமா ரசிகர்களின் மனநிலை.
ரசிகர்கள் பல்ஸ் கண்டறிந்து திரைக்கதை செய்வதும் அத்தனை எளிதல்ல. தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக் நடித்த படம். அதேபோல் நடிகை ராதாவின் மகள் துளசி. கார்த்திக்கின் மகனும், ராதாவும் மகளும் திரையில் அறிமுகம் என்பது ஒரே படத்தில் அறிமுகம் என்பதும் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இந்த படத்தில் காத்திக்கின் மகன் கவுதம் தாமஸாக நடித்திருந்தார். ஆக்சன் கிங் அர்ஜுன் மீசைக்காரன் பெர்க்மான்சாகவும், அரவிந்த் சாமி சாம் பெர்னாண்டோ வாகவும், லட்சுமி மஞ்சு ஷெலினாகவும் இவர்களோடு பொன்வண்ணன், சிங்கம்புலி ராம்தாஸ், வினோதினி, குருசோம சுந்தரம், கலை ராணி ஆகியோர் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கடல் படத்தின் கதை என்பது கடற்கரை பகுதியில் உள்ள கிராமத்தில் வாழும் எளி மனிதர்கள் அவர்கள் வாழ்வியலை பேசியது. அவர்களில் பெரும்பாலானோர் பின்பற்றும் கிறிஸ்தவ மதத்தையும் பின்னனியாக வைத்துக்கொண்டு எழுதப்பட்ட கதை ஆகும். இதில் எழுத்தாளர் ஜெயமோகனும் உதவி இருக்கிறார்.
எப்போதும் இருட்டான இடங்களில் படத்தை எடுக்கும் இயக்குநர் மணி இந்த படத்தை வெட்டவெளியில் பளிச்சென்று எடுத்திருப்பது ஒரு வித்தியாசம். அதேபோல் ஓரிரு வார்த்தை முடிந்தால் எழுத்துக்களில் வசனம் அமைப்பவர் இதில் வரும் எல்லா கதாபாத்திரங்களும் பக்கம் பக்கமாக வசனங்கள் பேசுவார்கள்.
மகாபாரத கதையின் அடிப்படையில் தளபதி, இராமாயணம் அடிப்படையில் ராவணன் என்று படங்களை இயக்கியவர் இந்த "கடல்" மூலமாக கிறிஸ்தவ மதத்தில் சொல்லப்படும் கடவுள்தேவன் மற்றும் சாத்தானை மனிதர்களுக்கு பொருத்தி கதை சொல்லி இருக்கிறார். கடவுள் பாதையில் பாதர் ஷாம் ஆக அர்விந்த் சாமியும் சாத்தான் ஆகவும், அர்ஜுன் இரு பக்கமும் மாறி மாறி பயணிப்பார் கவுதம். தேவதையாக துளசி இருப்பார்.
முதல் இருவருக்கும் ஆன தொடர்புகள் முரண்பாடு பற்றியும் தாமஸ் ஆக வரும் கவுதமுக்கான உறவுகள், நல்ல வழியில் பயணம் செய்யும் கவுதம் அர்ஜுன் உடன் இணைந்து தவறான வழியில் செல்வதுமாக கதை போகும். சாத்தானின் பிடியில் இருந்து கடவுள் பாதையில் இழுக்க பாதர் ஷாம் முயற்சி செய்து தோற்றுப்போக துளசி என்ற பெண்ணின் வெகுளித்தனமான அன்பு கவுதமை நல்வழிபடுத்தும் வகையில் இருக்கும். ஒற்றை வரியில் சொன்னால் சாத்தானுக்கும் கடவுளுக்குமான போராட்டத்தில் யார் வெற்றி பெற்றனர் என்பது தான் கதை.
இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்திருந்தார். ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் படத்திற்கான மிகப் பெரிய பலம். நாயகன் நாயகியை மிகவும் அற்புதமாக தனது ஒளிப்பதிவு மூலம் செதுக்கியுள்ளார். சிரமமான கடல் காட்சிகள் நம்மை அந்த இடத்துக்கு அழைத்து செல்லும் விதமான ஒளிப்பதிவு செய்துள்ளார். கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது மகன் மதன் கார்க்கி இருவரும் இந்த படத்திற்கான பாடல்கள் எழுதி உள்ளனர். இந்த படம் பல பிரிவுகளில் பலருக்கும் முக்கிய விருதுகளையும் பெற்று தந்தது.
பல நேரங்களில் ஆவேச அலைகளோடு ஆர்ப்பாட்டம் செய்யும் கடல் அமைதியாகவும் மாறி விடும். அதேபோல் தான் மனித மனம். ஒவ்வொரு நல்லவனுக்குள்ளும் கெட்டவன் இருக்கத்தான் செய்வான். கெட்டவனுக்குள்ளும் நல்லவன் இருப்பான். ஆனால் சந்தர்ப்பம் சூழல்களும் தான் மனிதனை வடிவமைக்கிறது என்ற தத்துவத்தை உள்ளடக்கி அற்புதமான கற்பனையோடு கதையை உருவாக்கி இருந்தாலும் கடல் ரசிகர்களை ஏனோ பெரிதாக கவர தவறி விட்டதோ என தோன்றுகிறது.
டாபிக்ஸ்