Actor Booked Sexual Assault: கழிவறையில் வைத்து பாலியல் அத்துமீறல்.. மலையாள ஹீரோ மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு
Actor Booked For Sexual Assault: மலையாள சினிமா நடிகர்களான ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கழிவறையில் வைத்து பாலியல் அத்துமீறல் செய்ததாக கூறி நடிகர் ஜெயசூர்யா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா மற்றும் மணியன்பிள்ளை ராஜு ஆகியோர் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்ததை அடுத்து அவர்கள் மீது கேரளாவில் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜூவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 354 இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எர்ணாகுளத்தைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் ஜெயசூர்யா மீது அதே பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை திருவனந்தபுரத்தில் உள்ள கன்டோன்மென்ட் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பிரபல மலையாள நடிகரும், ஆளும் சிபிஐ எம்எல்ஏவுமான முகேஷ் மீது, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதேபோல் மற்ற குற்றவாளிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருவனந்தபுரம் போலீசார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹோட்டலில் வைத்து நடிகை ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் சித்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 2009ஆம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் நடிகர் அளித்த புகாரின் பேரில் இயக்குனர் ரஞ்சித் மீது ஐபிசி பிரிவு 354 இன் கீழ் முதல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கழிவறையில் அத்துமீறல்
படப்பிடிப்பின் போது கழிவறை சென்று திரும்பியபோது தன்னிடம் பாலியல் துன்புறுத்தலில் நடிகர் ஜெயசூர்யா ஈடுபட்டதாக அளித்ததாக சிறப்பு விசாரணை குழுவிடம் நடிகை ஒருவர் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து அவரிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இதன் அடிப்படையில் 354, 354ஏ, 359 ஆகிர மூன்று பிரிவுகளில் ஜெயசூர்யா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் பதிவு
மலையாள சினிமாவில் பிரபல நடிகராகவும், எம்எல்ஏவாக இருந்து வரும் எம்.முகேஷ், முன்னணி ஹீரோ ஜெயசூர்யா, மணியன்பிள்ளை ராஜு, நடிகர் சங்கத்தில் முக்கிய பங்கு வகித்த சிறிய நடிகரான இடவேலா பாபு ஆகியோர் மீது நடிகை ஒருவர் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த நடிகை தனது ஃபேஸ்புக் பதிவில், "மலையாள திரையுலகில் 1 முகேஷ், 2 மணியன் பிள்ளை ராஜு, 3 இடவேல பாபு, 4 ஜெயசூர்யா, 5 வழக்கறிஞர் சந்திரசேகரன், 6 தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் நோபல் மற்றும் விச்சு ஆகியோரால் நான் அனுபவித்த உடல் மற்றும் வாய்மொழி அத்துமீறல் சம்பவங்கள் பற்றி புகார் அளிக்க இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
"2013ஆம் ஆண்டில், ஒரு படத்தில் பணிபுரியும் போது இந்த நபர்களால் நான் உடல் மற்றும் வாய்மொழி அத்துமீறல்களுக்கு ஆளானேன். நான் ஒத்துழைக்கவும் தொடர்ந்து பணியாற்றவும் முயற்சித்தேன். ஆனால் அவர்களின் அத்துமீறல் தாங்க முடியாததாகிவிட்டது" என நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
முக்கிய புள்ளிகள் ராஜினாமா
கேரளாவில் நீதிபதி கே.ஹேமா கமிட்டி அறிக்கை வெளியானதை அடுத்து, மலையாள சினிமாவை சேர்ந்த பல்வேறு இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து மலையாள திரையுலக பிரபலங்கள் பலருக்கு எதிராக பல எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள நடிகர்கள் சங்கத்தின் (அம்மா) பொதுச்செயலாளரான சித்திக் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என நடிகை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை அடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர், நடிகர் ரஞ்சித் மீது பாலியல் புகார் முன் வைக்கப்பட்டது.
கலாச்சித்ரா அகாடமியின் தலைவராக இருந்து வந்த ரஞ்சித் தனது பதவியை விட்டு விலகினார். தொடர்ந்து பல முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள், பிரபலங்கள் மீது புகார்கள் வந்த வண்ணம் இருந்த நிலையில், மலையாள நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்து வரும் நடிகர் மோகன்லாலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.
நடிகைகளிடம் நடந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றி சங்க தலைவரான மோகன்லாலுக்கு தெரியாதா அல்லது தெரிந்தும் நிர்வாகிகளை காப்பாற்றுகிறாரா என்ற விமர்சனங்களும் எழுந்த நிலையில், மோகன்லால் உட்பட முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கை
கேரளாவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது நீதிபதி ஹேமா குழுவின் அறிக்கை. திரையுலகில் பெண்கள் துன்புறுத்தப்படுவது மற்றும் சுரண்டப்படுவது குறித்த பல நிகழ்வுகளை சுட்டிக்காட்டியது.
மலையாள திரையுலகில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை ஆய்வு செய்து, 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட குழுவான நீதிபதி ஹேமா குழுவினர் அறிக்கையை சமர்பித்தனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையான இது, அரசாங்கத்தாலும், மலையாள திரையுலகினரின் முக்கிய புள்ளிகளாலும் முடக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதையடுத்து தற்போது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டது. கடந்த 19ஆம் தேதி அறிக்கை வெளியான நிலையில், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
குவியும் பாலியல் அத்துமீறல் புகார்கள்
2017ஆம் ஆண்டு நடிகை துன்புறுத்தல் வழக்குக்குபிறகு கேரள அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி ஹேமா கமிட்டி, அதன் அறிக்கையில் மலையாள சினிமா துறையில் பெண்கள் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் சம்பவங்களை வெளிப்படுத்தியது.
பல நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் சுரண்டல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவர்களை விசாரிக்க ஏழு பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைப்பதாக மாநில அரசு ஆகஸ்ட் 25ஆம் தேதி தெரிவித்தது. இதைத்தொடர்ந்து நடிகைகளுக்கு எதிராக நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்