"நான் ராஜா..நான் ராஜா.." சீனாவில் கலக்கும் மகாராஜா.. அதிக வசூல் பெற்ற இந்திய ஹீரோவான விஜய் சேதுபதி
சீன ரசிகர்களை வெகுவாக கவர்ந்த விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் பட்டையை கிளப்பி வருகிறது. அங்கு அதிக வசூல் பெற்றிருக்கும் இந்திய படமாக மாறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய படம் மகாராஜா. த்ரில்லர் படமாக உருவாகியிருந்த மகாராஜா, விஜய் சேதுபதியின் 50வது படமாகும். இதை நித்திலன் சுவாமிநாதன் இயக்கியிருந்தார். படத்தில் விஜய் சேதுபதி நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தியா முழுவதும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த மகாராஜா படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலை பெற்றது.
இந்த படத்தில் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்திருப்பார். நட்ராஜ் சுப்பிரமணி, சிங்கம்புலி, அபிராமி, திவ்யா பாரதி உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
சீனாவில் அதிக வசூலை குவித்த இந்திய படம்
இதைத்தொடர்ந்து மகாராஜா படம் சீனா மொழியில் டப்பிங் செய்யப்பட்டு கடந்த நவம்பர் மாதம் சீனாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. சீன ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அங்கும் நல்ல வசூலை பெற்று வருகிறது. 2018ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான இந்திய படங்களில் அதிக வசூலை பெற்ற படமாக மகாராஜா உள்ளது.
இந்தியாவில் இருக்கும் சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர் யூ ஜிங் மகாராஜா படத்தின் போஸ்டரை பகிர்ந்து தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவில் ரூ. 91.55 கோடி வசூல் செய்திருக்கும் மகாராஜா, 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு அங்கு அதிக வசூலை இந்தியத் திரைப்படமாக மாறியுள்ளது. சிறப்பான விஷயம்" என தம்ப்ஸ் அப் எமோஜிகளுடன் பகிர்ந்துள்ளார்.
அதிக ரேட்டிங் பெற்ற இந்திய படம்
கிழக்கு லடாக்கில் ஏற்பட்ட மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு இந்தியா - சீனா இடையிலான உறவு சீரான நிலையில், அங்கு வெளியான முதல் இந்திய திரைப்படமானது விஜய் சேதுபதியின் மகாராஜா. இதைத்தொடர்ந்து சினிமா டிக்கெட் விற்பனை போர்ட்டலான மாவோயனின் கூற்றுப்படி, நவம்பர் 2024இல் மகாராஜா படம் ரிலீஸ் ஆன முதல் நாளில் சீனா பாக்ஸ் ஆபிஸில் RMB 13.37 மில்லியன் (இந்திய மதிப்பில் ரூ 15.6 கோடி) வசூலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
அதேபோல் படத்தின் வெளியீடு சமயத்தில் சீனத் திரைப்பட விமர்சனத் தளமான டூபனில், மகாராஜா படத்துக்கு 8.7/10 என்ற ரேட்டிங் கொடுக்கப்பட்டது. இதன்மூலம் சமீபத்திய ஆண்டுகளில் அதிக ரேட்டிங் பெற்ற இந்திய படம் என்ற பெருமையும் மகாராஜா பெற்றது.
சீனாவில் வசூலை அள்ளி வரும் மகாராஜா உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்த படமாக மாறியுள்ளது. அத்துடன் விஜய் சேதுபதியின் சினிமா கேரியரில் அதிக வசூலை பெற்ற படமாகவும் உள்ளது.
சீனாவில் இந்திய படங்கள்
பாலிவுட் கான்களின் ஒருவரான அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ் படம் தான் சீன பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளிய இந்திய படம் என்ற பெருமை பெற்றது. அதன் பின்னர் அமீர்கானின் மற்ற ஹிட் படங்களான தங்கல், சீகரெட் சூப்பர் ஸ்டார் ஆகிய படங்களும் அங்கு நல்ல வசூலை குவித்தன.
பாகுபலி சீரிஸ் படங்களும் சீனாவில் வெளியாகி கணிசமான அளவில் வசூலை பெற்றது. இந்த வரிசையில் தமிழில் முதல் படமாக சீனாவில் பட்டையை கிளப்பியிருக்கும் மகாராஜா, அங்கு மட்டும் ரூ. 100 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
டாபிக்ஸ்